Saturday, 7 May 2016

தியானத்தின் இலக்கு என்ன?

ஸென்'னுடன் நடந்து..... 'ஸென்'னுடன் அமர்ந்து.....

கேள்வி: தியானத்தின் இலக்கு என்ன?

ஓஷோ பதில்:' "தியானத்தின் இலக்கு" என்று எதுவும் இல்லை. எல்லா இலக்குகளையும் கைவிடுவதே தியானம் ஆகும். எனவே அதற்கென்று ஒரு இலக்கு இருக்க முடியாது. அது அதன் சொந்த தன்மைக்கே எதிராக இருக்கும். இலக்குகள் என்பவை எதிர்காலத்தில் உள்ளன. தியானம் நிகழ்காலத்தில் இருப்பது. நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையில் எந்த சந்திப்புக்கும் இடமில்லை. எதிர்காலம் என்பது இல்லாத ஒன்று---இல்லாததும் இருப்பதும் எப்படி சந்திக்க முடியும்? அதற்கு வாய்ப்பே இல்லை. எதிர்காலம் என்பது நமது உருவாக்கம், நமது கற்பனைப் படைப்பு. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்கே அதை நாம் உருவாக்குகிறோம். நிகழ்காலத்தைத் தவிர்ப்பதே அந்த நோக்கம். நிகழ்காலத்தில் இருப்பதை நாம் விரும்புவதில்லை. நிகழ்காலத்திலிருந்து தப்பிக்கவே விரும்புகிறோம். தப்பிக்க வாய்ப்பாக எதிர்காலம் உள்ளது. எதிர்காலத்தில் வாழ்வது என்பது தப்பித்துக் கொள்வதாகும். 

     இலக்கு எதுவாயினும் -- அந்த இலக்கு என்ன என்பது ஒரு பொருட்டில்லை -- அது கடவுளை அடைவதாகலாம், நிர்வாணத்தை அடைவதாகலாம். அதுவும் ஒருஇலக்குதான்; எந்த இலக்கும் தியானத்துக்கு எதிரானதுதான். ஆனால் நம் மனம் முழுவதும் எதிர்காலத்திலேயே இருக்கிறது. நம் மனம் நிகழ்காலத்துக்கு எதிராக இருக்கிறது. நிகழ்காலத்தில் இறக்கிறது. நிகழ்காலத்தில் மனம் எப்படி நிலவ முடியும்? நீங்கள் முற்றிலும் இப்போது, முற்றிலும் இங்கே இருக்கையில் மனம் என்ற பிரச்னையே இருப்பதில்லை. நீங்கள் சிந்திக்க முடியாது. ஏனெனில் சிந்திக்க இடம் தேவை. நிகழ்காலத்தில் இடவெளி இருப்பதில்லை. அது ஊசிமுனை போன்றது. அதில் எதையும் உள்ளடக்க முடியாது. ஒற்றை எண்ணத்தையும் கூட அதில் இருத்தமுடியாது. 

 

    ஸென் என்பது உடனடி விழிப்பு முறை ஆகும். படிப்படையான விழிப்பு முறை அல்ல. படிப்படையான விழிப்பு என்னும் பேச்சுக்கே இடமில்லை. அளவுரீதி பற்றிய பிரச்சனையே இதில் இல்லை. ஒன்று அதை நீ பெற்றிருக்கிறாய் அல்லது பெற்றிருக்கவில்லை. ஸென் கூறுகிறது. குதித்துவிடு, துணிந்துவிடு, அதை முழுமையாகவே அடைந்துகொள். இக்கணமே அது சாத்தியமாகிறது. இப்போது மட்டுமே அது சாத்தியம். இப்போதே இருக்கிறது அல்லது எப்போதுமில்லை.

     கேள்வி:  துணிவு என்பது என்ன?

ஓஷோ பதில்: துணிவு என்பது ஒன்றே ஒன்றுதான். இறந்த காலத்துக்கு இறந்து கொண்டே போவதுதான். அதை சேமிக்காது இருப்பதுதான். அதை குவித்துக் கொண்டே போகாததுதான். அதை தொற்றி இருக்காததுதான் துணிவு. நாம் எல்லோரும் இறந்த காலத்தை தொற்றிக் கொண்டு இருக்கிறோம். இதனால் நிகழ்கணத்தில் நாம் இல்லாதவர்களாகி விடுகிறோம். இவ்வாறு இறந்த காலத்தைத் தொற்றிக் கொண்டிருப்பதற்கு மனதிடம் தக்க காரணங்கள் கைவசம் உள்ளன..

