Tuesday, 31 May 2016

ஒழுக்கம்

நண்பர்- நாம் ஒழுக்கமுடையவர்களாக இருப்பதினால் சமுதாயத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது ?
இராம் மனோகர் - இந்தக் கேள்வி அறியாமையினால் கேட்கப்படும் ஒரு சாதாரண கேள்வி போலத் தோன்றும். ஆனால் உண்மையில் இது ஒரு ஆழமான கேள்வி. ஏனெனில் எத்தனையோ ஞானிகளும், மகான்களும் வந்து ஒழுக்கம் மிகுந்தவர்களாக அற வாழ்க்கை வாழ்ந்து காட்டியதோடு, நம்மையும் அவ்வழியில் வாழ வலியுறுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனாலும் கூட இந்த சமுதாயத்தில் எந்த வித மாற்றமும் நடந்தது போலத் தெரியவில்லையே ? ஒவ்வொரு தனி மனிதனிடத்தும் ஒழுக்கம் வேண்டும் என்பதே அவர்கள் நோக்கமாக இருந்திருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் மற்றவர்கள் ஒழுக்கத்தைக் குறித்து எடை போடும் அளவு நம் ஒழுக்கத்தைக் குறித்து நாம் யோசிப்பதே இல்லை. நான் ஒழுக்கமுடையவர்களாக வாழுங்கள் என்று சொல்வது, உங்களை ஒழுக்கமுடையவர்களாக வாழச் சொல்வதற்கேயன்றி, பிறர் ஒழுக்கங்களைக் குறித்துக் கவலைப்படுவதற்கல்ல. உங்களை ஆன்மீக வாழ்வை நோக்கி உயர்த்துவதற்கு மட்டுமே உங்கள் ஒழுக்கம் பயன்படும். மற்றவர்களோடு நாம் நம் ஒழுக்க நெறிகளைப் பொருத்திப் பார்த்தால் குழப்பமே ஏற்படும்.
ஒவ்வொரு தரப்பினற்கும் இங்கு ஒவ்வொரு ஒழுக்க நெறி போதிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஒழுக்கமாக கருதப்பட்டது இன்று ஒழுக்கமின்மையாக ஆகி விடுகிறது. நமக்கு ஒழுக்கமாகக் கருதப்படும் விஷயம் அண்டை வீட்டுக் காரனுக்கு ஒழுக்கமின்மையாகத் தோன்றுகிறது. எனவே ஒழுக்கம் என்றால் என்ன என்பதைப் பற்றிய தெளிவு நமக்கு அவசியமாக இருக்கிறது. ஒழுக்கம் என்றால் என்ன ? பொய் சொல்லாமல் இருப்பதா ? களவு செய்யாமல் இருப்பதா ? புலால் உண்ணாமல் இருப்பதா ? தன் மனைவியைத் தவிர பிற பெண்கள் மேல் ஆசைப்படாமல் இருப்பதா ? கோபப்படாமல் இருப்பதா ? ஆசைப்படாமல் இருப்பதா ? பொறாமை இல்லாமல் இருப்பதா ? ஆணவமில்லாமல் இருப்பதா ? இப்படிக் கேட்டுக் கொண்டே போகலாம். அவரவர் எந்த விஷயத்தில் பலவீனமாக இருக்கிறார்களோ, அதை சரி செய்து கொள்வது ஒழுக்கம் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அது மட்டும் ஒழுக்கம் என்று உறுதியாகச் சொல்லி விட முடியாது. அப்படியானால் எதுதான் ஒழுக்கம் ? தனக்கோ, பிறர்க்கோ, உடலாலோ, மனதாலோ தீங்கு செய்யாமல் இருப்பதுதான் ஒழுக்கம்.
எனவே முதலில் ''தனக்கோ'' என்று சொல்லப்படுவதைக் கவனிக்க வேண்டும். தான் ஒருவன் தன்னளவில் ஒழுக்கமுடையவனாக இருக்க நினைத்தால், முதலில் அவன் கடைபிடிக்க வேண்டியது என்ன தெரியுமா ? பிறர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது. அதுதான் தலையாய ஒழுக்கம். அதுதான் உடலாலோ, மனதாலோ பிறர்க்கு நாம் தீங்கு செய்யாமல் இருப்பது. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உலகாய வாழ்வைப் பொருத்த வரை ஒழுக்கம் என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது அன்று. அது மனிதனால் ஆக்கப்பட்டது. மனிதத் தன்மை கொண்டது. நன்மை, தீமை என்ற பேத நிலையை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. இதையெல்லாம் கடந்தால்தான் நாம் ஆன்மீக வாழ்விற்கான நுழைவு வாயிலை அடைய முடியும். நான் ஒழுக்கமாக வாழ்கிறேன், எனது கடமையைச் செய்கிறேன், அறவழியில் நடக்கிறேன் என்ற திருப்பதியான எண்ணம் கூட இங்கே பலரின் ஆன்மீக முன்னேற்றத்திற்கான முயற்சிக்குத் தடையாகி இருக்கிறது. ஒழுக்கம் என்பது மன அமைதிக்கான ஒரு வழியே தவிர, அதுவே ஆன்மீக வாழ்வாகி விடாது.
