Wednesday 22 June 2016

காலிக் கோப்பை

காலிக் கோப்பை

நான்சேன் என்பவர் மிகப் பிரபலமான
ஜென் ஞானிகளில் ஒருவர். அவரைப் பற்றி பல கதைகள் கூறப் படுகின்றன. அதில் ஒன்று நான்
உங்களுக்கு பல முறை கூறியிருக்கிறேன். நான் அதை திரும்பக் கூறுகிறேன். ஏனெனில் இது
போன்ற கதைகளை திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் நீங்கள் அதை நன்கு உள்வாங்கிக் கொள்ள
முடியும். அவை உங்களை வளப்படுத்தும். ஒவ்வொருநாளும் நீங்கள் ஊட்டம் பெற வேண்டும்.
நேற்று காலை நான் உணவு சாப்பிட்டு விட்டேன், அதனால் இப்போது எனக்கு உணவு வேண்டாம்
என்று நீங்கள் கூறுவதில்லை. ஒவ்வொரு நாளும் நீங்கள் சாப்பிட்டாக வேண்டும். நேற்று
நான் சாப்பிட்டுவிட்டேன். இப்போது ஏன் சாப்பிடவேண்டும் என்று கேட்பதில்லை.

இந்த வித கதைகள் – இவை உங்களை
வளப்படுத்தும் கதைகள். இந்தியாவில் இவற்றைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஒரு
குறிப்பிட்ட வார்த்தை உண்டு. அதை மொழிமாற்றம் செய்ய முடியாது, ஆங்கிலத்தில் “படிப்பது” என்ற ஒரு வார்த்தை உண்டு. இந்தியாவில் இரண்டு விதமான வார்த்தைகள் உண்டு. ஒன்று படிப்பது, மற்றொன்று படித்ததையே திரும்ப திரும்ப படிப்பது. அதன் ஒரு பாகமாகி விடுவது. ஒவ்வொரு நாளும் காலையில் நீ கீதையை
படிக்கிறாய். அது படிப்பது அல்ல. ஏனெனில் நீ அதை பலமுறை படித்திருக்கிறாய்.
இப்போது அது ஒருவிதமான வளப்படுத்துதல். நீ அதை படிக்கவில்லை. நீ அதை ஒவ்வொரு
நாளும் உண்கிறாய்.

அது ஒரு சிறந்த அனுபவமாகும்.
ஏனெனில் ஒவ்வொரு நாளும் நீ வெவ்வேறு விதமான மனநிலையில் வருவதால் பல்வேறு விதமான
அர்த்தங்கள் புரிகின்றன. அதே புத்தகம், அதே வார்த்தைகள் ஆனால் ஒவ்வொரு நாளும் புது
ஆழத்தை நீ உணர்கிறாய். ஒவ்வொரு நாளும் புதிதான ஏதோ ஒன்றை படிப்பது போன்று நீ
உணர்கிறாய். ஏனெனில் கீதை அல்லது அது போன்ற புத்தகங்களில் ஆழமான உண்மை உண்டு.
அவற்றை ஒருமுறை படித்தால் மேலோட்டமாக இருக்கும், இரண்டாவது, மூன்றாவது தடவை படிக்க
படிக்க ஆழ்ந்து செல்வாய். ஆயிரம் தடவைகள் படித்தபின் அந்த புத்தகங்களை முழுவதுமாக
படிப்பது என்பது சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்வாய். அதிக அளவு கவனமாக,
விழிப்புணர்வுடன் இருக்க இருக்க உனது தன்னுணர்வு ஆழமாகும். இதுதான் இதன் பொருள்.

