Saturday, 18 June 2016

மரணரகசியம்

மரணரகசியம்!!!
மனிதனின் பயணம் மரணத்தை நோக்கியது. நாளும் மரணத்தை நோக்கியே முன்னேறுகிறான். சாலைகள், வழிகள் மரணத்தை நோக்கி அழைத்துச்செல்கின்றன. பயண முடிவில் கிடைக்க இருப்பது மரணப்பரிசு மட்டுமே. எல்லோருடைய பயணமும் அதை நோக்கியே செல்கிறது என்பதே ஒரே ஆறுதல். ஒரே மகிழ்ச்சி. யாருக்கும் விதிவிலக்கு இல்லை. . பயணத்தின் இடைஇடையே நந்தவனங்கள், கடற்கரைகள், மலைமேடுகள், பசுமைத்தாவரங்கள், பறவைகள், உயிரினங்கள் கடந்துபோகின்றன. கண்டுகளிக்கலாம். நின்று இளைபாற முடியாது. நந்தவனங்களை வேடிக்கைப்பார்த்தபடியே பயணமும் நிகழ வேண்டும். வழியில் முள், கல் குத்தும். நொண்டியபடியே நடக்க வேண்டும். ஒருநாளைப்போல் ஒருநாள் இருப்பதில்லை. இன்பமான பொழுதுகள் நீடிப்பதில்லை. துன்பமான பொழுதுகளும் தொடருவதில்லை. எல்லாம் மாறி மாறி வருகின்றன. சிரிப்பு, அழுகை எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆனால் பயணத்தின் முடிவு, மரணம் எனும் முற்றுபுள்ளி. . இந்த பயணம் சற்று வித்தியாசமானது. பயணக்காலம் முடியும் போது, பயணமும் முழுமைப் பெற்றிருக்க வேண்டும். அதுதான் சிறப்பு. பயணத்தையோ, காலத்தையோ நீங்கள் நிறுத்தவோ, நீட்டிக்கவோ முடியாது. என்னால் நடக்க முடியவில்லை என பயணத்தில் இருந்து நீங்களே, உங்களை விடுவித்துக்கொள்ளலாம். அதாவது தற்கொலை வடிவில்…அதற்கான விசாரணைகள் தனி. தவறு செய்தவர், தவறுக்கு தூண்டுகோலாக இருந்தவர், தவறுக்கு காரணமானவர்கள் தண்டனைகள், அபராதங்களை எதிர்கொள்வர். . ”நான் கொஞ்ச தூரம் தான் பயணம் செய்திருக்கிறேன். இன்னும் கொஞ்சக் காலம் கொடுங்கள் பூர்த்திசெய்கிறேன்” என கேட்க முடியாது. அதாவது ”மூணாவது பொண்ணு பத்து வருஷம் கழிச்சி பொறந்தா, அவளுக்கு கல்யானம் முடிச்சிட்டா என் கடமை முடிஞ்சிடும். அதுவரைக்கும் காலஅவகாசம் வேணும்” விண்ணபிக்க இயலாது. அதெல்லாம் இருக்கிறவங்க பார்த்துபார்ப்பாங்க என பயணம், முடிக்கப்படும். . அதனால் பருவத்தே பயிர் செய்ய வேண்டும். கவனத்துடன் பயிர் செய்ய வேண்டும். நீர் பாய்ச்சி, களை எடுத்து, உரம் இட்டு, அறுவடையைக் கண்டுவிட வேண்டும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் மட்டுமே விளைச்சல் அமோகம் பெறும். . முயல் ஆமை கதையில் கடைசியில் ஜெயிக்கும் ஆமையின் பயணமுறைதான், இந்த பயணத்திற்கு உகந்தது. சீக்கிரம் விளம்பரம் அடையணும், பணக்காரனாகணும் அப்படியான இலக்குகளை அட்டைகுப்பை என தூக்கி ஏறியுங்கள். (கவனிக்கவும் புகழ் வேறு விளம்பரம் வேறு. சமூகத்தில் நன்கு விளம்பரம் பெற்றோரை புகழ் பெற்றவர் எனகூறும் பழக்கம் இங்குண்டு.) . பயணம் நிற்காமல் தொடருகிறதா?. தினமும் விறகு வெட்டுகிறீர்களா? விளக்கு எரிகிறதா? தலைமுறைகள் நீடிக்கிறதா? அதுவே பாஸ்மார்க்தான். பயணத்தில் உங்கள் பின்னால் வருவோருக்காக சாலையில் மரம் நட்டீர்களா? எதிர்பார்ப்பில்லாமல் நற்காரியங்கள் புரிந்தீர்களா? . உங்களுக்கு மரியாதையோடு பரிசு வழங்கப்படும். உங்களுக்கு மரணபரிசு வழங்கி, அழைத்துச்செல்ல ஸ்பெஷலாக ஏவல் தேவதைகள் வருவர். மூன்றுநாள்களுக்கு முன்னரே பின்இரவில் வந்து