Friday, 1 April 2016

சீடனின்தன்மை

ஓஷோ ஞானக்கதைகள் - 3

சீடனின்தன்மை

இது ஒரு மிகவும் அழகான கதையாகும். ஆன்மீகத்தின் முழு வரலாற்றிலும் இதற்கு இணையான கதையே கிடையாது. ஆகவே இதை புரிந்து கொள்ள வேண்டும். நீ இதை தவறாக புரிந்து கொள்வாய். இதை தவறாக புரிந்து கொள்வது
மிகவும் எளிது. இதை படிக்கும் யாரும் எப்படி புரிந்து கொள்வார்களோ அப்படித்தான்
நீயும் புரிந்து கொள்வாய். 

கேள்வி எழும் : இரண்டு ஞானமடைந்த மனிதர்கள் ஏன் தங்களது
குரு இறந்ததால் பாதிக்கப்பட்டனர் ? அவர்கள் பாதிக்கப்படவேயில்லை.
அது துயரத்தினால் நிகழ்ந்ததல்ல. அது முற்றிலும் வேறுபட்ட பரிமாணம்.

ரஜப் திரும்பவும் தனது கண்களை திறக்கவேயில்லை. அவரிடம் ஒருமுறை ஏன் அவர் தனது கண்களை திறப்பதேயில்லை என்று கேட்கப்பட்டது. அவர், “நான் இந்த உலகிலேயே மிக அழகான விஷயத்தை பார்த்து விட்டேன். இனி பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை” என்று கூறினார்.

டாடூ ஒரு மிக அழகான மலர். இப்போது உனது கண்களை திறந்து வைப்பதால் என்ன பயன் ? உன்னிடம் கோஹினூர் வைரம் இருக்கும்போது நீ எதற்காக கடற்கரை கூழாங்கற்களை சேகரிக்கிறாய் ? – சேகரிப்பாயா ? ரஜப் பாதிக்கப்படவில்லை. சோகத்தினால் அவர்
தனது கண்களை மூடிக்கொள்ளவில்லை. அவர் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட
வரவில்லை. அவர் அழவில்லை, அவர் தேம்பவில்லை.

மூடிய கண்களுடன் அவர் டாடூவின் பாடல்களை பாடி ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்,  “ஒருமுறை கடவுளை மனித உருவில் பார்த்துவிட்டால் பின் வேறு என்ன இருக்கிறது பார்ப்பதற்கு ? வேறு எதுவும் பார்ப்பதற்கு இல்லை ! நான் எனது கண்களில் பதிந்துள்ள எனது குருவின் உருவத்தை எனது இறுதி பதிவாக வைத்திருக்க விரும்புகிறேன். அதைத் தவிர வேறு எதையும் அதில் படியவைக்க விரும்பவில்லை. அது தூசியால் மூடப்படவும் விரும்பவில்லை. “ என்றார். 

அம்புபாய், இப்போது இந்த முழு கதையும் வேறுவிதமாக தோன்றுகிறது. இது மிக அபிரிதமான அன்பு. இது குருவின் உடலோடு கொண்டுள்ள ஈடுபாடு அல்ல. இது மிகப் பெரிய புரிதலாகும்.

நீ ஒரு முறை குருவை பார்த்துவிட்டால் !! ரஜப் தனது குருவோடு நெருக்கமாக
வாழ்ந்துவந்தார். அவர் தீட்சை பெற்றபோது அவருக்கு வயது ஏழு. மிகச்சிறிய பையன். ஒரு
திருவிழாவில் கலந்துகொள்ள தனது பெற்றோர்களுடன் அவர் வந்திருந்தார். அவருக்கு
டாடூவைப் பற்றி எதுவுமே தெரியாது. டாடூவும் அப்போது அங்கிருந்தார். டாடூ
ஞானமடைந்தவர் என்பது நாடெங்கும் அறிந்த செய்தியாதலால் ரஜப்பின் பெற்றோர் அவரை
வணங்கி செல்ல போனார்கள். அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, எனினும் அந்த நாடு பாரம்பரியமும் பழமையும் வாய்ந்தது. யாராவது ஞானமடைந்தவர்கள் என்று கேள்விப்பட்டால் அது உண்மையோ, பொய்யோ, போய் அவர்கள் காலை தொட்டு வணங்கி விட்டு வருவார்கள். உண்மையிலேயே அவர் அடைந்திருந்தால் ஏன் வாய்ப்பை தவற விட வேண்டும் ? அவர் உண்மையிலேயே அடையவில்லை யென்றாலும்
உனக்கு ஒன்றும் இழப்பில்லையே.! இது தந்திரமானது, வியாபாரத்தனமானது.