நான் நான்சேனின் கதையை
திரும்பவும் கூறுகிறேன். ஒரு பேராசிரியர், தத்துவ பேராசிரியர் அவரைக் காண வந்தார்.
தத்துவம் ஒரு நோய், அது கேன்சர் போன்றது. அதற்கு மருந்து கிடையாது, அதை நீ
வெட்டிதான் எறிய வேண்டும். ஒரு பெரிய அளவிலான அறுவை சிகிச்சைதான் செய்தாகவேண்டும்.
தத்துவமும் அப்படிப்பட்ட ஒருவிதமான வளர்ச்சியாகும். ஒருமுறை அது உன்னுள்
வந்துவிட்டால் அது உன்னுடைய சக்திகளை எடுத்துக் கொண்டு அது அதன் போக்கில் வளரும்.
அது ஒட்டுண்ணி. நீ பலவீனமடைந்து கொண்டே போவாய், அது மேலும் மேலும் பலமடைந்து
கொண்டே போகும். ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தையை உருவாக்கும். அது முடிவில்லாமல்
போய்க் கொண்டே இருக்கும்.

ஒரு தத்துவவாதி நான்சேனை காண
வந்தார். நான்சேன் ஒரு சிறிய குன்றின் மேல் வசித்துவந்தார். அவர் மலைஏறி வந்ததால்
மிகவும் வியர்த்து களைத்து வந்தார். அவர் நான்சேனின் குடிசைக்குள் நுழைந்த உடனேயே
உண்மை என்பது என்ன எனக் கேட்டார்.

நான்சேன், உண்மை கொஞ்ச நேரம்
காத்திருக்கலாம், அதற்கு அவசரமில்லை. இப்போது உங்களுக்குத் தேவை ஒரு கோப்பை
டீதான். நீங்கள் மிகவும் களைத்திருக்கிறீர்கள் எனக் கூறி விட்டு டீ தயார் செய்ய
சென்றார். இதை ஒரு ஜென்குருவிடம் மட்டுமே காண முடியும். இந்தியாவில் சங்கராசாரியா
உனக்காக டீ தயார் செய்வது சாத்தியமில்லாதது – உனக்காக, சங்கராசாரியாவா டீ தயார்
செய்வதா, நடக்கவே நடக்காது. அல்லது மகாவீரர் உனக்காக டீ தயார் செய்வது……..
மடத்தனம். ஆனால் ஒரு ஜென்குருவிடம் இது நிகழக் கூடும். அவர்களிடம் வித்தியாசமான
அணுகுமுறை உள்ளது. அவர்கள் வாழ்க்கையை காதலிக்கின்றனர். அவர்கள் வாழ்க்கைக்கு
எதிரி அல்ல. அவர்கள் எளிமையாக வாழலாம், ஆனால் அவர்கள் வாழ்க்கைக்கு
எதிர்மறையானவர்கள் அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். அவர்கள் சாதாரணமாக வாழ்வதுதான்
அசாதாரணமான ஒரு விஷயம் என்று கூறுகிறார்கள். அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை
வாழ்கின்றனர். நான் எளிமையானது என்று கூறும்போது உண்மையான எளிமையைதான்
குறிப்பிடுகிறேன். திணிக்கப்பட்ட எளிமை அல்ல. இந்தியாவில் அப்படிப்பட்ட
திணிக்கப்பட்ட எளிமையை நீ காணலாம். எளிமை திணிக்கப்படுகிறது. அவர்கள் நிர்வாணமாக
இருந்தாலும் முழு நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் எளிமையானவர்களாக இல்லை. அவர்களது
நிர்வாணம் மிகவும் சிக்கலானது. அவர்களது நிர்வாணம் ஒரு குழந்தையினுடைய நிர்வாணம்
போன்றதல்ல. அவர்கள் அதை உருவாக்கிக் கொண்டனர். உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் எப்படி
எளிமையானதாக இருக்கமுடியும், தங்களை அவர்கள் அப்படி வரையறுத்துக் கொண்டுள்ளனர்,
வரையறுத்த ஒரு விஷயம் எப்படி எளிமையானதாக இருக்க முடியும், அது மிகவும்
சிக்கலானது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.