கேள்வி ?
கடவுள் நீக்கமற எல்லா இடத்திலும் நிரம்பி இருக்கிறார், நம் உள்ளத்திலும் இருக்கிறார் என்று சொல்றீங்களே, அப்படியானால் அவர் இருப்பது நமக்கு ஏன் தெரியவில்லை?
இராம் மனோகர் - கடவுள் உள்ளத்தில் இருக்கிறார் சரி, உள்ளம் எங்கே இருக்கிறது ?
அது இருக்கிறதா ?
அது எங்கே இருக்கிறது என்று தெரிந்தால்தானே கடவுள் அதிலே இருப்பது நமக்குத் தெரியும்.
நாம் நினைப்பது போல உள்ளம் என்பது நம் இதயமல்ல.
உள்ளம் என்றால் அது சித்தம் அல்லது மனம்.
புத்தி, ஞாபகம், உணர்வு, மனோத்திடம், கற்பனை, சிந்தனை போன்ற நேரடியாக பொருள்களால் பிரதிநிதிப்படுத்தப்படாத கூறுகளாலானது உள்ளம் என்பார்கள்.
உள்ளத்தை தமிழில் மனம் என்றும் சிந்தை, சித்தம் என்று பல பெயர்களில் அழைப்பார்கள்.
உள்ளத்தில் நாம் எதை நினைக்கிறோமோ அதுவாக ஆகிறோம் என்பது வேதவாக்கு.
எல்லா சமயங்களும் இந்த கருத்தை ஏற்றுக் கொள்கின்றன.
ஒருவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன்.
என் மேல் விசுவாசமாக இரு நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன்.
எவன் ஒருவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைக்கிறானோ, நானும் அவனை என் உள்ளத்தில் நினைத்துக் கொள்வேன்.
நீ நினைப்பது எதுவோ அதுவாகவே நீ ஆகிறாய்.
இப்படி ஒரே கருத்தை மாற்றி மாற்றிச் சொல்லிக் கொள்கின்றன.
இதைத்தான் தாயுமானவர் ''சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே'' என்பார்.
ஆக கடவுள் இருக்கிறார் என்ற முழு நம்பிக்கை கொண்டு உள்ளத்தில் நினைத்தால் கடவுளின் இருப்பு நமக்குத் தெரிய வரும்.
மனம் அல்லது உள்ளம் என்பது என்ன ?
அதுவும் கடவுள்தான்.
என்ன குழப்பமாக இருக்கிறதா ?
ஆத்மா நான் என்ற விகாரம் கொண்டு ஜீவாத்மாவாகி, பிறகு சித்தமாகி, பிறகு புத்தியாகி, பிறகு மனமாகிறது என்பது விளக்கம்.
அதாவது எல்லாவற்றிற்கும் காரணமாக விளங்குவது கடவுள்தான்.
ஆனால், உடலில் உள்ள புலன்கள் மற்றும் மூளை வழியாக மனதை காரியப்படுத்துவது நாம்தான்.
ஆத்மா என்பது அதி சூக்குமம், அது சூக்குமமான மனமாக தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.
அந்த சக்தியை புலன்கள் தங்கள் நுகர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.
மனம் என்ற நிலையில் உயிர் சக்தியானது ஆத்மாவில் இருந்து பேதப்பட்டு ஜீவாத்மா என்ற நிலை உருவாகி விடுகிறது.
என்றைக்கு உள்ளம் அதற்கு ஆதாரமான கடவுள் நிலையான ஆத்மாவில் ஒடுங்குகிறதோ, அப்பொழுது ஜீவாத்மா கிடையாது.
காந்தம் ஒன்று இருக்கிறது.
அதற்குப் பக்கத்தில் ஒரு இரும்புத் துண்டை வைத்தால் காந்தமானது இருப்பைத் தன்னை நோக்கி இழுத்துக் கொள்கிறது.
அதே இரும்புத் துண்டை நன்றாக சேற்றில் முக்கி வைத்தோம் என்றால் காந்தம் இரும்பைக் கவருவதில்லை.
அந்தக் காந்தத்திற்கே உரியது இரும்பு, இரும்பைக் தன்னிடம் கவருவதற்குன்றே அமைந்தது காந்தம்.
ஆனால் சேறு மயமான இரும்புக்கும் காந்தத்திற்கும் தொடர்பு இல்லாமல் போய் விடுகிறது.
அது போல மனிதனது உள்ளத்தை கடவுள் தன் இருப்பிடமாகக் கொண்டு இருந்தாலும், உள்ளத்தை கள்ளமெனும் சேறு மறைக்கும் பொழுது கடவுளின் இருப்பு நமக்குப் புலப்படுவதில்லை.
அது போலவே ஒரு கண்ணாடியில் பாதரசத்தை பூசினால் அது சூரியைப் பிரிதிபலிக்கும்.
மூல சூரியனுக்கு நிகரான ஒளி அந்த ரசம் பூசிய கண்ணாடியில் தோன்றும் சூரியனுக்கும் உண்டு.
அதே கண்ணாடியின் மீது சேற்றை அள்ளிப் பூசி விட்டோம் என்றால் சூரியனின் சான்னித்யத்தை அந்தக் கண்ணாடியில் காண முடியாது.
பொய்மையில் மூழ்கிக் கிடக்கின்றவர் உள்ளம் சேறு பூசிய கண்ணாடியைப் போல ஆத்ம்ப் பிரகாசத்திற்குப் பயன்ற்றதாகப் போய் விடுகிறது.
உண்மையை கடைபிடிப்பவன் தன்னுடைய உள்ளத்தில் மட்டுமல்ல இந்த உலகமெங்கிலும் கடவுளைக் காண்பான்.
"வாழ்க வளமுடன்"
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.