Monday, 6 June 2016

காதல்

கேள்வி : எல்லோருக்கும் தான் காதலிக்க வேண்டும்,  காதலிக்கப்பட வேண்டும்  என்ற ஆசை ஏன்? காதலின் முதல் காட்சி விவேகத்தின் கடைசிக் காட்சி என்கிறார்களே! இது மெய்யா?
ஓஷோ பதில் : இறைவனை நோக்கி அலைபாய்ந்து துழாவித் தடுமாறுவதுதான் காதல். ஜீவிதத்தின் ஆனந்தத்திலிருந்து பிறப்பெடுத்து வருவது காதல். காதலே நடனம். காதலே கொண்டாட்டம். நன்றி சொல்லும் பாடல். நன்றியைக் காட்டும் நடனம். எந்தக் காரணமும் இல்லாத கொண்டாட்டம். நம்மேல் சொரிந்து கொண்டிருக்கும் அற்புதமான வரத்துக்கான நன்றியுணர்வின் வெளிப்பாடே காதல். நம் மீது மட்டுமா? தூசி துரும்பிலிருந்து இறைவன் வரை பிரபஞ்சத்தில் அனைவருக்குமான பிரசாதம். காதல் என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அதுவல்ல காதல். அதனால்தான் இந்தக் கேள்வியே கேட்டிருக்கிறாய்.
        காதல் ஆன்மிகத்தின் சிகரம். காதலே மிகச் சிறந்த ஆன்மிகம்.  காதல் கடவுளைத் தேடல். உணர்வளவில் ஆரம்பத்தில் இது தெரிவதில்லை. இருட்டில் தட்டுத் தடுமாறி  தேடிக் கொண்டிருக்கும் வரைதான் அப்படி. சரியான திசையில் போயிருக்கமாட்டாய். ஆனால்  லட்சியம்  சரியானதுதான்.
         சாதாரணமான சமாச்சாரமல்ல காதல். அப்படித்தான் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்.. ஓர் ஆணுக்கும்  பெண்ணுக்கும்  இடையேயான  உடற்கவர்ச்சி அல்ல காதல். ஆனால்  அது வெறும்  ஆரம்பம். முதல் அடி. அப்போது கூட ஆழ்ந்து பார்த்தால் ஓர் ஆணும்  ஒரு பெண்ணும்  கவர்ந்திழுக்கப்படுவது மட்டுமல்ல அது, ஆண்மையும் பெண்மையும் சக்திகளாகத் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்ளும் முயற்சிதான்  அது என்பதைப் புரிந்து  கொள்வாய்.  ஏதோ ஒருவனுக்கும்  ஒருத்திக்கும் இடையேயான உறவு மட்டுமல்ல காதல். மேலு‌ம்  ஆழ்ந்த அற்புதங்கள்  அதில் புதைந்திருக்கின்றன.
         எனவே யாரும்  காதலுக்கு  இலக்கணம் வகுக்க முடியாது.  ஆயிரக்கணக்கானவர்கள்  முயன்று  பார்த்து  விட்டார்கள்.  எல்லோரும்  தோற்றுத்தான் போய்விட்டார்கள். காதல் வரையறைகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.  மேலும் மேலும்  பிடிக்குள் அகப்படாததாகவே இருக்கிறது. பாதரசத்தைப் போல உருக்கி எரிப்பதாகவே இருக்கிறது.  கட்டுக்குள் வைக்க வேண்டும்  என்று  எந்த அளவுக்கு  முயல்கிறாயோ அந்த அளவுக்குக் கட்டுப்படாததாகப் போய்விடுகிறது.
அணுக்கத்தில் இருக்க வேண்டும்  என்று  நினைக்கும்  போதெல்லாம்  தள்ளிப்போய் நின்று  கண்ணா மூச்சி காட்டுகிறது.  அதைப் பிடிக்குள் வைத்துக்  கொள்ள முடியாது.  என்னதான்  காதல் என்று புரிந்து  கொள்ளவே முடியாது.  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வர முடியாது. காதல், என்றும் அறிவு கடந்தே இருக்கிறது.
        மனிதனுக்கு எப்போதுமே எதையும்  அறிவார்த்தமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்  என்ற விழைவு இருக்கிறது. அப்படித் தெரிந்து  வைத்துக்  கொண்டால் அவனுக்கு  ஒரு  சக்தி  கிடைக்கிறது. . அப்படியே  காதலையும் ஒரு  கட்டுக்குள் கொண்டுவந்து ஆள நினைக்கிறாய். ஆனால்  அது முடியாத காரியம். உன்னைவிடக் காதல் பெரியது. அதை நீ சொத்தாக்கிக் கொள்ள  முடியாது.  உன்னைத்தான் அது தன் சொத்தாக்கிக் கொள்ளும்.  எனவே காதலைத் தனதாக்கிக் கொள்ள நினைக்கும் எவரும் அதை இன்னதெனத் தெரிந்து கொள்ளவே முடிவதில்லை. 
          காதலை யார் தெரிந்து  கொள்ள  முடியும்  என்கிறாயா? வேண்டிய தைரியம் உள்ளவர்கள், எதையும் பணயம் வைக்கத் தயாராக  இருப்பவர்கள்.  தம் வாழ்வைப் பணயம் வைத்தாவது இன்னதெனத் தெரியாதொரு சக்தி தம்மை ஆட்டுவிக்க வேண்டும்  என்று  விரும்புவர்கள், அவர்கள்தான்  காதலை இன்னதெனத் தெரிந்து  கொள்ள முடியும். 
