மனசு போல வாழ்க்கை - 08
பூதக்கண்ணாடி எண்ணங்கள் எதற்கு?
நன்றி - டாக்டர். ஆர். கார்த்திகேயன்
.
எந்தப் பிரச்சினையையும் எக்கார்ட் டாலே
சொன்னது போல, மூன்று வழிகளில் கையாளலாம்.
பிரச்சினையிலிருந்து விலகலாம். பிரச்சினையை அப்படியே
ஏற்றுக் கொள்ளலாம். பிரச்சினையை
மாற்றலாம், சரி செய்யலாம். இவற்றைத் தவிர
எதைச் செய்தாலும் பலன் இல்லை.
நீங்கள் அதிகம் கவலைப்படும் ஒரு விஷயத்தை எடுத்துக்
கொள்ளுங்கள். கவலையைத் தவிர கோபம், பயம், சுயப்
பரிதாபம், வெறுப்பு, பொறாமை, பதற்றம்,
சந்தேகம் என்று எந்தவிதமான எதிர்மறை உணர்வுகள்
வந்தாலும் அவை பிரச்சினையை இம்மி அளவு கூட
மாற்றப்போவதில்லை. மாறாகப் பிரச்சினை பற்றிய பிம்பம்
தான் பெரிதாகிக் கொண்டே இருக்கும்.
.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி பார்ப்பது பற்றி நான்
எழுதியிருந்த கருத்தைப் பலமாக ஆமோதித்த வாசகர் ஒருவர்
எக்கார்ட் டாலே சொன்ன வழிகளைப்
பின்பற்றியதாய் கூறினார்.
“ டி.வி பார்ப்பதை முழுவதுமாக கைவிடுவது சாத்தியமில்லை.
அதனால், ‘அதிகம் டி.வி பார்ப்பது’ என்பது நம் வீட்டில்
இருக்கும் பிரச்சினை என்பதை முதலில்
ஏற்றுக்கொண்டுவிட்டேன்.
தொலைக்காட்சியில் வருகிற
நெடுந்தொடர்களை அதிகம் பார்க்க
வேண்டாம் என்று குடும்பத்தினர் எல்லோரும் பேசி இரண்டு
சீரியல்கள் மட்டும் தான் பார்க்கலாம் என்று முடிவு
செய்துள்ளோம்.
அதிகாலை நேரம் என்றால் பக்திப் பாடல்கள், இரவு
என்றால் மெல்லிசை என வீடு முழுதும் இசையை ஒலிக்கத்
திட்டமிட்டுள்ளோம். இது டி.வியிலிருந்து மெல்ல விலகச்
செய்து எங்களை மற்ற காரியங்களைச் செய்ய
வைக்கும்” எனச் அபாரமாய் சொன்னார்
அந்த வாசகர்.
.
நிஜமான பக்குவம்
இன்னொரு நண்பர் கேட்டார், “சுயக் கட்டுப்பாடு
இல்லாமல் பிரச்சினையிலிருந்து தப்பித்தல் நிரந்தரமான
தீர்வாகுமா?
.
எது நடந்தாலும் எதிர்மறை எண்ணங்கள் வராமல்
இருக்க வழி கிடையாதா?”
சுயக் கட்டுப்பாடுதான் தீர்வு. சந்தேகமில்லை. நமக்கு
வெளியில் என்ன நடந்தாலும் ஒரே மாதிரியான
மனநிலையில் இருப்பது தான் நிஜமான பக்குவம்.
ஆன்மிகம் கற்றுத் தருவதும் இதைத் தான். ஆனால்,
எடுத்தவுடனே அந்த நிலையை அடைவது கடினம். அதனால்
தான் ஆரம்பத்திலேயே முக்தி நிலை என்று எந்த மார்க்கமும்
சொல்வதில்லை. படிப்படியாகத் தான்
பழக்குவார்கள். அது போலத்தான் இதுவும்.
.
சூழலைத் தேர்வு செய்தல்
மது குடிப்பதை விட்டுவிட நினைப்பவர்கள் முதலில் அதைக்
குடிக்கும் நண்பர்களிடமிருந்து சற்று விலகியிருப்பது
புத்திசாலித்தனம். சூழலைத் தேர்வு செய்தல் ஆரம்ப
நிலைக் கட்டுப்பாடு. முடிந்தவரை இதைச் செய்வதில்
தவறில்லை. பல கேடுகளுக்கு நம்மைச் சுற்றியிருப்பவர்களின்
பண்புகளும் காரணமாகின்றன. ஒரு பிரச்சினையிலிருந்து
மீள அந்தச் சூழலை விட்டு விலக நினைப்பது விவேகம்.
ஆனால், பல சமயங்களில் இது இயலாததாய்
இருக்கலாம். உங்கள் குடும்ப மனிதர்களை நீங்கள்
தேர்ந்தெடுக்க முடியாது. திருமணத்திலிருந்து விலகுவது
அவ்வளவு எளிதானதல்ல. உங்கள் படிப்பு,
தொழில் போன்றவை தரும் சூழல்களைத் தேர்வு
செய்வதும் அல்லது விலகிச் செல்லுதலும்
கடினமானவை தான்.