     முதலாவது: மனமே இறந்தகாலத்தால் ஆனதுதான். உன் மனத்தையே அது என்னவென்று பார். அது இறந்த காலமின்றி வேறல்ல: நீ படித்திருந்து இருக்கிற, நீ கவனித்திருந்து இருக்கிற, அனுபவித்திருந்து இருக்கிற, அவதானித்திருந்து இருக்கிற அணைத்தும், இருந்திருக்கிற அணைத்துமே அது. மனம் ஒருபோதும் இருக்கிறது அல்ல. அதில் சிறந்த காலமே இருக்கிறது. எனவே மனம் இயல்பாகவே இறந்த காலத்தால் உரம் பெறுகிறது, இறந்த காலத்தையே தொற்றிக் கொள்கிறது; ஏனெனில் அதுவே அதற்கு சக்தியும், பலமும், ஆற்றலும், உயிரும் தருகிறது. ஆனால் எந்த அளவுக்கு கடந்தகாலம் உங்களைச் சுற்றி அதிகமாக சேகரமாகிறதோ அந்த அளவுக்கு அதிக தூசு படிந்த கண்ணாடியாக நீங்கள் ஆகிறீர்கள். கடந்தகாலம் என்பது வசதிதான், சொகுசுதான், ஏனெனில் அதனுடன் உங்களுக்கு நல்ல பரிச்சயம் இருக்கிறது. அதை உங்களுக்கு நன்றாக தெரியும். எனவே அதை எப்படி கையாள்வது என நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு திறமை இருக்கிறது. அதில் நீங்கள் கை தேர்ந்தவராக இருக்கிறீர்கள். உங்கள் மொத்த அறிவுமே அதையே சார்ந்திருக்கிறது..அதைக் கைவிடுவது என்றால் திரும்பத்திரும்ப நீங்கள் கற்க வேண்டி இருக்கும்--அதுவோ வசதியானது அல்ல. அசவுகரியமானது. 

     கடந்தகாலத்தை கைவிடுவது என்பதன் பொருள், தினமும் நீங்கள் ஒரு குழந்தையாக வேண்டி இருக்கும் என்பதே. உங்கள் அகங்காரம்தான் ஒரு குழந்தையாக இருக்க விரும்புவதில்லை. பெரிய ஆளாக இருக்கவே விரும்புகிறது. கடந்தகாலத்தை அடுக்கி அதன்மேல் ஏறி உட்கார்ந்து மற்றவர்களைவிட தான் உயரம் என காட்டவே உங்கள் அகங்காரம் விரும்புகிறது. கடந்தகாலம் இல்லாவிட்டால் நீங்கள் அறிவு இல்லாத; ஆனால் ஆச்சரியம், வியப்பு நிரம்பிய ஒரு குழந்தையைப் போலவே எப்போதும் இருப்பீர்கள்.

     அது ஒன்றே துணிவு. அறிந்ததை கைவிட்டு அறியாததற்குள் பிரவேசிப்பதே துணிவு. ஒரே ஒரு தடவை அதை செய்தால் போதாது. ஒவ்வொரு கணமும் அப்படி செய்யவேண்டும். ஒரு தடவை செய்தால் எப்போதைக்குமாக செய்ததாகிற விஷயம் அல்ல இது. ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வின் கடைசிக் கணம் வரை படுக்கையில் கிடந்து நீங்கள் உயிர்விடும்வரை அதை நீங்கள் செய்ய வேண்டும். அந்த நிலையிலும் நீங்கள் கடந்த காலத்துக்கு இறந்துவிடும் நிகழ்முறையை கடைபிடிக்கவே வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு கணமும் பளிங்குத்  தெளிவுடன் நீங்கள் வாழமுடியும். உங்கள் கண்ணாடியில் தூசு படியாது. நிகழ்கணத்தை உள்ளபடியே நீங்கள் பிரதிபலிக்க முடிகையில் கடவுளை, கடவுள் தன்மையை நீங்கள் அறிகிறீர்கள். இருக்கிறதின் இன்னொரு பெயரே கடவுள். உள்ளது எதுவோ அதுவே கடவுள். 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.