Friday 13 May 2016

யோகம்

கற்காலத்தை கடந்து வெகு தூரம் வந்து இப்போது விஞ்ஞான காலத்தில் இருக்கிறோம். இவ்வளவு தொலைவு நாம் கடந்து இன்று இந்த மனித சமுதாயம் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் சென்று ஆராய்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால், அதற்கு அடிப்படையே நம் முன்னோர்களின் ஞானம்தான். இப்போது எவ்வளவோ விஞ்ஞான உபகரணங்களைக் கொண்டு நீங்கள் செய்கிற எவ்வளவோ கடினமான வேலைகளை அவர்கள் அறிவாலும், ஞானத்தாலும் சாதித்தார்கள். ஆனால் அவர்கள் பிற்கால சந்ததியினர் நல்வாழ்வு வாழ வேண்டி சிந்தித்து செயலாற்றினார்கள். இன்றைய நிலையோ வேறு.
ஞானம் என்பது வேறொன்றுமில்லை, அறிவின் முதிர்ச்சியே. அதை அனுபவத்தாலும் அடையலாம், பேராற்றலாகிய பேரறிவோடு இணைவதாலும் அடையலாம். அன்றைய ஞானிகளின் கண்டுபிடிப்புகளின் மேம்பாடே இன்றைய விஞ்ஞான முன்னேற்றம். பண்டைய காலங்களில் ஒரு விஷயத்தை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. இரசவாதம் பொய் என்பார்கள். சரி, உலோகத்தை எப்படி கண்டு பிடித்தார்கள் ? அதன் மூலகங்களில் இருந்து அவற்றை எப்படி பிரித்தெடுத்தார்கள் ? தங்கத்தை எப்படி கண்டு பிடித்தார்கள் ? பாதரசத்தை எப்படி கண்டு பிடித்தார்கள் ? வெறும் தங்கத்தில் செய்யும் ஆபரணம் வலிமையாக இருக்காது, செம்பு கலந்து செய்ய வேண்டும் என்று எவ்வாறு அறிந்தார்கள் ? வான சாஸ்திரம் எப்படி எழுதினார்கள் ? கிரகங்களைப் பற்றி எவ்வாறு அறிந்து கொள்ள முடிந்தது ? இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால் விடை ஒன்று தான். அதுதான் ஞானம்.
கிரியையான செயலுக்கும் ஞானத்துக்கும் இடையே விளங்குவது யோகம் என்ற நிலை. இதை ரிஷிகளும், சித்தர்களும் 64 வகையாகத் தந்திருக்கிறார்கள். யோகம் எதுவானாலும் அதன் இலக்கும், அந்தப் பயணத்தின் நிறைவும் ஒன்றுதான் என்பதில் சந்தேகம் இல்லை. பலவகையான யோகங்கள் இருந்தாலும், நாம் அறிந்து கொண்ட சில யோகங்களைப் பற்றி பார்ப்போம். இந்த யோகங்களை அனுபவம் வாய்ந்த குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
அவை கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், அஷ்டாங்கயோகம், மந்திரயோகம், லயயோகம், ஹடயோகம், இராஜயோகம், குண்டலினியோகம் என்பவைகளே.
யோகம் என்கிறபோது எல்லா யோக நூல்களும், ஆன்மிக நூல்களும் போற்றும் யோகம் குண்டலினி யோகம்தான். மூலாதாரத்தில் உறையும் குண்டலினி சக்தியை சிரசிற்கு ஏற்றி அதன் மூலம் சித்திகளைப் பெற்று, மெய்ஞானம் அடைவதே குண்டலினி யோகம். இந்த யோகம் கடினமானதாகும். குருவருள் பெற்று இந்த யோகத்தை கைகொண்டு மேன்மையடையலாம். மற்ற யோகங்களை குருவின் ஆசியால் கற்றுக் கொண்டு, முயற்சியால் மேன்மையடையலாம். குண்டலினி யோகத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு நிலையிலும் குருவின் அருகாமை அவசியமாகும். ஒரே நாளில் குண்டலினியானது மேலே ஏறிவிடாது. ஒவ்வொரு ஆதாரமாகக் கடந்து பயிற்சியை குருவின் துணையால் மேம்படுத்தி வெற்றி பெற வேண்டும்.