பெற்றோர் சென்றனர். ரஜப் தொடர்ந்தார். பெற்றோர் அவரது காலை தொட்டு வணங்கினர், ஆனால் ரஜப் நிலைமாற்றமடைந்துவிட்டார். அவர் டாடூவை பார்த்த கணமே தனது சென்ற பிறவிகளிலிருந்து ஏதோ ஒன்றை அடையாளம் கண்டுவிட்டார். இந்த மனிதன் புதிதல்ல. இந்த குணங்களும் புதிதல்ல. அவரை முன்பே தனக்குத் தெரியும் என்பதை உணர்ந்து கொண்டார். நீ ஒரு குருவுடன் வாழ்ந்திருந்தால் உடனடியாக அவரை அடையாளம் கண்டு கொள்வது எப்போதும் நிகழ்வதுதான்.

அவர் அவரது காலடியில் விழுந்துவிட்டார். பெற்றோர் ரஜப்பை தங்களோடு அழைத்து செல்ல மிகவும் முயற்சித்தனர். ஆனால் ரஜப், “ நான் எனது உண்மையான பெற்றோரை
கண்டுவிட்டேன். நீங்கள் போகலாம் “ என்றார். “ நீங்கள் டாடூவின் காலை தொட்டு வணங்கியது போல நானும் உங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன், சென்று வாருங்கள் “ என்று கூறி விட்டார், ஏழு வயது பையன்.  பல முற் பிறவிகளில் இந்த பக்குவம் வந்திருக்க
வேண்டும்.

பெற்றோர் கதறி அழுதனர், ஆனால் ரஜப்,  “சாத்தியமேயில்லை, நான் அவரை
கண்டுவிட்டேன், இனி ஒரு கணம் கூட அவரை விட்டு விலக என்னால் முடியாது.” என்று கூறி விட்டார்.

அப்போதிலிருந்து இருபது வருடங்கள் அவர் தனது குருவின் அருகிலேயேதான் இருந்தார். அவரது தேவைகளை கவனித்துக் கொண்டு, அதே அறையில் தூங்கிக் கொண்டு, அவருக்கு என்ன தேவைப்படுகிறது என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்.

டாடூ இறந்த அன்று ரஜப் வெறுமனே தனது கண்களை மூடிக் கொண்டுவிட்டார். அது இந்த உலகுக்கு தனது கண்களை மூடிக் கொண்டுவிடுவது. அவர், “ இப்போது பார்ப்பதற்கு எதுவும்
இல்லை, எதை பார்க்கவேண்டுமோ அதை நான் பார்த்துவிட்டேன். இப்போது ஏன் அனாவசியமாக கண்களை வீணடித்து குப்பையை சேகரித்துக் கொள்ள வேண்டும் ? நீ ஒரு முறை கடவுளை பார்த்து விட்டாலே போதும் ! அங்கு வேறு எதையும் பார்க்க வேண்டிய தேவை இல்லை. நீ இறுதியானதை பார்த்துவிட்டாய் “ என்று கூறியிருக்கிறார்.

அம்புபாய், ரஜப் தனது கண்களை மூடிக் கொண்டது பந்தத்தினால் அல்ல. அது மிகப் பெரிய புரிதலில் இருந்து வந்தது. அவர் துக்கப்படவில்லை. அவர் நடனமாடிக் கொண்டிருந்தார், அவர் வாழும்வரை மூடியகண்களுடன் பாடியபடி ஆடிக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் தனது குருவை உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தார். இருபது வருடங்கள் தொடர்ந்து தனது குருவுடன் தொடர்பு கொண்டிருந்தார் அவரது குரு கிட்டத்தட்ட அவரது உயிர் போலாகி விட்டார். கண்களை மூடியதன் மூலம் அவர் தனது குருவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். அவரை தவறாக புரிந்து கொள்ளாதே.

ரஜப் இது வரை இருந்த மிக அழகான சீடர்களில் ஒருவர்.

மற்றொரு சீடரான சுந்தரோ-வுக்கு நடந்தது  என்ன? டாடூ இறந்தவுடன் அவர் படுக்கையில் படுத்துக் கொண்டார். அவர் அந்த படுக்கையிலேயே சாகும்வரை இருந்தார். அந்த படுக்கையை விட்டு அவர் நகரவே இல்லை. குரு அவரது வாழ்நாள் முழுவதும் அந்த படுக்கையில தான் படுத்திருந்தார், அதில் அவரது அதிர்வு இருந்தது, அவரது இருப்பு இருந்தது, அது அதில் முழுமையாக நனைந்திருந்தது. அவர் படுக்கையை விட்டு நகரவேயில்லை. ஏன் என்று மக்கள் கேட்டனர்.

