Wednesday 29 June 2016

அஜத்வாதம்

அன்புள்ள ஓஷோ : ரமணருடைய பிறவியின்மைக் கொள்கையாகிய "அஜத்வாதம்" பற்றி அருள்கூர்ந்து கொஞ்சம் சொல்லுங்கள்.?

ரமணருக்கும்,அவரைப்போன்ற ஞானிகளுக்கும், ஆரம்பம் என்று எதுவும் இல்லை.ஆரம்பம் இல்லாததிற்குப் பிறப்பில்லை.அது என்றும் பிறக்க முடியாது.இது இன்னொரு வகையிலும் சொல்லப்பட்டுள்ளது.என்றும் இறக்காதது மரணமற்றது எதுவோ,அது நித்தியமற்றது.

பிரம்மத்தின் நித்தியத்துவம் பற்றி
நூற்றுக்கணக்கான வரை உரைகள் சொல்லப்பட்டுள்ளன.பிரம்மம்,உச்சநிலை;ஆதியும் அந்தமும் இல்லாதது.பிறக்காமலிருப்பது எதுவோ அதுதான் இறக்காமலிருக்க முடியும்.

பிறக்காதது நித்தியமானது.நித்தியத்திற்குப் பிறப்பில்லை.நித்தியத்துவத்தை ரமணரின் வழியில் இப்படித்தான் சொல்ல முடியும்.

நீங்கள் பிறந்தது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. மற்றவர்கள் குறித்து வைத்துச் சொன்னால் மட்டுமே, இந்த ஆண்டின், இந்த மாதத்தில்,இன்ன தேதியில்,இங்கே பிறந்தீர்கள் என்பது தெரிகிறது.மற்றவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அது.இந்தத் தகவல் இல்லையென்றால் உங்கள் பிறப்பைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியப் போவதில்லை.

உங்களிலிருந்தே, உங்கள் உள்ளார்ந்த அமைப்பில் இருந்தே அதைத் தெரிந்து கொள்ள எந்த வழியும் இல்லை.

உங்கள் பிறப்பை உறுதிப்படுத்திக் கொள்ள, உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை.உங்கள் "உள் இருப்பு" நிரந்தரமானதாக இருந்தால், பிறப்பு பற்றிய பிரச்சினையே எழாது.உண்மையில் நீங்கள் பிறக்கவே இல்லை. நீங்கள் ஆதியும் அந்தமும் அற்ற பரம்பொருள் போல நிரந்தரமானவர்.

ஒரு காலத்தில் இறந்து போவேன் என்று சொல்கிறீர்கள்.அது எப்படி உங்களுக்குத் தெரியும்.?உங்களுக்கு மரணம் என்றால் என்னவென்று தெரியுமா? முன் அனுபவம் உண்டா? இல்லை. மற்றவர் மரணமடைவதைப் பார்த்து, நாமும் செத்து விடுவோம் என்று சொல்கிறீர்கள்.ஒருவன் மரணத்தைப் பார்க்காமலேயே வளர்த்து விட்டால், அவன் தனக்கு மரணம் வரும் என்று சொல்வானா? சொல்லமாட்டான்.

புற நிகழ்ச்சிகளைக் கொண்டு, நீங்கள் ஊகித்துக் கொள்வது அது.அகச்சான்று எதுவும் உங்களிடம் கிடையாது.உங்களுக்கு மரணமுண்டு என்பதை நிலைநிறுத்த நம் உடலில் உள்ளார்ந்த ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால், இதில் அதிசயம் என்னவென்றால், எங்கும் மரணம் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டும் நாம் சாவோம் என்பதை யாரும் நம்புவதில்லை. சாவு மற்றவர்களுக்கு, நமக்கல்ல என்றே நினைக்கிறார்கள்.

உங்கள் உள்ளகம் பிறப்பையும் அறியாது;
மரணத்தையும் அறியாது.அது நிரந்தரமானது. நித்தியமானது.உங்களுக்கு உங்கள் இருப்பு மட்டுமே தெரியும்.

ரமணர் இதைத்தான் கேட்கிறார். "ஊகிக்காதே! உண்மையில் உனக்கு பிறப்பு உண்டா, இறப்பு உண்டா என்று உனக்குள்ளே நீயே தேடிப்பார்! கண்டுபிடி." என்கிறார்.

உனக்குள் ஜனன மரண ஆதாரங்கள் எதுவும் இல்லாதபோது, இருக்கும் ஆதாரம் ஒன்றே ஒன்றுதான்.அதுதான் "நான் இருக்கிறேன்" என்பது.!

நானும் இதைத்தான் சொல்கிறேன். "நான் இருக்கிறேன்" என்பதற்கான ஆதாரம் இருக்கிறது.இதற்குள் ஆழமாகச் சென்று பார்த்தால் "நானில்லை" என்பது தெரியும்.! அப்போதுதான், உமக்குள், "இருத்தல்" என்பது மட்டுமே இருப்பதாகத் தெரியும்.! நான் காணாமல் போய்விடும்.!

--ஓஷோ--

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.