Friday, 13 May 2016

குறை கூறாதே

"பிறரைத் திருத்த முடியவில்லை என்றால்,
அவர் மீது குறை கூறாதே'' என்கிறார் அன்னை.
மேல்நாட்டு மனநூல் (psycology) துறையில் ஒரு வாசகம் உண்டு. "உனக்கு ஒருவரைப் பற்றித் தெரிய வேண்டுமானால், அவரைத் தூண்டி பிறரைக் குறை கூறச் சொல். பிறர் மீது அவர் கூறும் எல்லாக் குறைகளும் அவரிடம் இருக்கும்''.
நம்மிடம் உள்ள குறைகள் நம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் உண்மையிலேயே, நம் குறைகளை - நமக்குத் தெரியாதவற்றை - நாம் விரும்புவது இல்லை; வெறுப்பதும் உண்டு.
பிறரிடம் நம் குறைகளைக் கண்டவுடன் நம் வெறுப்பு வெளிப்படுகிறது. பிறர் மீது நாம் குறை கூறுவதன் மூலம் நாம் நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்துகிறோம். நாம் அவர் மீது குறை சொல்லிவிட்டால் மனம் திருப்தியாகிவிடுகிறது. குறை சொல்லாவிட்டால் அந்தச் சக்தி நம்மைத் திருத்திக் கொள்ள உதவும். குறையைச் சொல்லி விட்டால் நம்மைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பை இழந்துவிடுகிறோம்.
பிறரிடம் ஒரு குறையைக் கண்டபின், அதைப் பேச மனம் துடிக்கும். அந்தத் துடிப்பு நமக்குக் கட்டுப்படாது. அவருடைய குறைக்குக் காரணம் புரிந்துவிட்டால், குறை சொல்லத் தோன்றாது. ஆகவே குறையைச் சொல்வதற்குப் பதிலாக, அதன் காரணத்தை அறிய முற்பட வேண்டும். அந்தக் குறையுள்ள மனிதனுடன் நாம் பழகவேண்டியது எதனால்? நம்மிடம் உள்ள ஒரு குறையே குறை உள்ள ஒரு மனிதனை நம்மிடம் கொண்டு வந்துள்ளது என்று உணர வேண்டும். நம் குறையை அகற்றினால், அவர் மாறுவார் அல்லது நம்மை விட்டகலுவார்.
-கர்மயோகி அவர்களின் அருளமுதம் கட்டுரையில் இருந்து

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.