அதற்கு சுந்தரோ “ போவதற்கு வேறு எந்த இடமும் இல்லை. நான்
வந்தடைந்துவிட்டேன். இதுதான் என் வீடு. இதுதான் என் சொர்க்கம், இதுதான் என்
மோட்சம். இந்த படுக்கையில் என் குரு உருவாக்கியுள்ள இந்த அற்புதமான இடத்தில்தான்
நான் இருக்க விரும்புகிறேன், இறக்க விரும்புகிறேன். “ என்றார்.

நீ உனது வாழ்வையும் சாவையும்   தனியாக பார்க்காமல் உன்னுடைய குருவுடன் ஒன்றிப்
போய் விடுகிறாய். இதுதான் அதன் பொருள். சுந்தரோ சில சமயங்களில் டாடூவைப் போல
பேசும் அளவு தன் குருவுடன் ஒன்றி போய் விட்டார். மக்கள் அவரிடம், “ நீங்கள் டாடூ அல்ல! “ என்று கூறுவர்.

பின் அவர், “ஆம், என்னை மன்னித்து விடுங்கள். நான் மறந்து
விட்டேன். ஆனால் உண்மையில் என்னை கேட்டால் நான் டாடூதான். நான் என் குருவுடன்
ஒன்றி விட்டேன் “ என்று கூறுவார்.

இதுதான் சீடனாக இருப்பதன் இறுதி
நிலை. சீடன் குருவுடன் ஒன்றி போய் விடுதல். அவர், தான் டாடூ என்று கூறுவார். அவர் பாடல்கள் எழுதுவார், ஆனால் அதில் அவரது பெயர் இருக்காது, டாடூவின் பெயர்தான் இருக்கும். மக்கள் இது தவறு என்று நினைப்பர். பண்டிதர்கள் சுந்தரோ எழுதிய பாடல்களை இடம் மாற்றியமைத்து விட்டனர். அவர்கள் அது டாடூவின் பாடல் அல்ல என்று நினைத்தனர்.

ஆனால் நான் சொல்கிறேன் அது டாடூவிடமிருந்துதான் வந்தது. சுந்தரோ டாடூவின் வாயில் இருக்கும் ஒரு புல்லாங்குழல் தான். சுந்தரோ ஒரு தனிபட்ட நபராக அங்கு இருக்கவில்லை. இதுதான் ஒரு சீடனின் மிக அதிகபட்ச உயர்நிலை. சீடனும் குருவும் சந்தித்து, இணைந்து ஒன்றாகி விட்டனர். சுந்தரோ தனது குருவுடன் ஒன்றாகி விட்டதால் அவருக்கு டாடூ என்று கையெழுத்திட எல்லா உரிமையும் உண்டு. அவர் தனது கவிதைகளில் டாடூ என்றுதான் கையெழுத்திடுவார். சுந்தரோ என்று கையெழுத்திட மாட்டார். மேலும் நான் முழுமையாக அவருடன் ஒத்துப் போகிறேன். மேலும் இந்த பண்டிதர்கள் இன்னும் சிறிதளவு உணர்வோடு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். 

இவை கல்வியறிவுக்கானவை இல்ல. இவை கற்கும் மனிதர்களுக்கானவை அல்ல. இவை நேசிப்பவர்களுக்கானவை. நேசிப்பவர்களால் மட்டும்தான் இது போன்ற விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். என்ன ஒரு அழகான விஷயம்.! ஒரு சீடன் தனது பெயரை கையெழுத்திட மறந்து குருவின் பெயரை எழுதுவது என்பது என்ன ஒரு அற்புதமான விஷயம்.

சில சமயங்களில் மக்கள் டாடூவை அழைக்க வருவார்கள், அப்போது சுந்தரோ, “ சரி, நான் வருகிறேன்.” என்பார்.

அப்போது அவர்கள், “ நாங்கள் உங்களை அழைத்துப் போக
வரவில்லை, நாங்கள் டாடூவை அழைத்துப் போக வந்தோம்” என்பர்.

