வித்யா கர்வம் ஒருவனுக்கு கூடாது: காஞ்சி பெரியவர்!
ஒரு சமயம் மஹா பெரியவர் மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் தங்கி இருந்தார். ஒரு அரசமரத்தின் கீழ் இளைப்பாறிய அவர் மரத்தின் வேரில் தலையை வைத்துப் படுத்துக் கொள்வார். முன்னால் திரை போட்டிருக்கும். பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் சமயத்தில் மட்டும் திரையை விலக்குவார்கள்.
அன்று சென்னையில் இருந்து வீணை வித்வான் ஒருவர் பெரியவரைத் தரிசிக்க நண்பருடன் வந்திருந்தார். பெரியவரைத் தரிசனம் செய்த அவர் அவரது அனுமதி பெற்று வீணையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பக்தர்கள் எல்லாரும் அந்த இசை மழையில் நனைந்து கொண்டிருந்தனர். வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட தயாரானார் வித்வான்.
பெரியவர் அவரிடம் அந்த வீணையை என்னிடம் கொடு. நான் அதை வாசிக்கலாம் இல்லையா? என்று கேட்டார். பெரியவர் வீணை வாசிக்கப் போகிறாரா என்று எல்லாருக்கும் திகைப்பு. வித்வான் உட்பட..! ஆனால் எதற்காக வாசிக்க இருக்கிறார் என்பது மட்டும் யாருக்கும் புரியவில்லை.
வீணையைக் கையில் வாங்கிய பெரியவர் சுருதி கூட்டி வித்வானிடம் காட்டினார். நான் சுருதி கூட்டியிருப்பது சரியா இருக்கான்னு பாரு என்றார்.
வித்வானும் சரியா இருக்கு என்று சொல்ல பெரியவர் வீணை வாசிக்க ஆரம்பித்து விட்டார். சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும்! வித்வான் பெரியவரின் பாதங்களில் விழுந்தார்.
கன்னத்தில் போட்டுக் கொண்டு பெரியவா! என்னை மன்னிக்கணும்! என்னை மன்னிக்கணும்! தப்பு பண்ணிட்டேன்! தப்பு பண்ணிட்டேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே கதறி அழ ஆரம்பித்து விட்டார். பெரியவர் வாசித்து முடித்தார். பின் வீணையை அவரிடம் திருப்பிக்கொடுத்து வித்யா கர்வம் ஒருவனுக்கு கூடாது. கவனமாக இரு என்று சொல்லி ஆசிர்வாதமும் செய்தார்.
வித்வானுடன் வந்த நண்பருக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. பின் நண்பர் வித்வானிடம் இங்கே என்ன நடந்தது? நீ தப்பு பண்ணிட்டதா கதறி அழுதே! பெரியவர் வித்யாகர்வம் கூடாது என்றார். அப்படி என்ன தான் இங்கு தவறு நடந்தது? என்றார்.
வித்வான் திகைப்பு கலையாமல் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
கைலாய மலையைத் தூக்க முயன்ற ராவணனின் கைகள் மலையின் அடியில் சிக்கிக் கொண்டன. அப்போது அவன் சாமகானம் இசைத்து சிவனை மகிழ்வித்து விடுதலை பெற்றான் இல்லையா! அது போல நானும் இங்கே சாமகானம் வாசிக்க துவங்கினேன். ஆனால் திடீரென எப்படி வாசிப்பது என்று மறந்து போய்விட்டது. இது யாருக்கு தெரியப்போகிறது என ஏதோ ஒன்றை வாசித்து நிறைவு செய்து விட்டேன். பெரியவர் இதைக் கண்டு பிடித்து விட்டார். என்னிடம் வீணையை வாங்கி அந்தப் பகுதியை சரியாக வாசித்து நிறைவு செய்து விட்டார்.
பெரியவர் ஸர்வக்ஞர் (எல்லாம் அறிந்தவர்). அவருக்கு எல்லாம் தெரியும் என்பது எனக்கு தெரியாமல் போச்சே! அபச்சாரம் பண்ணிட்டேனே! அதனால் தான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்றார்.
நமக்கு தெரிந்ததைச் செய்ய வேண்டும். தெரியாத விஷயங்கள் தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இதன் மூலம் வாழும் தெய்வமான மஹா பெரியவர் நமக்கு தெரியப்படுத்தியுளார்.
Monday, 6 June 2016
வித்யா கர்வம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.