எது ஆதியோ அதில் சலனமில்லை, சப்தமில்லை. அது மௌனமாக இருக்கிறது. மௌனம் கலைந்தால் சலனம். மௌனம் கலைந்தவிடத்து சப்தம் பிறந்தது. அந்த சப்த பிரம்மத்திடமிரு
ந்து இந்த பிரபஞ்சம் விளைந்தது. எனவே ஓசையிலிருந்து பிறந்த பிரபஞ்சம் ஓசை மயமாகவே இருக்கிறது. இங்கு எல்லாவற்றிலிருந்தும் இடைவிடாது ஓசை எழுந்த வண்ணமே இருக்கிறது. இந்த ஓசையும், சலனமும் நம் இயல்பான மௌனத்திலிருந்து நம்மை விலக்கி வைக்கின்றன. சுத்த மௌனமே ஆத்ம சொரூபமாகும். எனவே ஆத்மாவின் கண் எந்த வித சலனமுமில்லை. அது தன்னில் தானாய் விளங்குகிறது. அந்த மௌனத்தை ஒருவன் எட்டுங்கால் அகண்டாகாரத்தில் தன்னில் தானாய் விளங்கும் பரமாத்மாவை எட்டியவனாகிறான். அப்படிப்பட்ட சாதகனுக்கு சித்தம் அல்லது மனம் அடங்கி நிற்கிறது. அடங்கிய மனதிலிருந்து எந்த வித சலனமோ, ஓசையோ எழுவதில்லை. இப்படி மனம் மௌன நிலையை அடைந்த சாதகனுக்கு செயல்களும் ஒடுங்கி விடுகின்றன. மனம் ஒடுங்கியவிடத்து சரீரம் செயலற்றதாக ஆகி விடுகிறது. இந்நிலையில் வாக்கும் அடங்குகிறது. மனமற்ற நிலையில் பேச்சுக்கு இடமில்லை. இப்படி திரிகரணங்களும் அடங்கிவிட்ட பொழுது மௌனம் நிலை பெறுகிறது. இந்நிலையை அடைந்து விட்ட சாதகனுக்கு ஆத்ம தரிசனம் வாய்க்கப் பெறுகிறது.
மனம், வாக்கு, காயம் இந்த மூன்றையும் அசையாமல் வைத்திருப்பதற்குப் பெயர்தான் மௌனம். ஆன்மீக வாழ்வை ஒரு கனி எனக் ள்வோமேயானால், மௌனம் அதன் சுவையாகும். நாம் அடைகின்ற முடிந்த பூரண நிலையே மௌனம். எண்ணம், சொல், செயல் இந்த மூன்றிலும் கடைபிடிக்கப்படும் மௌனத்தில், பேசாமல் இருக்கும் வாக்கு மௌனமே எளிதானது. எனவே முதலில் மௌனம் பழகுகின்றவர்கள் பேசாமல் இருந்து பழகுவார்கள். வேதாத்திரியத்தில் தினசரி மௌனம், வார மௌனம், மாத மௌனம் என்றெல்லாம் மௌனப் பயிற்சி சொல்லித் தருவார்கள். வாயை அசைக்காமல் வைத்திருப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும். இதனால் வாக்கு சித்தி உண்டாகும். இல்லறத்தார்கள் விரத நாட்களில் மௌனம் கடைபிடிப்பார்கள். மௌனத்தோடு இறை சிந்தனையும் சேரும் போது அதன் பலன் மிகுதியாகும். வாக்கு மௌனம் கடைபிடிப்பவர்கள் முதலில் தனிமையில் இருப்பதே நல்லது. அதில் சித்தி அடைந்த பிறகு கூட்டமாக உள்ள இடத்தில் அமரலாம். வாக்கு கட்டுப்படுத்தப்படும் போது மற்ற இந்திரியங்களும் கட்டுக்குள் வருகின்றன. வாக்கு மௌனம் கடைபிடிப்பவர்களுக்கு கோபம் என்கிற குற்றம் நீங்கும். பேச்சில் தெளிவு ஏற்படும். பெண்களுக்கு இந்த பயிற்சி நல்ல பலனைத் தரும். அவர்கள் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளே ஏற்படாது. சக்தி விரையமாவது தடுக்கப்படும். பேச்சு குறைகின்ற அளவு செயல்திறன் அதிகரிக்கும்.
உடலை அசையாமல் வைத்திருப்பது சரீர மௌனம். மனமடங்கினால்தான் இது சாத்தியமாகும். அங்க சேஷ்ட்டைகள் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். உடம்பை அசைத்தல், கால்களை ஆட்டுதல், மூக்கை நோண்டுதல், வாயில் விரலை வைத்தல், தலையைச் சொறிதல், நகங்கடித்தல், காது குடைதல், பல் குத்துத்தல், கன்னத்தில் கை வைத்தல் போன்ற இவைக்கள் எல்லாம் அங்கச் சேஷ்டைகளே. இப்படி பலவிதமான அங்க சேஷ்டைகளைச் செய்யாமல் அமர்ந்திருப்போமேயானால் இச்சாசக்தி வளரும். சரீர மௌனம் கடைபிடிப்பவர்கள் பத்மாசனம் அல்லதுவீராசனம் அல்லது சுகாசத்தில் அமர வேண்டும். கால்களை நீட்டியோ, மடித்தோ அமரக்கூடாது.
மனதை அசையாமல் வைத்திருப்பதே மகாமௌனமாகும். இது மிகவும் கடினமானது. சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கிறச் செயல் அரிது என்பது முன்னோர்கள் வாக்கு. மனம் அடங்கியவன் தெய்வ நிலையை அடைவான். மனம் சுத்தி அடைந்தால்தான் அதை அடக்குவது சாத்தியமாகும். மாசு உடைய மனம் கட்டுக்குள் அடங்காது. தீய எண்ணங்களை போக்காத வரை மனதை மௌனமாக வைக்கவே முடியாது. உலகாய வாழ்வில் உள்ளவரை மனதை அடக்க போராட வேண்டியதிருக்கும். அந்த போராட்டத்தின் விளைவே மன உளைச்சலை உண்டு பண்ணும். ஆசைகளையும், மும்மலங்களையும், நான் என்கிற அகந்தையையும் நீக்கினால்தான் மனம் அமைதி அடையும். பிராணனை கட்டுக்குள் கொண்டு வந்தால் மனதை அடக்குவது எளிதாகும். மகாமௌனமே தெய்வநிலை. அதுவே பிரம்மானந்தம். பரமானந்தம். அதை அடைவதே ஜீவாத்மாவின் குறிக்கோள். அந்தத் தத்துவத்தை விளக்கும் வடிவமாகவே தக்ஷிணாமூர்த்தி மௌனமாக அமர்ந்த்திருக்கிறார். மௌனமே ஆதியாகும். அதை அடைய மௌனமே ஒரே வழி. எல்லா உபாயங்களும் மௌனத்திலே போய்தான் முடியும். ஆரம்பமும் முடிவும் மௌனமே
Thursday, 12 May 2016
ஆரம்பமும் முடிவும் மௌனமே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.