இறைவன் எல்லோருக்குள்ளும் இருக்கிறான் என்றால், ஏன் ஒருவருக்கொருவர் ஒழுக்கத்தில் வேறுபாடு பெற்றுத் திகழ்கிறார்கள் ? இறைவனுக்கு ஏன் தெரியவில்லை, இன்னன்னார் ஒழுக்கமில்லாமல் இருக்கிறார்கள் என்று ? தெரிந்திருந்தால் அவர் ஏன் அவர்களை ஒழுக்கமுடையவர்களாக மாற்றாமல் விட்டு வைத்திருக்கிறார
் ? அவர் மாற்ற மாட்டார். நாம்தான் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் நம்மை ஒழுக்கமுடையவனாக, களங்கமில்லாதவனாக, தன்னுடைய இயல்புடையவனாகத், தன்னுடைய சாயலாகவே படைத்தார். நாம்தான் வளர வளர நம்முடைய சுய இயல்பை விட்டு விலகி வெகு தூரம் வந்து விட்டோம். மன அமைதியை இழந்து விட்டோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். நம் மனதை, வாழ்வைத் தூய்மையுடையதாக ஆக்கிக் கொண்டு, மன அமைதியோடு இறைவனை நோக்கி தியானிப்பது ஒன்றுதான். அங்குதான் ஆன்மீக வாழ்வுக்கான முயற்சியே துவங்குகிறது. மாறாக பிறர் ஒழுக்கங்களையும், நம் ஒழுக்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துப் போராடிக் கொண்டிருந்தால் உலகாய வாழ்வு கூட நரகமாகிப் போகும். அத்தகைய ஒழுக்கத்தால் யாதொரு பயனுமில்லை.
உண்மையாகவே நாம் அக்கறை கொள்ள வேண்டிய முதல் ஆள் நாம்தான். நாம் உலகத்தின் துன்பங்களைப் போக்கி விட வேண்டும் என்று நினைக்கிறோம். உலகம் மாறாது. அது அப்படியேதான் இருக்கிறது. அப்படியேதான் இருக்கும். ஒரு நாகரிகம் மறைகிறது அடுத்த நாகரிகம் தொடர்கிறது. இது தொடர் கதையாக நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. உலகம் என்னவோ மாறவேயில்லை. நாம்தான் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் ஒழுக்கம் என்ற பெயரில் ஒரு குறுகிய வட்டத்தை வகுத்து வைத்துக் கொண்டு அதிலேயே உழன்று கொண்டிருக்கிறோம். நம் பார்வையை, நோக்கத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். துன்பங்களை அனுபவிப்பதற்கான நம்முடைய திறனை பேரின்பத்தை அடைவதற்கான உறுதிப்பாடாக மாற்றிக் கொள்ளவில்லையெனில் அந்த ஒழுக்கத்தினால் யாதொரு பயனுமில்லை. ஒழுக்கமும், உள்ளுணர்வும் ஆன்மாவில் ஒடுங்கி லயமாகி விட வேண்டும். அதற்கு இறைவுணர்வோடு கூடிய ஒழுக்கம் வேண்டும். அது நமக்கு நாமே மட்டும்தான் ஏற்படுத்திக் கொள்ள முடியும். பிறர் நமக்குத் தரவும் முடியாது. நாம் பிறருக்குக் கொடுக்கவும் முடியாது.
அத்தகைய உயர்ந்த உள்ளுணர்வை அடைவதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். இங்கே நான், எனது என்று சேர்த்து வைத்திருப்பவைகள் அனைத்தையும் இறைவனிடம் கொடுத்து விட வேண்டும். வேறு வழி இல்லை. இது நமக்காக மட்டுமல்ல, மனித இனத்திற்காகவும், பிரபஞ்சத்திற்கா
கவும் நாம் செய்யும் நன்மை இதை விட வேறு எதுவுமில்லை.

