மனிதனுக்கு அழகு கவுரவம்., மனிதனுக்கு இழிவு வறட்டு கவுரவம்…!!!
இன்று, எங்கு பார்த்தாலும் போலித்தனமான கவுரவம்தான் எல்லோரிடமும் காணப்படுகிறது. அதுவும் இன்றைய நாட்களில் எல்லோரும், “பிறர் பார்க்கிறார்கள், அடுத்தவர் என்ன நினைப்பார்கள்?, மற்றவர்கள் நம்மை எப்படி மதிப்பிடுவார்கள்? என்று எண்ணியே வாழ்கிறார்கள். அதனால் அவர்கள், மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் அங்கு வேலை இல்லாமல் போய் விடுகிறது.
கவுரவமாய் வாழ்வது, மனிதனுக்கு அழகு., வறட்டு கவுரவமாய் வாழ்வது, மனிதனுக்கு இழிவு. எனவே, வாலிபா! நான் ஒன்று சொல்கிறேன்.,நல்லதே எண்ணி, நல்லதே செய்து, நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும், நாம் ஒருநாளும் காத்துக் கிடக்க வேண்டியதில்லை. இன்று, இந்த போலி கவுரவம் எல்லா வயதினரிடமும் காணப்படுகிறது.
போலி கவுரவம், மனிதனுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே தானாகவே வந்து விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன், கால்தடுக்கி விழுந்து விடுகிறான். உடனே அவன், யாராவது நம்மை பார்த்து விட்டார்களா? என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்கவில்லையென்பதால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்துவிட்டால், அதுவும் சிரித்துவிட்டால் போச்சு., அசிங்கம், அவமானம்! என கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவதுகூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.
அடுத்து, மாணவர் பருவத்தில், “சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டிவிட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருக்கிறது”- என்கிறான், மாணவன். இது போலி கவுரவத்தின் அறியாப்பருவம். அடுத்ததாக, ஒரு டீச்சர் இவ்வாறு சொல்கிறார்:– “மற்ற டீச்சர்கள் முன்பு என்னை குறைசொல்லாதீங்க சார். என் கவுரவம் என்னாவது?” என்று ஒரு டீச்சரே, தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது என்பது, போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு, தவறுதான்.
அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கவுரவத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று நினைக்க வேண்டும். அது போல, நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது, அதை தூக்கிப் போட்டு விட்டு, வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால், சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக, காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து, வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.
வாலிபா! சாப்பிடாவிட்டால் கூட, சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, “எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்” என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது. அடுத்ததாக, ஒரு வீட்டுக்கு, போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாக. ஆனால் அவர்கள், மற்றவர்கள் நம்மை வேறு மாதிரி நினைத்து விடப்போகிறார்கள் என்று பயப்படுகிறார்கள்.
இப்படியாக, எங்கும், எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால், இளைய தலைமுறையும், இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. “உனக்கு தெரிந்ததைப் பேசு” என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால், சரியாகப் பேசவில்லையென்றால், எல்லோரும் தவறாக நினைப்பார்கள் என்ற சிறுவர்கள் பயப்படுகின்றனர். “யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்” என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான், நாளைய இன்டர்வியூக்களை அவர்கள் வெல்ல முடியும்.
“ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை” என்னும் நிலை ஆபத்தானது.
இந்த போலி கௌரவம், நகரங்களை விட கிராமங்களில், இன்னமும் உயிர் நீக்கும் விஷயமாக இருக்கிறது. அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வது? என்ற நிலைமை இருந்தாலும், சட்டுன்னு ஒரு மணி நேரத்தில் 1,000 ரூபாய்க்கு மொய் செய்வாங்க, நாலு பேருக்கு முன்னால்., நாமும் கௌரவத்த காப்பாத்திட்டோம் என்கிற பெருமிதத்தோட, ஈரத்துணியை வயிற்றிலே கட்டிக்கிட்டு குப்புறப்படுத்துகிட்டு அழுவாங்க. இப்படி போலி கௌரவத்தை காப்பாற்ற வேண்டும் என்று, வாழ்க்கையை தொலைச்சவங்க பலபேர்.
இருக்கிற நிம்மதியை கெடுத்திட்டு, இல்லாத ஒன்றுக்காக வறட்டு கவுரவத்தை, ஜென்ம சனியனா கட்டிக்கிட்டு தூக்கி சுமக்குற எத்தனையோ பேர், வாழ்க்கையை நரகமாக்கிக்கொண்டு, வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வறட்டு கௌரவம் உள்ளதை, உள்ளபடி ஏத்துக்க வைக்காது. நாமே, நம்மை அறியாமல் பண்ணும் தவறை, தவறுன்னு தெரிஞ்சாலும் ஒத்துக்க வைக்காது. பொதிசுமக்கும் கழுதையாக, வறட்டு கௌரவத்தை வாழ்நாள் முழுவதும், சுமக்கவைக்கும். மொத்தத்திலே மனுஷனை, மனுஷனாக வாழ விடாது. கவுரவமாக வாழ்வது, மனிதனுக்கு அழகு., வறட்டு கவுரவமாய் வாழ்வது, மனிதனுக்கு இழிவு. எனவே, வாலிபா! இந்த போலி கவுரவம் உன் வாழ்வில் நுழையாமல் பார்த்துக்கொள்வது😄
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.