Saturday, 28 May 2016

நான் எவ்வாறு கோபம் கொள்ளாதிருப்பது?

<3 விழிப்புணர்வு <3

நான் எவ்வாறு கோபம் கொள்ளாதிருப்பது?

நான் எப்படிப் பேராசை பொறாமையை விட்டுவிடுவது?

நான் எப்படிக் காமத்திற்கும் கோபத்திற்கும் அடிமைப்படாமல் இருப்பது?

என்பன போன்ற கேள்விகள் பல கேட்கப்பட்ட நிலையில் புத்தர் சொன்ன ஒரே பதில் இதுதான்.

உங்கள் வாழ்வில் விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள்,

அது போதும். எல்லாம் சரியாகி விடும்.

மன நோய்கள் பலவாயினும் மருந்து மாறப்போவதில்லை.

விழிப்புணர்வே அந்த அருமருந்து.

அந்த அருமருந்தை நீங்கள் சாட்சி என்று கூறலாம்.

நினைவுப்படுத்துதல் என்றும் அழைக்கலாம். தியானம் என்றும் சொல்லலாம்.

இவை அனைத்தும் ஒரே மருந்தின் வெவ்வேறு பெயர்கள்
.
மிகுந்த விழிப்புணர்வோடு வாழுங்கள். மனித குலத்தின் இன்றைய குழப்பத்திற்குக் காரணமே அவன் விழித்துக்கொண்டே உறங்குவதுதான்.

ஆழ்ந்த உறக்கம்.

தாங்கள் விழிப்புணர்வில் இல்லை என்பதே கூட அவர்களும் மறந்துவிடுமளவுக்கு நீண்ட உறக்கம்.

திறந்த விழிகள். ஆயிரம் கனவுகள். ஆயிரம் ஆசைகள். நீங்கள் இங்கு இப்போது என்றுமே இருந்தது இல்லை.

நீங்கள் கடந்தகால நினைவுகளோடோ- எதிர்காலக் கற்பனைக்கனவுகளோடோதான் கனவுலகில் சஞ்சரிக்கின்றீர்கள்.

எப்போதுமே நிகழ்கணத்தில் முழுமையாய் இருத்தலே விழிப்புணர்வு.

இந்தக் கணத்தில் இப்போது இங்கிருக்கிறீர்கள். அதுவே விழிப்புணர்வு நிலை.

உங்களின் உள்ளே சிறு எண்ணம் அலை பாய்வதை கவனிக்க தவறினாலும் நீங்கள்
விழிப்புணர்வைத் தவறிவிட்டுவிட்டீர்கள் என்பதாகிவிடும்.

தூய்மையான உணர்வு நிலையில் – எண்ணங்கள் அற்ற தெளிந்த நிலையில் நீங்கள் எவ்வாறு பாபம் செய்ய இயலும்?

இருந்தலின் பரிபூரணமான சுத்த உணர்வு நிலையில் அகங்காரம் முற்றிலுமாக அழிந்துபோகிறது.

அகங்காரமே வாழ்வின் அனைத்துவகை அவலங்களுக்கும் ஆணிவேராகும்.

அகங்கார உணர்வு ஒரு வன்முறைதான்.

சிறைகளின் தொடர்வட்டத்திலிருந்து விடுபட ஒரே வழி எச்சரிக்கையோடு விழிப்பாய் இருத்தலே.

எச்சரிக்கை கலந்த விழிப்புணர்வில் மட்டுமே நீங்கள் உங்களின் மையத்தைத் தொடமுடியும்.

உங்களின் உள் மையத்தை நீங்கள் தொட்ட நிலையில் ஒருவிதப் பரவசம் உங்களை நாலாபுறமுமிருந்து வாரிக் கொள்ளும்.

அப்போது உங்களிடம் இல்லாதது எதுவுமில்லை.

எல்லாமும் நீங்கள்தான். நீங்கள் எண்ணியதெல்லாம் ஈடேறிவிட்ட அற்புத நிலையில் இருப்பீர்கள்.

நீங்கள் எந்த பொருளைத் தேடி – எதன் மீது ஆசைப்பட்டு நீங்கள் திருடனாக மாறிவிட முடியும்?

நீங்கள் நிகழ்கணத்தில் வாழுங்கள். நிகழ் பொழுதில் நீங்கள் ஒரு பகுதியாக இருங்கள்.

அப்போது பிறக்கும் ஒவ்வொரு செயலும் மிகவும் தெளிந்த பார்வை உடையதாக இருக்கும்.

அப்போது நீங்கள் தூய கண்ணாடிபோல் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

விழிப்புணர்வோடு இருத்தலையே நான் உங்களுக்குப் போதிக்கிறேன்.

அவ்வாறு இருக்கும் நிலையில், உங்களின் வாழ்க்கை தன் போக்கை அதன் வழியில் மாற்றிக்கொண்டு விடும்.

நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. எல்லாம் தானே நடைபெறும்.

எதைச் செய்த போதிலும் தியானத் தன்மையோடு விழிப்புணர்வில் செய்யுங்கள்.

அது உங்களிடம் ஒரு வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.

உங்களின் விழிப்புணர்வு விரிவடைய விரிவடைய, அங்கே அன்பு மிளிரும். அமைதி நிலவும். ஆனந்தம் பெருகும்.

மௌனம் நிகழும்.

விழிப்புணர்வே பெரு மருந்து.

மாற்றம் தரும் அருமருந்து.

-- ஓஷோ --

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.