.
கிடைத்ததை விரும்பு
பிரச்சினையாக இருப்பதைச் சீர்படுத்துவதும், மாற்றம்
செய்வதும் அடுத்த வழி முறை.
எக்ஸ்னோரா அமைப்பை நிறுவியவர் எம்.பி. நிர்மல். தன் புது
வீட்டுக்குக் குடியேறியபோது சுற்றுப்புறம் மிகவும் தூய்மைக்கேடாய்
இருப்பது கண்டு மனம் பதறினார். “நல்ல சுற்றுப்புறத்தில்
என்னால் வீடு வாங்க முடியவில்லை. ஆனால், கிடைத்த
வீட்டின் சுற்றுப்புறத்தை நல்ல விதமாக மாற்ற முடியும்”
என்று அப்போது நினைத்துக் கொண்டாராம்.
அந்தச் சிந்தனை விதையில் துளிர்த்தது தான் எக்ஸ்னோரா
அமைப்பு.
“விரும்பியது கிடைக்காத போது கிடைத்ததை விரும்பு” என்பது ஒரு
பிரபலமான வாசகம். காதலித்தவர் வாழ்க்கைத்
துணையாகக் கிடைக்கவில்லை. ஆனால், மணந்தவரைக்
காதலிப்பதில் என்ன தடை?
.
ஏற்றால்தான் மாற்றம்
துல்லியமாகப் பார்த்தால் ‘ஏற்றுக்கொள்ளுத
ல்’ ஏற்பட்டால் தான் ‘மாற்றம்’ பிறக்கும். பிரச்சினையை
ஏற்றுக்கொள்ளுதல் தான் அதை
மாற்றுவதற்கான மன வலிமையையும் தரும்.
“ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே” என்று தாழ்வு
மனப்பான்மை கொள்வதற்குப் பதில் முதலில்
அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். நமக்குக்
கிடைத்த சூழலுக்கும் வாய்ப்புக்கும் ஆங்கிலம்
வசப்படவில்லை. அவ்வளவு தான். அதனால், நாம்
நம்மைக் குறைவாக எண்ணத் தேவையில்லை. இப்படி
ஏற்றுக்கொண்டால் ‘எப்படி ஆங்கிலம் பேசக்
கற்கலாம்?’ என்று நம்பிக்கையோடு யோசிக்க முடியும்.
ஆக, சூட்சுமம் இது தான். முதலில் தேவை இல்லாத
எதிர்மறை எண்ணங்களையும் உணர்வுகளையும் விலக்குங்கள்.
பிரச்சினையின் நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.
மாற்ற முயற்சி செய்யுங்கள். மாறுதல்
வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. வெற்றி
பெறாவிட்டாலும் அதையும் ஏற்று மீண்டும்
மாறுதலுக்கு உட்படுத்துங்கள். இந்தத் தொடர்
முயற்சி தான் வாழ்க்கை. இதை விருப்பு, வெறுப்பு
இல்லாமல் செய்வது தான் பக்குவம்.
.
பூதக்கண்ணாடி எண்ணங்கள்
ஒரு செய்கையை விட அந்தச் செய்கை
தொடர்பான எண்ணம் தான் உங்களின்
உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.
காதலிக்குக் காத்திருக்கையில் கால் வலிக்கவில்லை.
அவளே மனைவியான பின் காத்திருந்தால் கால்
வலிக்கிறது. யாருக்குச் சமைக்கிறோம் என்பதைப்
பொறுத்து ருசியே மாறுகிறது. பொய்
சொல்லி வாங்கிப்போனார் என்று
தெரிந்ததும் கொடுத்த நூறு ரூபாய்
பெரிய நஷ்டமாகத் தெரிகிறது.
நம்பிக்கையுடன் பூஜைக்குப் பணம் தருகையில்
பெருமைப்படுகிறோம். பெரிய மருத்துவமனையில் இதய
நோய்க்கு சிகிச்சை செய்தால் பெருமையாக
உறவினர்கள் அனைவரிடமும் சொல்வோம்.
மனச்சிதைவு வந்தால் மூன்றாம் மனிதருக்கு அறியாமல்
சிகிச்சை தருவோம்.
பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு முன் அவற்றைப் பற்றிய
எண்ணங்களைச் சமாளிப்போம். பிரச்சினைகளைப் பார்க்கும்
சில பூதக்கண்ணாடி எண்ணங்கள் நம்மிடம் உள்ளன.
அவற்றைக் கையாண்டால் நம் பிரச்சினைகள் பாதிக்கு மேல்
காணாமல் போயிருக்கும்!
.
தொடர்புக்கு:
டாக்டர். ஆர். கார்த்திகேயன்
ஆசிரியர் உளவியல் மற்றும் மனித வள ஆலோசகர்.
gemba.karthikeyan@gmail.com
.
நன்றி - தி இந்து
Saturday, 14 May 2016
மனசு போல வாழ்க்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.