💕💞💕
💃ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று
தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "
தென்னங்கன்று சொன்னது,
" ஒரு வருஷம் ".
"ஒரு வருஷம்னு சொல்றே , ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா ?" கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது.
தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.
ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது.
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது. தென்னங்கன்றோ எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது.
வாழைக்கன்றை நட்டு ஒரு வருடம் ஆவதற்குள் தென்னங்கன்றைவிட இருமடங்கு உயரமாகி விட்டது. தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை
"கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!
நீ இருக்குற மண்ணில் தான் நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான் எனக்கும் கிடைக்குது. ஆனா பாரு , நான் மட்டும் எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல " என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது. தென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த பதிலும் வரவில்லை.
இன்னும் சிறிது காலம் சென்றது. அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது. அது பூவும் , காய்களுமாக அழகாக மாறியது. அதனுடைய பெருமை இன்னும் அதிகமானது. இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது.
நல்ல உயரம் . பிளவுபடாத அழகிய இலைகள், கம்பீரமான குலை . வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது. இப்போது காய்கள் முற்றின .
ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான். வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான். வாழைக்காய்களைத் தட்டிப் பார்த்தான். தென்னை மரத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை . இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான். முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள , அதன் குலைகளை வெட்டி எடுத்தான். வாழை மரம் கதறியது. அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது. மரண பயம் வந்துவிட்டது. அது பயந்தபடியே அடுத்த காரியம் நடந்தது. ஆம் . வாழைமரம் வெட்டி சாய்க்கப்
பட்டது. ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத் தோலுறிக்கப் பட்டது.
தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது. அதன் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.
ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல?
கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம் , வேகமாகவே காணாமல் போகும்.
" ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது, பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்...
✍படித்ததில் பிடித்தது..✍
💕💞💕
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.