Tuesday 31 May 2016

ஒழுக்கம்

நண்பர்- நாம் ஒழுக்கமுடையவர்களாக இருப்பதினால் சமுதாயத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது ?
இராம் மனோகர் - இந்தக் கேள்வி அறியாமையினால் கேட்கப்படும் ஒரு சாதாரண கேள்வி போலத் தோன்றும். ஆனால் உண்மையில் இது ஒரு ஆழமான கேள்வி. ஏனெனில் எத்தனையோ ஞானிகளும், மகான்களும் வந்து ஒழுக்கம் மிகுந்தவர்களாக அற வாழ்க்கை வாழ்ந்து காட்டியதோடு, நம்மையும் அவ்வழியில் வாழ வலியுறுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனாலும் கூட இந்த சமுதாயத்தில் எந்த வித மாற்றமும் நடந்தது போலத் தெரியவில்லையே ? ஒவ்வொரு தனி மனிதனிடத்தும் ஒழுக்கம் வேண்டும் என்பதே அவர்கள் நோக்கமாக இருந்திருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் மற்றவர்கள் ஒழுக்கத்தைக் குறித்து எடை போடும் அளவு நம் ஒழுக்கத்தைக் குறித்து நாம் யோசிப்பதே இல்லை. நான் ஒழுக்கமுடையவர்களாக வாழுங்கள் என்று சொல்வது, உங்களை ஒழுக்கமுடையவர்களாக வாழச் சொல்வதற்கேயன்றி, பிறர் ஒழுக்கங்களைக் குறித்துக் கவலைப்படுவதற்கல்ல. உங்களை ஆன்மீக வாழ்வை நோக்கி உயர்த்துவதற்கு மட்டுமே உங்கள் ஒழுக்கம் பயன்படும். மற்றவர்களோடு நாம் நம் ஒழுக்க நெறிகளைப் பொருத்திப் பார்த்தால் குழப்பமே ஏற்படும்.
ஒவ்வொரு தரப்பினற்கும் இங்கு ஒவ்வொரு ஒழுக்க நெறி போதிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஒழுக்கமாக கருதப்பட்டது இன்று ஒழுக்கமின்மையாக ஆகி விடுகிறது. நமக்கு ஒழுக்கமாகக் கருதப்படும் விஷயம் அண்டை வீட்டுக் காரனுக்கு ஒழுக்கமின்மையாகத் தோன்றுகிறது. எனவே ஒழுக்கம் என்றால் என்ன என்பதைப் பற்றிய தெளிவு நமக்கு அவசியமாக இருக்கிறது. ஒழுக்கம் என்றால் என்ன ? பொய் சொல்லாமல் இருப்பதா ? களவு செய்யாமல் இருப்பதா ? புலால் உண்ணாமல் இருப்பதா ? தன் மனைவியைத் தவிர பிற பெண்கள் மேல் ஆசைப்படாமல் இருப்பதா ? கோபப்படாமல் இருப்பதா ? ஆசைப்படாமல் இருப்பதா ? பொறாமை இல்லாமல் இருப்பதா ? ஆணவமில்லாமல் இருப்பதா ? இப்படிக் கேட்டுக் கொண்டே போகலாம். அவரவர் எந்த விஷயத்தில் பலவீனமாக இருக்கிறார்களோ, அதை சரி செய்து கொள்வது ஒழுக்கம் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அது மட்டும் ஒழுக்கம் என்று உறுதியாகச் சொல்லி விட முடியாது. அப்படியானால் எதுதான் ஒழுக்கம் ? தனக்கோ, பிறர்க்கோ, உடலாலோ, மனதாலோ தீங்கு செய்யாமல் இருப்பதுதான் ஒழுக்கம்.
எனவே முதலில் ''தனக்கோ'' என்று சொல்லப்படுவதைக் கவனிக்க வேண்டும். தான் ஒருவன் தன்னளவில் ஒழுக்கமுடையவனாக இருக்க நினைத்தால், முதலில் அவன் கடைபிடிக்க வேண்டியது என்ன தெரியுமா ? பிறர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது. அதுதான் தலையாய ஒழுக்கம். அதுதான் உடலாலோ, மனதாலோ பிறர்க்கு நாம் தீங்கு செய்யாமல் இருப்பது. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உலகாய வாழ்வைப் பொருத்த வரை ஒழுக்கம் என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது அன்று. அது மனிதனால் ஆக்கப்பட்டது. மனிதத் தன்மை கொண்டது. நன்மை, தீமை என்ற பேத நிலையை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. இதையெல்லாம் கடந்தால்தான் நாம் ஆன்மீக வாழ்விற்கான நுழைவு வாயிலை அடைய முடியும். நான் ஒழுக்கமாக வாழ்கிறேன், எனது கடமையைச் செய்கிறேன், அறவழியில் நடக்கிறேன் என்ற திருப்பதியான எண்ணம் கூட இங்கே பலரின் ஆன்மீக முன்னேற்றத்திற்கான முயற்சிக்குத் தடையாகி இருக்கிறது. ஒழுக்கம் என்பது மன அமைதிக்கான ஒரு வழியே தவிர, அதுவே ஆன்மீக வாழ்வாகி விடாது.
