Saturday, 25 June 2016

கடவுள்

🌿 கடவுள் எங்கே இருக்கிறார்? 🌿
Note.. (துவைதம்-நான் வேறு இறைவன் வேறு. அத்வைதம்- நானே இறைவன்)

🌿 கடவுள், பிரபஞ்சத்திற்கு வெளியே சொர்க்கத்தில் எங்கேயோ இருக்கிறார் என்று துவைதம் சொல்கிறது.
நம்முடைய ஆன்மாதான் கடவுள் என்றும், அவர் நமக்கு வெளியே இருக்கிறார் என்று சொல்வது தெய்வநிந்தை என்றும் அத்வைதம் கூறுகிறது.
கடவுள் தனி, நாம் தனி என்ற வாதம் அத்வைதிக்குப் பயங்கரமானதாக இருக்கிறது. அவர் நமக்கு நெருங்கியவற்றுள் எல்லாம் நெருங்கியவராக இருக்கிறார். இந்த நெருக்கத்தை விளக்க, ஒன்றாயிருப்பது என்ற வார்த்தையைத் தவிர, வேறு எந்த வார்த்தையும் எந்த மொழியிலும் இல்லை. வேறு எந்தக் கருத்துமே அத்வைதிக்குத் திருப்தி அளிப்பதில்லை.

துவைதி, அத்வைதக் கருத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறான். அது பெரும் அபச்சாரம் என்று அவன் நினைக்கிறான். துவைதக் கருத்துக்கள் இருந்தேயாக வேண்டும் என்பதை அத்வைதி அறிந்திருக்கிறான். ஆகவே சரியான பாதையில் போகும் துவைதியோடு அவனுக்கு எந்தச் சண்டையும் இல்லை.

துவைதியைப் பொறுத்தவரை அவன் பன்மையைப் பார்த்தாக வேண்டும். அவனுடைய அமைப்பு அது, அவனுடைய நிலை அது. அவன் அப்படியே பார்க்கட்டும். துவைதியின் கொள்கைகள் எப்படி இருந்தாலும், தான் அடைய விரும்பும் அதே குறிக்கோளை நோக்கித்தான் அவனும் போய்க் கொண்டிருக்கிறான் என்பது அத்வைதிக்குத் தெரியும். துவைதியோ தன் கருத்திலிருந்து மாறுபடும் மற்ற எல்லா கருத்துக்களும் தவறானவை என்று கருதுகிறான். இந்த இடத்தில் துவைதியிடமிருந்து அத்வைதி வேறுபடுகிறான்.

உலகிலுள்ள துவைதிகள் அனைவரும் இயல்பாகவே சகுணக் கடவுளை நம்புகின்றனர்.
இந்தக் கடவுள் முற்றிலும் மனிதத் தன்மை கொண்டவராக உள்ளார். மண்ணுலக மன்னரைப்போல் அவர் சிலரை விரும்புகிறார், சிலரை வெறுக்கிறார். தன்னிச்சைப்படி, தனக்குப் பிடித்த மக்கள்மீது, பிடித்த இனத்தின்மீது அருளைப் பொழிகிறார். ஆகவே கடவுளுக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள் என்ற முடிவு, இயல்பாகவே துவைதிக்கு வருகிறது. அந்த வேண்டியவர்களின் பட்டியலில் தானும் சேர அவன் விரும்புகிறான். நாங்கள் கடவுளுக்கு மிகவும் வேண்டியவர்கள். நாங்கள் நம்புவதைப்போல் கடவுளை நம்பினால்தான், அவருக்கு வேண்டியவர்களின் பட்டியலில் உங்களால் இடம் பெற முடியும் என்ற கருத்து, ஏறக்குறைய உலகின் எல்லா மதங்களிலுமே காணப்படுகிறது.

கடவுளின் தயவுக்குப் பாத்திரமாவதற்காக விதிக்கப்பட்ட சிலர் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், மற்றவர்கள் எவ்வளவு தீவிரமாக முயன்றாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள் என்று வற்புறுத்தும் அளவுக்குச் சில துவைதிகள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஏறக்குறைய இத்தகைய கருத்துக்கள் இல்லாத எந்தத் துவைத நெறியையாவது உங்களால் காட்ட முடியுமா? எனவே இயற்கையாகவே துவைத நெறிகள் ஒன்றோடொன்று சண்டை போட்டுத்தான் ஆக வேண்டும்; அதைத்தான் செய்தும் வருகின்றன.

சில விசேஷசலுகைகளைக் காட்டும்போது கல்வியறிவற்றவர்களுக்கு ஒரு கர்வம் வருகிறதே, அந்தக் கர்வத்தை வளர்ப்பதன் மூலம் துவைதிகள் அவர்கள் மனத்தைக் கவர்ந்து விடுகிறார்கள். தங்களுக்குக் கடவுளிடமிருந்து தனிப்பட்ட சலுகைகள் கிடைப்பதாக நினைக்க துவைதிகள் விரும்புகிறார்கள். தண்டிப்பதற்குத் தயாராகக் கையில் கோலை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு கடவுள் இல்லாமல் நாம் நன்னெறியைப் பின்பற்ற முடியாது என்பது அவர்களின் கருத்து.

சிந்தனைத் திறனற்ற மக்கள் பொதுவாக துவைதிகளாகத்தான் இருக்கிறார்கள். பாவம், அவர்கள் பல்லாயிரம் வருடங்களாக ஒவ்வொரு நாட்டிலும் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். ஆகவே தண்டனைப் பயத்திலிருந்து விடுதலை பெறுவதுதான் மோட்சம் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு பாதிரி என்னிடம், என்ன! உங்கள் மதத்தில் சாத்தான் இல்லையா? அது எப்படி முடியும்? என்று கேட்டார்.

துவைதிகளின் தெய்வங்களைத் துளியும் லட்சியம் செய்யாதவர் புத்தர். நாத்திகர், உலோகாயதவாதி என்றெல்லாம் அவர் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் ஓர் ஆட்டிற்காகத் தம்மையே தியாகம் செய்யத்தயாராக இருந்தார். இதுவரை எந்த நாடும் போதித்துள்ளதில் மிகஉயர்ந்த அறநெறிக் கருத்துக்களை அவர் போதித்தார். அறநெறி எங்கிருந்தாலும் அது புத்தர் என்னும் சூரியனிலிருந்து வந்த ஓர் ஒளிக் கிரணம்தான்.

மனித வரலாற்றிலேயே இப்பொழுதுதான் அறிவு வளர்ச்சி, நூறு வருடங்களுக்கு முன் கனவுகூடக் கண்டிருக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்குமுன் கனவுகூடக் கண்டிருக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான அறிவு இன்று வளர்ந்திருக்கிறது. இந்த வேளையில் உலகின் பரந்த இதயங்களைக் குறுகிய எல்லைக்குள் அடைத்து வைத்திருப்பது முடியாத காரியம். மனிதர்களைக் குறுகிய எல்லைக்குள் அடைக்க முயல்வதால் அவர்களை மிருகங்களாக்கி, சிந்திக்கும் திறனற்றவர்களாக்கி இழிவுபடுத்துகிறீர்கள். அவர்களின் அற வாழ்வை அழிக்கிறீர்கள்.

எல்லையற்ற அன்புகொண்ட மிகவுயர்ந்த இதயமும் எல்லையற்ற அறிவுப்பிரகாசமும் இணைந்த சேர்க்கையே இன்று தேவையாக இருக்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.