Saturday 25 June 2016

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம் என்பது என்ன?
இறைவன் உருவாக்கி கொடுக்கும் சந்தர்ப்பம்; அவ்வளவுதான்.
கிடைக்கிற சந்தர்ப்பத்தைக் கெட்டியாக பிடித்துக் கொள்பவனையே அதிர்ஷ்டசாலி என்கிறோம்.
சந்தர்ப்பங்களை தேடி அலைகிறவர்கள் பலர்; அது கிடைக்கவில்லை என்று அவர்கள் வாடுவார்கள். அவர்கள் எல்லாம் மதுரைக்கு போவதாக எண்ணிக் கொண்டு சேலம் ரயிலில் ஏறி உட்கார்ந்தவர்கள்!
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்கள் பலர். அவர்களெல்லாம் ரயிலை தவற விட்ட பிரயாணிகள்!
சரியான ரயிலுக்கு சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்தவனே, தான் விரும்பிய ஊருக்குப் போய் சேருகிறான்.
சரியான சந்தர்ப்பத்தைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவனே, தெய்வத்தின் உதவியோடு முன்னேறுகிறான்.
'எந்த நேரத்தில் எதை செய்தால் சரியாயிருக்கும்' என்ற தெளிந்த அறிவு எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை.
உண்மைதான்.
ஆனால் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் எந்தவிதத் தெளிவும் இல்லாதவர்கள்.
வாய்ப்பு கிடைத்ததாலே, முட்டாள் பணக்காரன் ஆனதுண்டு; வாய்ப்பு கிடைக்காததாலே திறமைசாலி தெருவில் அலைந்ததுண்டு.
'இந்த வாய்ப்பு' என்பது இறைவன் காட்டும் பச்சை விளக்கு.
-கவியரசு கண்ணதாசன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.