புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான். அவனுக்கு வயது இருபத்தைந்துதான் இருக்கும். அவனது கண்கள் கலங்கியிருந்தன. உடல் சோர்ந்து முகம் மிகவும் துயருற்றிருந்தது.
வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த அக்கணமே கதறி அழுதான். அவன் அழுது முடிக்கும் வரை பொறுத்திருந்த புத்தர் கனிவாகக் கேட்டார்:
“”சகோதரா, ஏன் இப்படிக் கண்ணீர் சிந்துகிறாய்? உனக்கு ஏற்பட்ட பிரச்னையை என்னிடம் சொல். என்னிடம் பகிர்ந்துகொள்வது உன் மனதுக்குச் சற்று ஆறுதலாக இருக்கும்.”
இளைஞன் தயங்கித் தயங்கிச் சொன்னான்:
“”பகவானே, என் வாழ்க்கையில் நான் எல்லையற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறேன். எடுத்த எதிலும் தோல்வி. தாங்க முடியாத துயரம். ஆதரவுக்கென்று எனக்கு யாருமில்லை. என் மனது மிகவும் பலவீனமாகப்போய்விட்டது. நான் எப்படி இந்த உலகத்தில் வாழ்வது. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். நான் உங்களைப் பார்த்து முறையிடத்தான் பல மைல் தூரம் நடந்து வருகிறேன்.”
புத்தர் அன்புடன் புன்னகைத்தார். அவன் தலையை வருடிக் கூர்ந்து பார்த்தார். பிறகு தன் குடிலுக்கு உள்ளே சென்று ஒரு சிறிய குவளையில் தண்ணீரும் கொஞ்சம் உப்பும் கொண்டு வந்தார். எதற்காக புத்தர் உப்பையும் தண்ணீரையும் கொண்டு வருகிறார் என்று புரியாமல் பார்த்தான் இளைஞன்.
புத்தர் அவன் கையில் தண்ணீர்க் குவளையைக் கொடுத்தார். பிறகு உப்பையும் கொடுத்துவிட்டுச் சொன்னார்: “”சகோதரா, இந்தச் சிறு குவளையில் உப்பிட்டுக் கலக்கி அருந்து.”
அவன் உப்பைக் குவளையில் இட்டுக் கலக்கி அருந்திப் பார்த்தான். இரண்டு மிடறு குடிப்பதற்குள் அவன் முகம் கோணியது. மேற்கொண்டு குடிக்க முடியாமல் அப்படியே கீழே வைத்துவிட்டுச்சொன்னான்:
“”என்னால் இந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை பகவானே. மிகவும் கரிக்கிறது.”
“”சரி. முடியவில்லை என்றால் நீ குடிக்க வேண்டாம். விட்டுவிடு” என்ற புத்தர் மீண்டும் தன் குடிலுக்கு உள்ளே சென்று முன்பு கொண்டுவந்த அதே அளவு உப்பைக் கொண்டு வந்து திண்ணையில் வைத்தார்:
“”சகோதரா, நான் உனக்குக் கொஞ்சம் உப்பைக் கொடுத்து அதைக் குவளை நீரில் கலக்கிக் குடிக்கச் சொன்னேன். உன்னால் முடியவில்லை. இதோ இப்போதும் அதே அளவு உப்பைத் தருகிறேன். இதை நீ எதிரில் இருக்கும் அதோ அந்தச் சிறு குளத்தில் கரைத்துவிடு!”
புத்தர் சொன்னபடியே அவன் அந்த உப்பை எதிரிலிருந்த குளத்தில் கரைத்தான். கரையில் நின்று பார்த்த புத்தர் சொன்னார்:
“”இப்போது அந்தக் குளத்து நீரைக் குடித்துப் பார்.”
உப்புக் கரைக்கப்பட்டபோதும் குளத்து நீரில் உப்பின் சுவை கொஞ்சம்கூடத் தெரியவில்லை. அந்த இளைஞன் போதுமான அளவு நீர் குடித்துவிட்டுக் கரைக்கு வந்தான். “”எதற்காக இந்தக் குளத்து நீரில் உப்பைக் கரைத்துக் குடிக்கச் சொன்னீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா” என்று பணிவுடன் கேட்டான்.
புத்தர் புன்னகைத்தார்: “”சகோதரா, வாழ்வில் நாம் எதிர்கொள்கிற துயரங்கள் எல்லாம் உப்பைப்போலத்தான். நம் மனம் இருக்கிறதே அது தண்ணீரைப்போல.”
இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. புத்தரைக் குழப்பத்துடன் பார்த்தான். தொடர்ந்து சொன்னார் புத்தர்:
“”நீ சிறிய குவளையில் இருந்த நீரிலும், பிறகு இந்தக் குளத்து நீரிலும் கரைத்தது ஒரே அளவான உப்புதான். ஆனால் சிறிய குவளையில் தண்ணீர் கொஞ்சம்தான் இருந்தது. அதனால்தான் கரிப்புச் சுவை அதிகமாக இருந்தது. எனவே உன்னால் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. ஆனால் இதே உப்பு குளத்து நீரில் கரைக்கப்பட்டிருந்தாலும், அந்த நீரில் உப்பின் சுவை கொஞ்சம்கூடத் தெரியவில்லை அல்லவா. ஏனென்றால் சிறு குவளையில் இருந்த நீரைவிட எண்ணற்ற மடங்கு அதிகமான நீர் குளத்தில் இருக்கிறது.”
இளைஞன் வேண்டினான்:
“”இந்தச் சிறியவனுக்குப் புரியும் வகையில் இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும் பகவானே!”
“”என் சகோதரா, நம் துன்ப துயரங்கள் என்பவை உப்பைப்போலத்தான். இவை வாழ்க்கை நெடுகிலும் வந்துகொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்கவே முடியாது. ஆனால் நம்மால் நம் மனதை விசாலமாக்க முடியும். இப்போது உன் மனது அந்தச் சிறிய குவளையைப்போல்தான் இருக்கிறது. அதனால்தான் வாழ்க்கைச் சிரமங்கள் உனக்கு இந்தளவு துயரமளிக்கின்றன. நீ நிறைய அறிவும் அனுபவங்களும் பெற்று உன் மனதைப் பெரிதாக்கு. அதை வலுப்படுத்து. அப்போது உன் துயரங்கள் குளத்தில் கரைக்கப்பட்ட உப்பைப்போலக் காணாமல்போய்விடும். அந்தத் தெளிந்த நிலையில்தான் புதிய வழிகள் புலனாகும். அவ்வழிகளில் நீ உயர்வடைவாய்.”
புரிந்துகொண்ட இளைஞன் புத்தரின் பாதங்களைத் தொட்டு வணங்கி மகிழ்ச்சியாகத் திரும்பிச் சென்றான்.
Thursday, 23 June 2016
சிரமங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.