Monday, 6 June 2016

ஆன்மீகம்

சுவாமி விவேகானந்தரின் பார்வையில் ஆன்மீகம்!

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் தன் சிஷ்யர்களுடன் கல்கத்தாவிலிருந்து காசிக்கு யாத்திரையாகப் புறப்பட்டார்.

யாத்திரை செல்லும் வழியில் ஒரு ஊரில் கோயிலின் வாயிலில் குஷ்ட நோயினால் பாதிக்கப்பட்ட பலர் உட்கார்ந்து கொண்டு வருவோர் போவோரிடம் பிட்சை கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்தக் காட்சியைக் கண்ட சுவாமி விவேகானந்தரின் மனம் வேதனை அடைந்தது.

தன்னுடன் வந்த சிஷ்யர்களை அழைத்து யாத்திரைக்கு வழிச் செலவுக்கு கொண்டுவந்த தொகையைக் கொண்டு அங்கு நோயாலும், பசியாலும், குளிராலும் வாடி வதங்கிப் போயிருக்கும் மக்களுக்கு உணவும், உடையும் மருந்தும் வாங்கிவரச் சொன்னார்.

சிஷ்யர்களும் அவ்வாறே அந்த தொகையைக் கொண்டு உடையும், உணவும் மருந்தும் வாங்கி வந்தனர்.

அதைக் கொண்டு அவர்களை அருகில் இருந்த குளத்தில் குளிப்பாட்டி, அவர்களின் உடலில் இருந்த புண்களுக்கு மருந்து தடவி, பிறகு புதிய உடைகளைக் கொடுத்து அணிய வைத்து, அவர்களுக்குப் பல வகையான உணவுப் பொருள்களையும் வழங்கி மனம் மகிழ்ந்தார்.

அதன் பிறகு சுவாமி விவேகானந்தர் தனது சிஷ்யர்களைக் கூப்பிட்டு கல்கத்தாவுக்கே திரும்பிச் செல்வோம் என்றார்.

”காசி யாத்திரை செல்லவே வந்தோம், பாதியில் திரும்பச் சொல்கிறீர்களே ஏன்?” என்றனர் சிஷ்யர்கள்.

நோயாலும் பசியாலும் வாடி வதங்கிய இம்மக்களுக்குச் செய்த சேவை மூலம் நாம் இறைவனை தரிசித்த பயனை அடைந்து விட்டோம். ‘மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் பூஜை ‘ என்றார் சுவாமி விவேகானந்தர்.

இதுபோன்ற சேவையை இறைவனின் வழிபாடு எனப் பாவித்துச் செய்யுங்கள். என்னுடைய நன்மைக்காகவே நான் வழிபடுகிறேன். அதுபோல் நம்முடைய நன்மைக்காகவே நாம் ஏழை மக்களிடம் கடவுளைக் கண்டு வழிபட வேண்டும்.

எவனொருவன் எல்லா உயிர்களையும் தன்னிலும், தன்னை கடவுள் எல்லா உயிர்களிலும் இருப்பதாகக் காண்கிறானோ அவனே ஞானி. எவன் ஒருவன் இந்த வாழ்க்கையிலேயே கடவுளை அனைவரிடத்திலும் சமமாகக் காண்கிறானோ அவனே கடவுளை அடைந்ததாகக் கருதப்படுவான்.

ஏழையிடமும், பலவீனரிடமும், நோயுற்றோரிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறவன் ஆகிறான்.

விக்கிரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்பநிலையில் உள்ளது. இப்படிச் சொன்னதால் கோயில்களில் விக்ரகங்களுக்கு பூஜை, வழிபாடு கூடாது என்று கூறினார் என்று பொருள் கொள்ளக் கூடாது.

இதற்காக ஆலய வழிபாட்டை வெறுத்தார் என்பதல்ல. அவரே ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டுள்ளார். ஆனால் அதையும் தாண்டி செல்வது தான் உண்மை ஞானம் என்றுரைத்தார்.

‘ஆலயத்தில் பிறப்பது நல்லது.
ஆனால் ஆலயத்திலே செத்து மடிவது துரதிருஷ்ட வசமானது ‘ என்றார்.

அதாவது ஒருவரின் உண்மையான ஆன்மிகம் என்பது ஆலய வழிபாடு மாத்திரமல்ல, அதையும் தாண்டி, உயிருள்ள ஒவ்வொரு ஜீவர்களையும் நேசிப்பது, அவர்களுக்கு சேவை செய்வது தான். குறிப்பாக சிவ வழிபாடு என்பது அவனது படைப்பில் உள்ள சகல ஜீவர்களுக்கும் தொண்டு செய்வது தான்.

‘விக்கிரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் உள்ளது ‘ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வது இதுவே எல்லா வழிபாடுகளில் சாரமாகும். ஏழையிடமும், பலவீனரிடமும், நோயுற்றோரிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறவன் ஆகிறான்.

வேதாந்தம் புகட்டுவது "யாவற்றிலும் ஈசனே நிறைந்துள்ளான் என்பதை அறிந்து அவனுக்கே அரும்பணியாற்று" என்பதாம்.

இதுவே சுவாமி விவேகானந்தரின்
பார்வையில் உண்மையான ஆன்மிகம்.

நாமும் இத்தகைய உண்மையான ஆன்மிகத்தை உணர்ந்து கொள்ள முயற்சி செய்வோம்.

நன்றி
வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.