Wednesday 22 June 2016

அகத்தியர் அருளிய ஆசனங்கள்"

"அகத்தியர் அருளிய ஆசனங்கள்"

ஆசனங்கள் என்பவை உடலும் மனமும் சார்ந்த அறிவின் இயல்.

உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் பேணிப் பாதுகாக்க எண்ணற்ற ஆசனங்களை நமது முன்னோர் நமக்கு அளித்துச் சென்றிருக்கின்றனர்.

அவற்றின் சிறப்பை உணர்ந்து தொடர்ந்து பழகுவோர் உயர்வான எண்ணப் போக்குடனும், பொலிவான உடலோடும் நம் மத்தியில் வாழும் ஆவணங்களாய் இருக்கின்றனர்.

சிறப்பான ஆசனங்கள் பல இருந்தாலும் அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" எனும் நூலில் ஒன்பது ஆசனங்களை முன்னிறுத்துகிறார்.

"சித்தமுடன் நேமவகை பத்துக்கண்டு
தெளிந்துசிவ யோகமது திற்மாய்நிற்க
வெத்தியுள்ள ஆசனந்தா னொன்பதப்பா
விபரமுடன் சொல்லுகிறேன் விரும்பிக்கேளு
பத்தியுள்ள பாதகஸ்தங்கோ முகமும்பத்மம்
பதிவான புஜங்கபத்திரம் முத்ரமொடுவச்சிரம்
முத்தியுள்ள மயூரமொடு சவமதுவுமைந்தா
முதலான நவக்கிரகம் ஒன்பதுஆசனமே."

"ஆசனமாய் நின்றதொரு ஒன்பதையுங்கண்டு
அதிலிருந்து தவசுசிவ யேகாஞ்செய்தால்
பூசணமாய் நின்றிலங்கு மாசனந்தான்மைந்தா
புத்தியுட னாசனமே லிருந்துகொண்டு
வாசனையாய் மனதுகந்து வாசிபார்த்து
மனமகிழ்ந்து சிவயோக நிலையில்நின்று
நேசமுடன் பிரணாயஞ் செய்துகொண்டு
நிச்சயமாய்க் கற்பூர தீபம்பாரே."

அவை முறையே....

பத்மாசனம், பத்திராசனம், கோமுகாசனம், மயூராசனம், புஜங்காசனம், முத்ராசனம், வச்சிராசனம், பாதகஸ்தாசனம், சவாசனம்.

இந்த ஒன்பது ஆசனங்களையும் அறிந்து உணர்ந்து பழகி தவசு மற்றும் சிவயோகம் செய்தால் புருவமத்தியில் கற்பூர தீபம் போன்ற ஒளி தென்படுமாம்.

அந்த ஒளியைத் தரிசித்தால் அனைத்தும் சித்தியாகும் என்கிறார்.

இன்று அகத்தியர் அருளிய முதலாவது ஆசனமான பத்மாசனம் பற்றி பார்ப்போம்.

"பத்மாசனம்"

பத்மம் என்றால் தாமரை.

தாமரையின் இதழ்கள் போல் கால்களை மடித்து வைத்திருப்பதால் இப் பெயர் பெறுகிறது.

நீரிலேயே இருந்தாலும் அதில் முழுகாமல் இருக்கும் தாமரையைப் போல உலக சுகங்களில் முழுகாமல் காப்பாற்றும் ஆசனம் எனவும் பொருள் கொள்ளலாம்.

"உறுதியுள்ள பத்மமதை சொல்லக்கேளு
உண்மையுடன் பாதம்ரெண்டும் துடைமேலேற்றி
சுருதியுடன் கைரெண்டும் முழந்தாள்வைத்து
சுத்தமுடன் தன்னகத்தை சுகமாய்ப்பார்க்க
பரிதியுள்ள பத்மாசன மிதென்று
பதிவான வேதாந்தப் பெரியோரெல்லாம்
வரிதியுடன் யெக்கியமா முனிதான்சொல்ல
மகத்தான ஆசனத்தை மகிழ்ந்தார்காணே."

சமமான தரையில் ஜமக்காளம் போன்ற ஏதாவது ஒரு விரிப்பை மடித்துப் போட்டு உட்கார வேண்டும்.

பிறகு கால்களை நன்றாக நீட்டித் தளர்த்திக் கொள்ள வேண்டும்.

முதலில் வலது காலை இழுத்து மடித்து இடது தொடையின் மீது வைக்க வேண்டும்.

பிறகு அதே போன்று இடது காலை படிய மடித்து வலது தொடையின் மீது வைக்க வேண்டும்.

குதிகால்கள் இரு புறமும் அடி வயிற்றை நன்கு தொட்டுக் கொண்டிருப்பது போல அமைவதுதான் சரியான நிலையாகும்.

முதுகைச் நன்றாக நிமர்த்தி, கை விரல்களைச் சின் முத்திரையில் இரு முழங்கால்களின் மீது நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது கண்கள் மூக்கு நுனியைக் கூர்மையாக நோக்க வேண்டும்.

இந்த நிலையில் சில நிமிட நேரம் இருந்த பிறகு மெதுவாகக் கால்களை விடுவித்து முதலில் இருந்த தளர்வு நிலைக்கு வர வேண்டும்.

இந்த ஆசனத்தில் ஈடுபட்டிருக்கும் போது கவனம் சிதறாமல் பழக வேண்டும்.

துவக்கத்தில் குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

பழகப்பழக இந்த கால அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

தியான நிலைக்கு மிகவும் வசதியான ஆசன முறை இது.

மனதை ஒரு நிலைப் படுத்துவதற்கான பயிற்சிக்கும் இந்த ஆசனம் நல்ல முறையில் பலனைத் தரும்.

நமது நுரையீரலின் இயக்கத்தை ஊக்கப்படுத்தவும், முழங்கால் மூட்டுகள் தொடர்பான பிணிகளை விலக்கவும், தொடைப் பகுதி மற்றும் குதிகால் நரம்புப் பகுதியும் இதனால் வலிவடையும்.

உடலிலும் மனதிலும் சுறுசுறுப்பான உணர்வு மேலாட இது உதவும்.

பத்மாசன முறையில் பயிற்சி பெற்றுவிட்ட பிறகு தரையில் உட்கார வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பத்மாசன அடிப்படையிலேயே அமருவது நல்ல வழக்கமாக இருக்கும்.

இன்று ஜூன்21 "சர்வதேச யோக தினம்"

யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு யோகா அவசியம்"

"இதை அனைவருக்கும் பகிர்வோம்"

"ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.