Saturday 28 May 2016

தெளிவு

மனதைப் பேய் என்பார்கள், மதம் கொண்ட யானை என்பார்கள், அடங்காத குதிரை என்பார்கள், மரத்திற்கு மரம் தாவும் குரங்கு என்பார்கள், மாபாரதத்தில் அர்ஜுனன் மனதைக் காற்று என்பான். அதை அடக்க முடியாது என்பான். அதற்குக் கண்ணன் ஒரு விதத்தில் நீ கூறுவது உண்மைதானென்றாலும் பழக்கத்தாலும், வைராக்யத்தாலும், இடைவிடாத கவனத்தாலும் அதைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கு நீ தியானத்தைப் பழகிக் கொள் என்பான். மனதை நாம் வெல்ல வேண்டுமென்றால் மனத் தூண்டல்களையும், ஆசைகளையும் அடக்கியாக வேண்டும். ஆசைகள்தான் மனதைத் தூண்டி, எஜமானனுக்குப் பின்னால் ஓடும் நாய் போலப் புலன்களுக்குப் பின்னால் போகும் படிக்குச் செய்து விடுகின்றன. இதனால் கானல் நீரை உருவாக்கும் புலன்களுக்கும், இன்பத்தைத் தேடி அலையும் மனதிற்கும் இடையே சிக்கிக் கொண்டு ஜீவன் தவியாய் தவிக்கிறது.
புலன்களால் தனக்குத் தானாகவே எதையும் செய்ய முடியாது. அவைகளுக்கு தன்னிச்சை கிடையாது. மனதைக் கட்டுப்படுத்தினால்தான் புலன்கள் கட்டுக்குள் வரும். இன்றைய காலகட்டங்களில் தங்களிடம் தியானம் செய்ய வருகிறவர்களுக்கு தியானம் கற்றுத் தரும் குருமார்கள் முதலில் மனதை வயப்படுத்த, வலுப்படுத்தத் தேவையான பயிற்சிகளைக் கற்றுக் கொடுப்பதில்லை. எடுத்தவுடனேயே தியானம் செய்யக் கற்றுக் கொடுத்து விடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லுவதென்னவென்றால் தியானம் செய்யச் செய்ய மனம் வசப்படும் என்கிறார்கள். அதற்கான விஞ்ஞான விளக்கங்களும் தரப்படுகிறது. ஆனால் நடைமுறையில் அது சாத்தியமாவதில்லை. ஓரளவு மனத் தெளிவு, புத்தி கூர்மை ஏற்படுவது உண்மையென்றாலும், ஆன்மீக மேம்பாட்டுக்கு இத்தகைய தியானங்கள் உதவுவதில்லை. முக்குணமயமான நிலையிலிருந்து மனதை சத்துவமயமாக மாற்றிய பிறகு செய்யப்படும் தியானம்தான் ஆன்ம தரிசனத்துக்கு வழிவகுக்கக் கூடியது.
மனதைக் கட்டுப்படுத்தாமல் புலன்களைக் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு உண்மை ஒழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய் விடுகிறது. மனதில் இருந்து முற்றிலுமாக ஆசைகளைக் களைவதுதான் உண்மையான மெய்யொழுக்கம். ஒரு புறம் தியானம் செய்து கொண்டு, மறுபுறம் அளவிலாத ஆசைகளைப் பெருக்கிக் கொண்டே போகிறவர்களுக்கு மன அமைதி என்பது ஒருபொழுதும் ஏற்படாது. புலன்களைக் கள்ளன் என்பார்கள். இந்தக் கள்ளப் புலன்கள் காவலாளியை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவைகளாக
ும். திறமையான காவலாளி இருந்தாலும் கூட புத்தி கூர்மையுள்ள திருடன் பலவழிகளில் அவனை ஏமாற்றி பொருட்களைக் கவர்ந்து சென்று விடுவது போல, ஒருவன் எவ்வளவுதான் திறமையுடன் புலன்களைக் கட்டுப்படுத்தினாலும், அவை மனதைத் தன்பக்கம் இழுத்து, எவ்வழியிலாவது தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாய் இருக்கின்றன. வெளிக் கதவைதான் மூடி வைத்திருக்கிறோமே என்று உட்கதவுகளைத் திறந்து வைத்தால், திருடன் எளிதாக உள்ளே நுழைந்து விடுவான்.
வெளிக்கதவையும் பூட்டி, உட்கதவையும் பூட்டி விட்டால் பாதுகாப்பு உத்தரவாதமாகி விடுகிறது. அது போலச் சாதகன் வெளிப்புலன்கள் மேல் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதோடு, பார்ப்பவர், பார்க்கப்படுபவர் என்கிற நிலையில் விஷயங்களின் தொடர்ச்சியாகப் பலப்பல எண்ணங்களை உருவாக்கும் நிலையிலிருந்து மனதை விலக்கி அமைதியான சமநிலையிலும், வைராக்கியம் அதாவது துறவு என்கிற பற்றற்ற நிலைகளாலும் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். புலன்கள் இயல்பாகவே எப்பொழுதும் வெளிப்புற இயக்கம் கொண்டவை. அவைகள் மனதில் வெளிப்புற ஆசைகளை, இச்சைகளைத் தூண்டி விடுகின்றன. இதையறியாமல் அறியாமையில் மூழ்கிக் கிடப்பவர்கள் மனதை அவை எப்பொழுதும் வெளிப்புறம் நோக்கியே இழுத்துச் செல்கின்றன. எப்படி ஒரு தேரோட்டி சவுக்கையும், கடிவாளத்தையும் கொண்டு முரட்டுக் குதிரைகளை அடக்குகிறானோ, அது போல விவேத்தையும், வைராக்யத்தையும் கொண்டுதான் புலன்களை வெல்ல முடியும்.
வெளியே செல்லும் மனதைச் செம்மைப்படுத்தி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி, பற்றற்ற நிலையை உருவாக்கினால்தான் புலன்களின் இழுப்புக்கு அவை போகாமல் உள்முகமாகத் திரும்பும். உள்முகமாகத் திரும்புவது என்றால், எப்படிப்பட்ட நிலையில் திரும்ப வேண்டும் ? அமைதியான நிலையில் உள்முகமாகத் திரும்ப வேண்டும். மனம் சஞ்சலத்துடனும், சலனத்துடனும் விளங்கும் நிலையில் உள்முகமாகத் திருப்பப்படும் பொழுது என்ன நிகழும் தெரியுமா ? மனச் சலனத்திற்கும், சஞ்சலத்திற்கும் காரணமாகத் திகழ்கின்ற காரணிகள் வலுப் பெற்று விடுகின்றன. இவை மேலும் அமைதியின்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்துமேயன்றி சாதனையில் மேம்பாடை ஏற்படுத்தாது. மேலும் முன்பை விட அதிகமாகப் புலனிச்சைகள் எழ ஆரம்பித்து விடுகின்றன. எனவே நமக்கு தியானத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்த தெளிவு அவசியமாக இருக்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.