சுந்தரோ, “நான் யார் ? ஏன் அனாவசியமாக அந்த வயதான மனிதனை தொந்தரவு
படுத்துகிறீர்கள் ? நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். என்னால் வெகுதூரம் பயணம் செய்ய முடியும். என்னால் வர முடியும். ஏன் அவரை தொல்லை செய்ய வேண்டும் ? என்று சொல்வார்.

மேலும் டாடூ சில சமயங்களில் சுந்தரோவை அனுப்புவார். மக்கள் டாடூவை அழைப்பார்கள், அவர் சுந்தரோவை அனுப்புவார். நாம் குருவை தானே அழைத்தோம், சீடரை அழைக்க வில்லையே என்று மக்கள் குழம்பி போய் விடுவார்கள். ஆனால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. குருவும் சீடனும் நேசிப்பின் உச்சத்தில் ஒருவருக்குள் ஒருவர் கரைந்து போய் விட்டனர்.

ஆகவே டாடூ இறந்த அன்று சுந்தரோ அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தகனத்திற்கு கூட செல்ல வில்லை. எல்லோரும் தகனத்திற்கு சென்று விட்டனர். ஆயிரக்கணக்கான சீடர்கள் கூடி விட்டனர், எல்லோரும் அழுது கொண்டும் கதறிக் கொண்டும் இருக்கின்றனர். எல்லோரும் துயரத்தில் இருந்தனர். ஆனால் சுந்தரோ என்ன செய்தார். அவர் தனது குருவின் படுக்கையறைக்குள் நுழைந்து அவரது
படுக்கையில் படுத்துக் கொண்டு, அவரது போர்வையை போர்த்திக் கொண்டு தானே டாடூவாகி விட்டார். போன மக்கள் திரும்பி வந்து பார்த்தவுடன், இது கிறுக்குத்தனம் என்று
நினைத்தனர். அவர்கள் சுந்தரோவிடம், இது சரியல்ல, நீ பைத்தியமாகி விட்டாய் உனக்கு
கிறுக்கு பிடித்திருக்கிறதா  என்ன ? இது குருவின் படுக்கை ! எழுந்திரு! என்றனர்.

ஆனால் சுந்தரோ, “ நான் இனிமேல் இல்லை. சுந்தரோ இறந்து
விட்டான். நீங்கள் அவனது தகனத்திற்கா சென்றிருந்தீர்கள்? நீங்கள் சென்று அவனை எரித்து விட்டு வந்திருக்கிறீர்கள். நான் டாடூ. இனி என்னில் டாடூதான் செயல்படுவார் என்றார்.

அதனால்தான் அம்புபாய், அவர் படுக்கையை விட்டு எழவேயில்லை. ஒரு கணம் கூட எழவில்லை. அவர் அந்த படுக்கையிலேயே வாழ்ந்து அந்த படுக்கையிலேயே இறந்துபோனார். ஏனெனில் இவர் தனது குருவுடன் ஒன்றி குருவாகவே மாறிவிட்டார்.

நான் இந்த விளையாட்டை MAD விளையாட்டு எனறழைக்கிறேன்.  MAD  என்றால் M என்பது  MASTER  என்ற குருவையும் D என்பது DISCIPLE என்ற சீடனையும் குறிக்கும். குரு –
சீடன் விளையாட்டு  அதுதான் கிறுக்கு – MAD – விளையாட்டு. நீ கிறுக்கனானால் ஒழிய உன்னால் இதை புரிந்து கொள்ள முடியாது.

மேலும் அம்புபாய், சிறிது கிறுக்குத்தனம் உன்னுள் நுழைந்திருப்பதை பார்க்கிறேன், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீ வந்துகொண்டேயிருக்கிறாய். நீ புத்ததளத்திலிருந்து வெகுநாள் தள்ளி  இருக்க முடியாது. நீ நெருங்கி வருவதை நான் பார்க்கிறேன். கூடிய விரைவில் ஆரஞ்சு வண்ணம் உன் வண்ணமாகப் போகிறது. நீ உனது உடலை விட்டு நீங்கும் முன் இது நிகழ்ந்துவிடும் என்ற நம்பிக்கையோடு நானிருக்கிறேன்.

ரஜப் போல மாறு, சுந்தரோ போல மாறு அவர்களை பற்றி நினைத்துப் பார்க்காதே. அவர்கள் கண்டனம் செய்வதற்கானவர்கள் அல்ல. அவர்கள் வாழ்ந்து பார்ப்பதற்கானவர்கள். வாழ்வதன் மூலம் மட்டுமே அது போன்ற அற்புதமான ஒரு விஷயத்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.