Friday, 6 May 2016

ஆன்மா

ஆன்மா எல்லா உயிர்களையும் இயக்குகின்றதா ? பேசும் சக்தி பெற்ற மனித உயிர்களை அதுதான் வழிநடத்துகிறதா ? அதுதான் ஆறாம் அறிவா ? ஆன்மா என்பதுதான் உயிரா ? அது மனிதரை ஆள்கின்றதா? என்பது போன்ற கேள்விகள் நம்முள் அடுக்கடுக்காக எழுகின்றதல்லவா !!உண்மையில் ஆன்மா என்பது , மனிதனை ஆள்வதோ , இயக்குவதோ , வழிகாட்டியோ, மனிதனின் ஆறாம் அறிவோஇல்லை .அப்படியென்றால் பின் என்ன ?மனிதர்களை இயக்குவது மனிதனின் மனம், ஆன்மா மனிதரை இயக்குவதாக இருந்தால் மனிதரிடம் தவறுகளோ,தோல்வியோ என்றுமே காண முடியாது.மனிதரை வழி நடத்துவது அவனுடைய எண்ணங்களும் ,அவனின் கேள்வி ஞானமும் தான் . மனிதன் ஆன்மாவின் வழிகாட்டுதலில் பயணித்தால் தவறான பாதையில் செல்லும் வாய்ப்பு எந்நாளும் மனிதருக்கு ஏற்பட்டிருக்காத
ு .மனிதனின் ஆறாம் அறிவாக ஆன்மா இருக்க எள்முனையளவும் வாய்ப்பில்லை .காரணம் , உலகின் எல்லா உயிருக்குள்ளும் ஆன்மா இருகின்றது. ஆனால் , பலவிதமான மிருக , பறவை இனங்களின் இனப்பெருக்க உறவுகள் மனிதனின் வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக இருக்கின்றது.ஆன்மா என்பது உயிரல்ல என்பதில் மாற்றுக் கருத்தில்லை , ஏனெனில் உயிர் என்பது இந்த உடலோடு சம்பந்தப்பட்டது , ஆனால் ஆன்மா நம் பிறப்போடு தொடர்புடையது. நமது எந்த பாபமும் புண்ணியமும் ஆன்மாவை பாதிப்பதில்லை , ஆனால் உயிர் சம்பந்தமான இந்த உடலையும் மனதையும் மிகவும் பாதிக்கச் செய்கிறது.அப்படியானால் என்னதான் இந்த ஆன்மா என்பது ?ஆன்மா இந்நிலையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது.நமது ஒவ்வொரு அசைவையும் முழுமையாக கவனித்து , நமது சொல்லோ, செயலோ , கவனமோ , சிந்தையோ தடம் மாறும் போது உள்ளிருந்து மிக பலவீனமான குரலில் நம்மை எச்சரிக்குமே ஒரு முனகல் குரல், ஞாபகம் இருக்கிறதா ? அது நமது ஆன்மாவின் குரல்தான் .மிரட்டும் தொனியில் இல்லாமல் கெஞ்சலிலும் கீழே மிக மெல்லியதாக நம்மை வேண்டாம் என்று தடுக்குமே அந்த குரல் நமது ஆன்மாவின் குரல்தான் .சாதிக்க பிறந்தவன் நீ ஆனால் இப்படி உன்னை நீயே அழித்துக் கொள்கின்றாயே என்று எங்கோ தொலைவிலிருந்து யாரோ சொல்வதாக ஒரு குரல் நம் காதில் ஒலிக்குமே அது நமது ஆன்மாவின் குரல்தான்.வெற்றியின் வித்தான நீ , தோல்வியின் மொத்த சொத்தாகி போகின்றாயே என ஈனஸ்வரத்தில் ஒரு ஓசை கேட்கின்றதே ! நமது மனதின் உள்ளே, அந்த ஒலியின் உரிமையாளன் நமது ஆன்மாதான்.நாம் தவறிழைக்க துணிந்திடும் ஒவ்வொரு சமயமும் கொஞ்சமும் சலிப்பின்றி வேண்டாம் வேண்டாமென்று நம்மை காலில் விழாத குறையாக நம்மை காப்பாற்ற கதறுகின்றதே அந்த குரல் நமது ஆன்மாவின் குரல்தான்.ஆன்மீக வாசல் திறந்திருக்க , அபாய வாசலை நோக்கி பயணிக்கின்றாயே என்று நல்ல பாதையை நமக்கு காட்டி, நமது கையை பிடித்து நல்வழி செல்ல அழைக்கின்றதே அந்தக்குரல் நமது ஆன்மாவின் அன்புகுரல்தான்.
இப்பிறப்பில் ஆன்ம உயிர்ப்பு இல்லாதபோது வரும் பிறப்பிலாவது நாம் இறையுணர்வில் ஆழ்ந்திட நம்மை விடாமல் பற்றிக் கொண்டு நம்மோடு ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்ந்து நம்மோடு பயணிக்கும் உற்ற துணை யார் தெரியுமா ? நமது ஆன்மாதான்.ஆன்மீக நெறியில் ஆழ்ந்து போகும் அன்பர்களுக்கு அவர்கள் யார் என்று உணர்த்தி , முற்பிறப்பில் யாராக இருந்து இறந்தோம் , இப்பிறப்பில் எதற்காக பிறந்து வளர்ந்தோம் என உணர்த்துகின்றதே ஒரு தெய்வீக ஒளி அது நமது ஆன்மாவின் ஒளிதான்.தவ , யோக , த்யான , நியம நிஷ்டையில் மூழ்கி திளைக்கையில் , உள்ளிருந்து ஆனந்த பேரலையாக எழுந்து , உடல் முழுவதும் பரவி , மனமும் , உடலும் காணாமல் போய் , காயமே இது பொய்யடா என மெய்ப்பித்து, இறைவா , இறைவா என்ன இந்த இன்பநிலை ! மானிட பிறப்பில் இப்படியும் அதிசயமா , எனக்கா , இது நானா , என்னாலும் இது சாத்தியமா என ஆனந்த பித்தனாக்கி நம்மை நமக்கு அடையாளம்காட்டப்பட உதவுகிறதே அதன் உள்ளார்ந்த வித்து நமது ஆன்மாதான்.அடையாளம் காட்டப்பட்ட மனிதன் தன்னுணர்வை அடைந்து இனியும் தாமதிக்காமல் இறைவழியில் நடந்து இறைவனின் பதம் நாட வேண்டும் என எண்ணி துதித்து , மனமுருகி , மெய்யொன்றி அதன் வழி செல்ல முற்படும் போது ஒரு புத்தம்புது பூவை கையிலெடுப்பதுபோல் நம்மை எடுத்து இறைவழியில் நாம் செல்லுவதற்கு இறுதிவரை உடன் வரும் துணை யார் தெரியுமா ? நமது ஆன்மாதான்.இப்போது தெரிகிறதா ?ஆன்மாவின் வேலையென்ன என்று !!!!!உங்கள் ஆன்மா சொல்வதை கேளுங்கள் , அன்பு வழி செல்லுங்கள் .பேரானந்த அலையில் ஆடுங்கள் , பேரின்ப அற்புதங்களை கண்டு உணருங்கள்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.