இறைவன் எல்லோருக்குள்ளும் இருக்கிறான் என்றால், ஏன் ஒருவருக்கொருவர் ஒழுக்கத்தில் வேறுபாடு பெற்றுத் திகழ்கிறார்கள் ? இறைவனுக்கு ஏன் தெரியவில்லை, இன்னன்னார் ஒழுக்கமில்லாமல் இருக்கிறார்கள் என்று ? தெரிந்திருந்தால் அவர் ஏன் அவர்களை ஒழுக்கமுடையவர்களாக மாற்றாமல் விட்டு வைத்திருக்கிறார
் ? அவர் மாற்ற மாட்டார். நாம்தான் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் நம்மை ஒழுக்கமுடையவனாக, களங்கமில்லாதவனாக, தன்னுடைய இயல்புடையவனாகத், தன்னுடைய சாயலாகவே படைத்தார். நாம்தான் வளர வளர நம்முடைய சுய இயல்பை விட்டு விலகி வெகு தூரம் வந்து விட்டோம். மன அமைதியை இழந்து விட்டோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். நம் மனதை, வாழ்வைத் தூய்மையுடையதாக ஆக்கிக் கொண்டு, மன அமைதியோடு இறைவனை நோக்கி தியானிப்பது ஒன்றுதான். அங்குதான் ஆன்மீக வாழ்வுக்கான முயற்சியே துவங்குகிறது. மாறாக பிறர் ஒழுக்கங்களையும், நம் ஒழுக்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துப் போராடிக் கொண்டிருந்தால் உலகாய வாழ்வு கூட நரகமாகிப் போகும். அத்தகைய ஒழுக்கத்தால் யாதொரு பயனுமில்லை.
உண்மையாகவே நாம் அக்கறை கொள்ள வேண்டிய முதல் ஆள் நாம்தான். நாம் உலகத்தின் துன்பங்களைப் போக்கி விட வேண்டும் என்று நினைக்கிறோம். உலகம் மாறாது. அது அப்படியேதான் இருக்கிறது. அப்படியேதான் இருக்கும். ஒரு நாகரிகம் மறைகிறது அடுத்த நாகரிகம் தொடர்கிறது. இது தொடர் கதையாக நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. உலகம் என்னவோ மாறவேயில்லை. நாம்தான் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் ஒழுக்கம் என்ற பெயரில் ஒரு குறுகிய வட்டத்தை வகுத்து வைத்துக் கொண்டு அதிலேயே உழன்று கொண்டிருக்கிறோம். நம் பார்வையை, நோக்கத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். துன்பங்களை அனுபவிப்பதற்கான நம்முடைய திறனை பேரின்பத்தை அடைவதற்கான உறுதிப்பாடாக மாற்றிக் கொள்ளவில்லையெனில் அந்த ஒழுக்கத்தினால் யாதொரு பயனுமில்லை. ஒழுக்கமும், உள்ளுணர்வும் ஆன்மாவில் ஒடுங்கி லயமாகி விட வேண்டும். அதற்கு இறைவுணர்வோடு கூடிய ஒழுக்கம் வேண்டும். அது நமக்கு நாமே மட்டும்தான் ஏற்படுத்திக் கொள்ள முடியும். பிறர் நமக்குத் தரவும் முடியாது. நாம் பிறருக்குக் கொடுக்கவும் முடியாது.
அத்தகைய உயர்ந்த உள்ளுணர்வை அடைவதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். இங்கே நான், எனது என்று சேர்த்து வைத்திருப்பவைகள் அனைத்தையும் இறைவனிடம் கொடுத்து விட வேண்டும். வேறு வழி இல்லை. இது நமக்காக மட்டுமல்ல, மனித இனத்திற்காகவும், பிரபஞ்சத்திற்கா
கவும் நாம் செய்யும் நன்மை இதை விட வேறு எதுவுமில்லை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.