          கடவுளை நோக்கிய முதல் அடி காதல். அதனால்தான்  புத்திமான்களுக்குக் காதல் பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறது.  அவர்களுக்குக் காதலின் அற்புதம்  இன்னதெனத் தெரியாது. புத்தியைக் கொண்டு  காதலை அளக்க நினைக்கும் முட்டாள்கள்.
         நெஞ்சம் மட்டுமே  காதலைப் புரிந்து  கொள்ளும். மறந்துவிடாதே! சிறந்தது எல்லாமும்  நெஞ்சத்துக்கு மட்டுமே  கிடைப்பவை. வாழ்வின் உயர்ந்த  மதிப்பிற்குரிய அனைத்துக்கும் நெஞ்சமே வாயில். அனைத்தையும்  கடந்து  உயர்ந்து ஓங்கி நிற்கும் விஷயங்களுக்கான வாயில் நெஞ்சமே.
        புத்தி உபயயோகமான ஒரு கருவி மட்டுமே.  அது ஓர் பயனுள்ள இயந்திரம். கடைவீதிக்குச் சரிதான்.  ஆனால்  கோயிலுக்குப் போகும்போது பயன்படாது. காதலோ ஒரு கோயில். கடைச்சரக்கல்ல. காதலைக் கடைவீதிக்குத் துரத்தினால் அசிங்கமான காமமாகத் தாழ்ந்துவிடும்.
         அதைத்தான் எல்லோரும் செய்து கொண்டிருக்கிறார்கள். கடவுளை நோக்கிக் காதலை உயர்த்தாமல் அசிங்கமான மிருகத்தனமான காமமாக அதை மாற்றி  வைத்திருக்கிறார்கள்.  இதில் ஒரு விநோதம் பார். பூசாரிகள், அரசியல்வாதிகள்,  பரிசுத்தம் பேசுகிறவர்கள்  என்று  யார் காதலைக் காமமாக நிலை தாழ்த்தி வைத்திருக்கிறார்களோ அவர்களே காமத்துக்கு  எதிராகவும்  இருக்கிறார்கள்.  இவர்கள்தான்  அருமையான  சத்தியங்கள் கொண்டதொரு சக்தியை அழித்தவர்கள்.
          சேற்றில்  கிடைக்கும்  செந்தாமரை காதல். சேற்றிலிருந்துதானே தாமரை தோன்றி  வருகிறது!  சேற்றிலிருந்து  வருகிறது  என்பதால் தாமரையை  வெறுத்து ஒதுக்குகிறாயா என்ன? சேறு பூசிக் கிடக்கிறது  என்கிறாயா? அழுக்காக இருக்கிறது  என்கிறாயா?
        காமம் பெற்றெடுப்பது காதல்.  காதல் பெற்றெடுப்பது  பிரார்த்தனை.  பிரார்த்தனையிலிருந்து  தோன்றுகிறவர் கடவுள்.  இப்படி மேலே  மேலே  என்று  உயர்ந்து கொண்டே போக வேண்டியதுதானே!
        ஆனால்  அற்புதமான காதலை அசிங்கமான காமமாக மாற்றியவர்கள் இந்தப் பூசாரிகளும் பரிசுத்தவாதிகளும்தான். காதல் காமம் மட்டுமேயாகும்போது அசிங்கமாகிப் போகிறது. அதைப் பற்றிய குற்றக் குறுகுறுப்பு வந்துவிடுகிறது. அந்தக் குற்ற உணர்வின் வெளிப்பாடே காதலின் முதல் காட்சி  விவேகத்தின் கடைசிக் காட்சி  என்று சொல்வது. என்னைக் கேட்டால்  அதைச் சற்றே மாற்றிக் கொள்ளலாம் என்பேன்.  காதலின் முதல்  காட்சியே விவேகத்தின் முதல்  தரினம்.
         ஆனால்  நீ எப்படி அதைப்  பார்க்கிறாய் என்பதைப் பொறுத்துதான் அது. காதலின் சாத்தியக் கூறுகளைப் பார்க்கிறாய் என்றால்  எந்த அளவுக்கு  உயர முடியும்  என்பதை உணர முடியும்  என்றால்  காதல் ஓர் ஏணியாகிப் போகிறது. சேற்றை மட்டுமே  பார்த்துக் கொண்டிருந்து விட்டு  அந்தச் சேற்றிலிருந்து  என்னென்னவெல்லாம் மலர முடியும்  என்பதைத் தெரிந்து  கொள்ளாமல் இருந்தால்  காதல் அசிங்கமானதுதான். காதலுக்கு  எதிராகப் பலமான எதிர்ப்பு உனக்குள்  தோன்றும்தான்.
          ஆனால்  காதலை விரோதித்துக் கொள்வது கடவுளை விரோதித்துக்  கொள்வது  என்றுதான்  நான்  சொல்வேன்.
        காதலை நிராகரித்தால் நீ தொலைந்து  போவாய். வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடும். காமத்தை அதன் இயல்பான உயர்நிலைக்குப் போக விடவில்லையென்றால் உன் வாழ்வே துயரமாகிப் போகும்.
          காதல் கடவுள் தந்த மிகப் பெரிய வரம். அந்தக்  கலையைக்  கற்றுக் கொள். அதன் கீதத்தைக் கற்றுக்  கொள். காதல் ஓர் அத்தியாவசியத் தேவை. உணவில்லாமல்  உடல் உயிர்த்திருக்க முடியாது.  அப்படியே காதல் இல்லாமல் ஆன்மா உயிர்த்திருக்க  முடியாது.  காதலே ஆன்மாவின்  போஷாக்கு. உயர்ந்ததெல்லாம் ஆரம்பமாவது காதலில்தான். தெய்விகத்துக்கு நுழைவாயில் காதலே!.     ஓஷோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.