கர்மயோகம் - கடமையைச் செய் பலனை எதிர் பாராதே. இது கர்மயோகத்தின் அடிப்படைத் தத்துவம். நவீன ஆன்மிகவாதிகள் கடமையைச் செய் பலனை எதிர்பார் என்பார்கள். ஆனால் அந்த பலனால் துன்பப்பட்டு கலங்கித் தவிப்பார்கள். இது வெட்ட வெளிச்சம். பலனை எதிர் பாராமல் கடமையைச் செய்து கொண்டு, அந்த பலனை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து 'உனக்கே சமர்ப்பணம்'' என்று வாழ்வதே கர்மயோகம். பலனை எதிர்பார்க்கும் போது அது கர்மாயோகம். இறைவன் மேல் பரிபூரணமாக நம்பிக்கை வைத்து எல்லா செயல்களையும் அதன் பலன்களையும் அவனுக்கே அர்ப்பணித்து வாழ்வதால் கர்மயோகியின் மனமானது சலனமற்று, பயமற்று, பற்றற்று மாறிவிடுகிறது. எனவே கர்மயோகிக்கு இறைவனே முக்தியளிப்பார் என்பதில் ஐயமில்லை.
பக்தியோகம் - இறைவன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர்களுக்கு வேறு எதுவும் பெரிதாகத் தோன்றாது. அந்த பக்தியில் திளைக்க திளைக்க அது ஆழமாகி, நான், எனது என்ற நிலை மாறி இறை உணர்வு மட்டுமே எஞ்சி நிற்கும். மற்றவர்களுக்கு அது மனநோயாகத் தோன்றும். ஆனால் அது எல்லா உணர்வுகளையும் கடந்த பக்தி நிலை. பெற்ற பிள்ளையையே சமைத்துத் தருவது என்பது நம்மால், அதுவும் இன்றைய நவீன காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத கொடூரமான செயல் என்போம். ஆனால் அவர்கள் நிலை வேறு. எனவேதான் இறைவனே நேரில் வந்து ஆட்கொள்ளும் பேற்றினை பெற முடிந்தது. தன் கண்ணை பிடுங்கி லிங்கத்திற்கு வைப்பதை நாம் பைத்தியக் காரத்தனம் என்போம். ஆனால் அவரின் உச்சகட்டமான பக்தி அதைச் செய்தது. விளைவு இறைவனே நேரில் தோன்றி தடுத்தாட்கொள்கிறார். இதை பட்டினத்தார் கூட என்னால் இப்படி எல்லாம் செய்ய முடியாதே என்று புலம்பி அழுகிறார்.
''வாளால் மகவரிந்து ஊட்டவல் லேன்அல்லன் மாதுசொன்ன
சூளால் இளமை துறக்கவல் லேன்அல்லன் தொண்டுசெய்து
நாளாறில் கண்இடந்து அப்பவல் லேன்அல்லன் நான்இனிச்சென்று
ஆளா வதுஎப் படியோதிருக் காளத்தி அப்பருக்கே ?''
எனவே இந்த பக்தியோகத்தைப் பொறுத்தவரை நான் என்ற எண்ணம் நீங்கி இறைவனோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதே யோகமாகும். அந்த நிலையில் உள்ளவர்களுக்கு இறைவனே முக்தியளிப்பார்.
ஞானயோகம் - எதுவும் இங்கு நிரந்தரமானதல்ல. பரம் ஒன்றே நிலையானது, நிரந்தரமானது. நம் ஜீவாத்மாவாய் விளங்குவது அந்தப் பரமாத்மாவே என்பதை உணர்வதே ஞானம். உணர்வது என்று குறிப்பிடுவது பேதங்களற்ற நிலையை. எல்லாம் பரமே என்பது ஞானமாகி புத்தியில் பதியும் போது உலகைக் காணும் பரிமாணமே மாறிவிடும். இதையே விதேக முக்தி என்று ஞானிகள் போற்றிக் கூறுவார்கள். இதுவே ஞானயோகம்.