தொடுவர். மரண ரகசியம் பகிர்வர். அதுதானே தேவ ரகசியம். (மூன்றுநாள்களுக்கு முன் கிடைக்கும் இத்தகைய தேவ இரகசியம், கோடியில் ஒருவருக்கு முப்பது வருடத்திற்குமுன் கிடைத்துவிடும். எப்போதும் ஏவல் தேவதைகள் சூழ இருப்பர். ) பணிந்து அழைப்பர். பணிவிடைகள் செய்வர். ஆழ்ந்து உறங்கும் பந்தங்களுக்கு ஆசி வழங்க வாய்ப்பளிப்பர். மூன்றாம் நாள் அதிகாலை அழைத்துச்செல்வர். ஆவி பிரிந்த உயிர்க்கூடு சிரித்த முகமாய் வீற்றிருக்கும். அந்த ஆண்டு அந்தவீட்டில் விவசாயம் செழிக்கும். நற்காரியங்கள் போன்றவை நிகழும். . ஒருவர் மரணரகசியக் குறிப்பு பெற்றவர் என்பதை அவர் மரணம் எய்திய பின்னரே நாம் உணர முடியும். மரண ரகசியக் குறிப்பைப் பெற்றவர்களில் அரிதாய் சிலரே சூசகமாக பதிவு செய்துள்ளனர். நினைவு தடுமாறி நீண்ட நாள் படுக்கை போன்றவை இவர்கள் மரணத்தில் இருக்கவே இருக்காது. மூன்றே நாட்களில் சிறுசிறு மாறுதல்களைப் பெற்று சட்டென மரணத்தைப்பெறுவர். நாளை இருந்தால் வரேன் என நாசூக்காக வார்த்தையை யாரிடமாவது பதிவு செய்வர். யாராவது ஒருவரிடம் நாளை லீவு சொல்லிட்டு வீட்டுக்கு வா ஒரு செய்தி இருக்கு என மறைபொருளாய் தன் மரணத்தைக் குறிப்பிடுவர். சிலர் நீண்ட காலமாக அணிந்திருந்த மோதிரம் போன்ற ஏதாவது ஒன்றை அனிச்சை செயலாக கழற்றி தருவர். மிகுந்த பற்றுகொண்டோரிடம் கோபம் கொள்வர். அது பந்தத்தை அறுப்பதே! அது கோபம் அல்ல! ஆசீர்வாதம். தன் ஆழ்மன ஆற்றலால் சந்தித்து பல ஆண்டுகள் ஆன நண்பரை, உறவினரை இருப்பிடம் நோக்கி தானாக வரும்படி செய்வர். எல்லோரிடமும் குறைந்த உரையாடல் நிகழ்த்துவர். குறைந்த உணவு எடுப்பர். பசி இல்லை என்பர். இதெல்லாம் சில குறிப்புகள்தான்…இப்படி மரணரகசியக் குறிப்பு பெறுபவர்கள் எல்லாம் காவி உடுத்திய சாமியார்கள் என கருதிவிடாதீர்கள். சாமானிய, குடும்பஸ்தர்கள், இல்லத்தரசிகள் தான் அதிகம். . கிருபானந்த வாரியாரிருக்கு மரண அழைப்பு அதிகாலை கிடைத்தது. மரணம் பூமியில் நிகழவில்லை. வானில் நிகழ்ந்தது. விமானத்தில் பறந்தபோது நிகழ்ந்தது. முருகனே மயிலில் வந்து அழைத்துச்சென்றான் என்பதற்கு இதைவிட குறிப்பெதற்கு… . மரணத்தை குறிக்க பல சொற்கள் சமூகம் பயன்படுத்தினாலும் மறைந்தார், மறைவு என்ற சொற்கள் தரும் ஈர்ப்பு எனக்கு பிற சொற்களில் ஏற்படுவதில்லை. ஒரு மனிதன் தோன்றுகிற நாள் முதலே மறைகிற நிகழ்வும் தொடருகிறது. ஒவ்வொரு நாளும் மனிதகூட்டில் பல லட்சம் செல்கள் மடிகின்றன. தோன்றுகின்றன. அதாவது கட்டிடத்தின் செங்கற்கள் வலுவிழந்தவை கலையப்பட்டு புதியவை கட்டமைக்கப்படுக ின்றன. மனிதகூட்டில் நேற்றைய தோற்றம் இன்று இல்லை. நாளும் மைக்ரோ அளவில் மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. . அத்தகைய மாறுதல்களால் உருவம் மாறிக்கொண்டே வந்த ஓர் உயிர்க்கூடு இனி இந்த பூமியில் நிரந்தரமாக மறைந்துபோனது எனும் உண்மை உறைக்கும்போதுதான் இயற்கையிடம் மண்டியிடுகிறான். அந்த உயிர்க்கூட்டை இனி படமாக வரையலாம். சிலையாக வைக்கலாம். உயிராக மீட்டெடுக்க முடியுமா? இனி இல்லை. இதோ கண்ணுக்கு எதிரே மறைந்துபோனது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.