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.

5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.

தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.

வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.

சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!

அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.

பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.

சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.

ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலை

உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!

ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.
about Andrew B. Newberg

ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emission Computed Tomography ). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.

பிரான்ஸிஸ்கன் நன் களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.

அந்த ஆறு முக்கிய பகுதிகள் :
1) முன் மடல் (frontal lobe)

2) லிம்பிக் அமைப்பு (limbic system)

3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulate)

4) அமிக்தலா (amygdale)

5) தாலமஸ்(thalamus)

6) சுவர் மடல்(parietal lobe)

தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.

அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்

பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.

1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!

(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)

2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.

(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் - நம்மாழ்வார்)

3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.
(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)

4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.
(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால் அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)

5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது.
(தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)

கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.

இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!

நியூரோபிளாஸ்டிசிடி
நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசி.

ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!

ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.
ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்
ஆகவே
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள்.
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும்,
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.
தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.
மூளையை மாற்றும் இறைவன்
இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!

இதன் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!!
நன்றி:
ஞான ஆலயம் ஜனவரி 2013 இதழில் வெளியான சிறப்புக்கட்டுரை
தமிழில்ச.நாகராஜன

Monday, 30 May 2016

நைவேத்தியம்

நைவேத்தியம்

சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்.

‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்?

கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல்,

அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.

அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.

குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..

” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்..

“நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”

பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான்

“ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள்.

ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”

“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?

இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?

நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”

சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.

குரு தொடர்ந்தார்,

‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.

புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம்.
இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.

இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.

நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?

அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.

ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்

நீங்களே படைப்பாளி*

🌹 *நீங்களே படைப்பாளி* 🌹

*முதலில் நாம் தேவையை உருவாக்காமலேயே, நமக்கு அது கிடைக்கவில்லை இது கிடைக்கவில்லை என வருந்துகிறோம்.*

*இப்போதே உங்கள் தேவைகள் அனைத்தையும் பட்டியல் இடுங்கள்.*

*அதை மனதில் அடிக்கடி நினைத்து வாருங்கள்.*

*உங்களுக்கு தேவையற்ற விடயங்களை மனதில் போட்டு உழற்றாமல் மகிழ்ச்சியான மன நிலையில் எப்போதும் இருங்கள்.*

*உங்கள் எண்ணம் ஒவ்வொன்றாக நிறைவேற துவங்கும்.*

*ஆம் மனதால் ஆழ்ந்து நினைப்பதை பிரபஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதே அதன் நியதி.*

*அப்படி மனதால் படைக்கப் பட்டதே பிரபஞ்சம். ஆம் உங்கள் மனதால் வேண்டியதை படைத்துக் கொள்ளுங்கள்.*

*இந்த பிரபஞ்சத்தை படைத்த அந்த மாபெரும் சக்தியே நீங்கள்தான்.*

*வாழ்க்கை அற்புதமானது. அதை கொண்டாடுங்கள். அன்பு என்கிற விசைதான் அனைத்தையும் இயக்குகிறது.*

*உங்கள் வாழ்க்கையை வழக்கம்போல் நகர்த்தாமல் சற்று மாற்றி பாருங்கள், அனைத்தும் மாறும் இது சத்தியம்✋🏽✋🏽...*

*இனிய காலை வணக்கம்*
*இந்த இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்*

வெட்கத்தில்

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!
கணவன்: என்ன?
மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???
கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!
மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….
கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..
(மறுநாள் இரவு)
கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?
மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???
கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…
மனைவி: ம்ம்… எப்படி டா!!!
கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…
நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…
மனைவி: நரகமா???
கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????
(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)