அஷ்டாங்கயோகம் - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரனை, தியானம், சமாதி அதாவது தீயதை விலக்குதல், நன்மையை ஏற்றுக்கொள்தல், முறையாக அமருதல், மூச்சை ஒழுங்குபடுத்துதல், ஆற்றலை ஒன்றுபடுத்துதல், சக்திகளை வலிமையடையச் செய்தல், மனதை ஒருமுகப்படுத்துதல், பேராற்றலோடு ஒன்றி, பேரின்பம் அடைதல் என்கிற எட்டு வகையான பயிற்சிகளையும் குருவின் அருளோடு கடைபிடிப்பவன் யாராக இருந்தாலும் இறைநிலையை அடைவான். இந்த உட்டு அங்கங்களையே அஷ்டாங்க யோகம் என்பர். இந்த யோகத்திற்கு மந்திரம், தந்திரம், யந்திரம் போன்றவைகள் உதவுகின்றன.
மந்திரயோகம் - மனதை திறனுடையதாக ஆக்குவதால் மந்திரம். தன்னை உச்சரிப்பவனுக்குக் காப்பாக இருப்பதாலும் அக்ஷரங்களுக்கு மந்திரம் என்று பெயர். சொல்லின் வலிமையால் இறைவனை அடைவது மந்திரயோகம். குறிப்பிட்ட சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்ல, அந்த சொல்லே இறைநிலை அடைய வழியாகிவிடுகிறது. இதுவே மந்திரயோகம்.
லயயோகம் - லயம் என்றால் ஒடுங்குதல். ஒலிகளில் தன்மனதை ஒடுக்கிக் கொண்டால் அந்த ஒலியானது நம் மனதை தன்னோடு இணைத்துக் கொள்கிறது. அந்த ஒலியே மெய்ஞானத்தை வழங்கும் குருவாக, இறைவனாக இருக்கிறது. கீர்த்தனைகளும், ஆலாபனைகளும், வாத்திய இசைகளும் அதை வேண்டுகிற ஜீவன்களுக்கு ஒடுக்கத்தை ஏற்படுத்தி தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது. இப்படி இடைவிடாது லயப்பட்ட ஜீவன் முடிவில் நாதபிரம்மத்தோடு ஒன்றிவிடுகிறது.
ஹடயோகம் - அஷ்டாங்கமார்க்க
ங்களாலும், தசமுத்திரைகளாலும், கேவலகும்பகத்தினாலும் வாயுவை வசப்படித்தி, மனதை ஒருநிலைப்படுத்தும் யோகம் ஹடயோகம். இந்த யோகத்தினால் எல்லா விதமான மலக் குற்றங்களும் நீங்குகின்றன. தக்க குருவின் துணை அவசியம். ஏனென்றால் வாயுவை வசப்படுத்தி, மனதை கட்டுப்படுத்தும் யோகம். எனவே உயிருக்கு ஏதேனும் துன்பம் நேர வாய்ப்பு உண்டு. இந்த யோகத்தில் அகஸ்திய பெருமான் தலைசிறந்த வல்லுனர். எனவே அவரை சரண்டைந்தால் தக்க குருவை அடையாளம் காட்டுவார்.
இராஜயோகம் - இந்த யோகத்தினால் அஷ்டமகா சித்திகளும் கைகூடும். மனம் அழியும். ஞானம் விளங்கும். மானிட தேகத்தில் உறையும் ஜலவடிவிலான சக்தி தத்துவத்தையும், சிவதத்துவத்தையு
ம் இணைப்பதே இராஜயோகப் பயிற்சியாகும். சிவசக்தி ஐக்கியத்தால் முக்தி நிலை ஏற்படுகிறது.
மந்திரயோகம், லயயோகம், ஹடயோகம், இராஜயோகம் போன்ற யோகங்களில் பிராணனும், அபானனும்ஒன்று சேர வேண்டும் என்பதே தத்துவமாகும். மலக் காற்று என்று ஒதுக்கப்படும் அபானனும் அற்புதமான சக்தியே என்பதை உணரவைப்பது இந்த யோகங்களே. யோகங்களைப் பார்த்தோம். இனி குருவை எங்கே போய் தேடுவது? எந்த இறைவனைத் தேடிப் போகிறோமோ, அவரே நமக்கு வழிகாட்டியாய், குருவாய் வருவார் என்று உணர்பவனே மெய்ஞானி.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.