கணவர் இறந்த பின் தலை முடியை மழித்துக்கொள்ளும் பழக்கம் பிராமண சமூகத்தில் இருந்த காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சாரதாதேவி தன கணவர் இராமகிருஷ்ண பரஹம்சர் இறந்த பிறகு முடியை மழிக்கவோ கைவளையல்களை கழற்றவோ மறுத்துவிட்டார். அவர் எங்கே இறந்தார் ? இப்போதும் என்னுடனேயே இருக்கின்றார். நாங்கள் உடல் அளவில் கணவன் மனைவியாக வாழவில்லை . இருப்பினும் அவரின் இருப்பை ...அவரின் வாசம் உட்பட ..நான் உணர்கிறேன் என்றார் .பரஹம்சரின் உடலை எரியூட்ட சிதைக்கு கொண்டு செல்லும்போது கூட வெளியே வந்து அவரின் உடலை கடைசியாக தரிசிக்க மறுத்துவிட்டார். அவர் என்னுடன் இருக்கிறார் ..இதைத்தான் சாரதாதேவி சொல்லிக்கொண்டிருந்தார் . மக்கள் அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக கருதினர். ஆனாலும் வாழ்க்கைக்குத்தேவையான அனைத்துசெயல்களையும் மற்றவர்களைப்போலவே இயல்பாக அவர் செய்துகொண்டிருந்தார். மக்களுடன் தெளிவாக உரையாடினார் .தெளிவான மனநிலையிலேயே அவர் இருந்தார். அதிகாலையில் பரஹம்சரே எழுந்திருங்கள் ..பக்தர்கள் உங்களுக்காக காத்துகொண்டிருக்கிறார்கள் என்று எழுப்பிவிடுவார் .உணவு நேரத்தில் ஒரு மனைவி கணவனுக்கு உணவு பரிமாறுவதுபோல ராமகிருஷ்ணர் அமரும் ஆசனத்திற்கு முன் உணவை வைத்து ஒரு விசிறி எடுத்து விசிறிக்கொண்டிருப்பார். இரவு இராமகிருஷ்ணர் உபயோகித்த கட்டிலு க்கு கொசுவலை கட்டுவார். கொஞ்சம் இடம் கிடைத்தாலும் கொசுக்கள் வலைக்குள் சென்றுவிடும் ...பிறகு நீங்கள் உறங்கமுடியாது என்று நேரில் உள்ள நபரிடம் உரையாடுவதுபோலபேசிக்கொண்டே பாதங்களுக்கு இடையில் கொசுவலையை இடைவெளியின்றி செருகி வைப்பார்.அனைத்தும் பாவனையே ..பக்தியின் உச்சத்தில் சாரதாதேவி வாழ்ந்துகொண்டிருந்தார் .பரஹம்சரின் இருப்பை முழுமையாக உணர்ந்திருந்தார். அவர் இறக்கும் தருவாயில் பரஹம்சரை எண்ணி கண்ணீர்விட்டு அழுதார். என்ன இது ? உன் கணவர் இறந்தபோதுகூட நீ அழவில்லை..இப்போது அவருக்காக அழுகின்றாயே ? என்று கேட்டவர்களுக்கு அவர் சொன்னார் “அவர் எப்போதும் இங்கே இருப்பது உங்களுக்குத்தெரியாது . எனக்குத்தெரியும் ...அவரின் தேவைகளை நான் கவனித்துக்கொண்டேன் .எனக்குப்பிறகு அவரை யார் கவனித்துக்கொள்வார்கள் ? யார் அவருக்கு உணவிடுவார்கள் ? கொசுக்கள் உள்ளே போகாமல் யார் அவருக்கு கொசுவலை கட்டுவார்கள் ? நான் இறந்தபிறகு அவரை நான் காண முடியாது . அந்த துக்கத்தில் நான் அழுகின்றேன் “ என்று சொன்னார்.
பக்தியின் உச்சநிலையாக இதை நான் உணர்கிறேன் . பக்தியை அறிவின் அளவுகளால் அளந்து புரிந்து காணமுடியாது. ஆன்மிகம், வழிபாடு, யாத்திரை, பூஜை ,புனஸ்காரம் ,வேதம் , வேதாந்தம் என ஆயிரம் சொல்லிக்கொண்டுபோகலாம் . இதுபோன்ற நிலையெய்த பைத்தியம் பிடிக்கவேண்டும். புறத்தே தெளிவாகவும் அகத்தே இறைஉணரும் பைத்தியமாகவும் வாழத் தெரியவேண்டும். ஆண்டாள் போல ...மீரா போல ...சாரதாதேவி போல.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.