" அபிராமி அந்தாதி*
(பாடல் 36)
பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே
*பொருளே* - பொருட்செல்வமாகித் திகழ்பவளே!
*பொருள் முடிக்கும் போகமே* - அந்தப் பொருட் செல்வத்தால் அடையப்படும் போகங்களாகி நிற்பவளே!
*அரும் போகம் செய்யும் மருளே* - அந்த போகங்களை அனுபவிக்கும் போது ஏற்படும் மயக்கமாகித் திகழ்பவளே!
*மருளில் வரும் தெருளே* - அப்படி மயக்கம் வந்த பின் அதில் இருந்து விடுபடும் வண்ணம் ஏற்படும் தெளிவே!
*என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது* - என் மனதில் என்னை வஞ்சிக்கும் மாயை இருள் ஏதும் இன்றித் திகழும் படி ஒளிவெள்ளமாக உன் அருள் வந்தது. அதன் பெருமையை நான் எப்படி சொல்வது?
*அறிகின்றிலேன்* - சொல்லும் வழி அறியேன்.
*அம்புயாதனத்து அம்பிகையே* - தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அம்பிகையே
***
பெரும்பான்மை
பொருட் செல்வம் கெட்டதன்று. அந்தப் பொருட் செல்வத்தால் உலகில் நன்மை விளைகின்றது. ஆனால் அந்தப் பொருட் செல்வத்தை அந்த நல்ல வழியில் பயன்படுத்துவது எல்லோராலும் இயலாததொன்று. அந்தப் பொருட் செல்வத்தைப் போகத்தின் பால் செலவழிக்கவே எல்லார் மனமும் விழைகிறது. அப்படிப் பெறப்படும் போகங்களும் கெட்டதல்ல. இடைவிடாத மகிழ்வு (ஆனந்தம்) என்பதே எல்லோருடைய குறிக்கோளும். தனக்குள்ளேயே அந்த ஆனந்தம் இருப்பதாக அறிந்தவர் கூறுகின்றார்கள். ஆனால் பெரும்பான்மையினர் அந்த மகிழ்ச்சியைப் போகங்களில் தானே தேடுகிறோம். அந்த போகங்கள் அவைகளாகவே கெட்டவை இல்லை. ஆனால் அவை மருளை ஏற்படுத்துகின்றன. மயக்கத்தில் ஆழ்ந்துவிட்டால் பின்னர் பிழைப்பது அரிது. அன்னையின் அருள் தானே வந்தால் அன்றி அந்தச் சுழலில் அகப்பட்டவர் அகப்பட்டவரே. ஆனால் அதே நேரத்தில் அந்த மயக்கமே அன்னையின் அருளை இழுத்து வருவதற்கும் பல நேரங்களில் காரணமாக இருக்கிறது. கீதையின் முதல் அத்தியாயம் 'அர்ச்சுன விஷாத யோகம் - அருச்சுனனின் மயக்கம் என்ற யோகம்'. அருச்சுனனின் மயக்கம் எப்படி யோகமாக இருக்க முடியும் என்பதற்குப் பெரியவர்கள் சொல்லும் பொருள் இது தான் - அந்த மயக்கம் வந்ததால் தான் அவனால் கண்ணன் சொல்லும் நல்வார்த்தைகளை உணர்ந்து தெளிவு பெற முடிந்தது. அங்கேயும் மயக்கத்தில் இருந்து தெளிவு பிறந்தது. அருணகிரியாரும் போகத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து மயக்கம் உற்று அந்த மயக்கத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள விழைந்த போது தானே முருகனின் அருள் வந்து தெளிவு தந்தது. இப்படி பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அதனால் மயக்கமும் நல்லதே என்பது விளங்கிற்று. அந்த மயக்கத்தில் இருந்து தோன்றும் தெளிவும் நல்லதே. அந்தத் தெளிவு நம் முயற்சியால் ஏற்படுவதன்று. அன்னையின் அருளால் ஏற்படுவது. நல்லவரைக் காப்பதென்னவோ எளிது. ஆனால் கெட்டவரைக் காப்பது தானே பெருமை? மனத்தில் வஞ்சத்து இருள் கொண்டு இருந்த என்னிடம் அந்த இருள் நீங்கி ஒளி வெள்ளமாய்த் திகழும் படி செய்த அன்னையின் அருளையும் அந்த அருளின் பெருமையையும் சொல்லி முடியுமா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.