Thursday, 12 May 2016

கடவுள்

கடவுள் இருக்கும்போது நான் ஏன் உங்களோடு வர வேண்டும்?''
சிறுவன் ஒருவன் எப்போதும் கடவுள் சிந்தனையிலேயே இருந்து வந்தான். முற்பிறவியின் பக்தி சிந்தனை இப்போதும் தொடர்ந்தது.
ஒருநாள் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அவ்வழியே வந்த மன்னன், சிறுவனின் முகத்தில் அலாதியான பிரகாசம் தென்படுவதைக் கண்டான்.
அவன் உடம்பில் புழுதி ஒட்டியிருந்ததைக் கண்டு, ""தம்பி! ஏன் இப்படி மண்ணில் விளையாடுகிறாய்?'' என்றான்.
சிறுவனும் தத்துவமாகவே விளக்கம் அளித்தான்.
""இந்த உடலே மண்ணால் ஆனது தானே! என்றாவது ஒருநாள் மண்ணில் சேரத் தான் போகிறது. அதனால் இப்போதே புழுதியானால் என்ன?'' என்றான்.
சிறுவனின் பேச்சைக் கேட்ட மன்னன் மகிழ்ந்தான்.
"நீ என்னுடன் வருகிறாயா?' என்று கேட்டான்.
"என் நிபந்தனைக்கு சம்மதித்தால் வருகிறேன். நான் தூங்கும்போது விழித்திருக்க வேண்டும். நான் சாப்பிட்டாலும் தாங்கள் சாப்பிடக் கூடாது. நான் உடுத்தினாலும், நீங்கள் உடுத்தக் கூடாது. எங்கு சென்றாலும் என்னோடு வரவும் வேண்டும்'' என்றான்.
"ஏனப்பா! நீ சொல்வது யாருக்கும் சாத்தியமில்லையே'' என்றான் மன்னன்.
அதற்கு சிறுவன்,""ஏன் இல்லை! நான் அன்றாடம் தூங்கினாலும், அவர் தூங்க மாட்டார். நான் சாப்பிடுகிறேன். அவர் ஏதும் சாப்பிடுவதில்லை. நான் ஆடை அணிந்தாலும், அவர் அணிவதில்லை. எங்கு சென்றாலும், என்னோடு உடன் வருகிறார். அவரே கடவுள். அவர் இருக்கும்போது நான் ஏன் உங்களோடு வர வேண்டும்?'' என்றான்.
சிறுவனின் ஞானமொழி கேட்ட மன்னன் வாயடைத்து கிளம்பினான்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.