ஸ்ரீ ராம நவமி
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார்.
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராமநவமியாக கொண்டாடப்படுகிறது.
ராம நாமமானது அஷ்டாட்சரமான 'ஓம் நமோ நாராயணாய' என்பதில் உள்ள 'ரா' என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான 'நமச்சிவாய' என்ற எழுத்தில் 'ம' என்ற எழுத்தையும் சேர்த்து 'ராம' என்றானது.
ராவணனை அழிப்பதற்காக பூமியில் தோன்றிய ஸ்ரீராமனின் அவதார வரலாறு மகிமை வாய்ந்தது.
அயோத்தியை ஆண்டுவந்த தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் உண்டு. தனது புஜ, பல பராக்கிரமத்தால் உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டிய தசரதருக்கு, நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாதது பெரும் மனக் குறையாக இருந்தது. இதுபற்றி தனது குல குரு வசிஷ்ட மகரிஷியிடம் அவர் கூறினார்.
வசிஷ்டரின் ஆலோசனைப்படி, மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஸ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தின் விளைவாக யக்னேஸ்வரர் தோன்றி பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தை கொடுத்து, அதை மனைவிகளிடம் கொடுக்கும்படி கூறினார். தசரதர் பாயசத்தை தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர்.
பங்குனி மாதம் நவமியன்று கோசலை ராமபிரானை பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர்.
தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன், வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வாமித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதிலையை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார்.
கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில், வாலியை வதம் செய்தார். பின்னர் சுக்ரீவன், அனுமன் ஆகியோர் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்து விபிஷணனை இலங்கையின் அரசனாக நியமித்தார்.
சீதையை தீக்குளிக்க செய்து புஷ்ப விமானத்தில் அழைத்து கொண்டு, அயோத்தி சென்று முடிசூடி நல்ல முறையில் அரசாண்டார்.
ராமன் பிறந்த காலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது.
அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.
'குலம் தரும், செல்வம் தந்திடும். அருளோடு பெரும் நிலம் அளிக்கும். பெற்ற தாயினும் ஆயினச் செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன். அது நாராயணா என்னும் நாமம்' என்று திருமங்கை ஆழ்வார் நாராயணநாம மகிமை பற்றி குறிப்பிடுவார்.
அதைப்போல் ராம நாமமும் மகத்துவம் நிறைந்தது.
இருணு என்ற மகரிஷியின் மகன் ரிட்சன். வேடர் குலத்தை சேர்ந்த இவன், அதே குலப் பெண்ணை திருமணம் செய்து கொண்டான். அவர்களுக்கு பல குழந்தைகள் பிறந்தன. வேட்டையாடியும், வழிப்பறிகள் செய்தும் குடும்பம் நடத்தி வந்தான். ஒரு முறை ரிட்சன் முனிவர்கள் சிலரை தடுத்து வழிப்பறி செய்தான்.
அவர்கள் ரிட்சனிடம், 'நீ வழிப்பறி செய்த பொருட்களை பங்கிடும் உனது உறவினர்கள், அதனால் ஏற்படும் பாவங்களையும் பங்கிட்டு ஏற்று கொள்வார்களா?' என்று கேட்டனர்.
'நிச்சயம் ஏற்று கொள்வார்கள்' என ரிட்சன் கூற, 'நீ உன் உறவினர்களிடம் சென்று கேள்' என்று முனிவர்கள் கூறினர்.
வீட்டிற்கு சென்ற ரிட்சன் தனது உறவினர்களிடம் விவரத்தை கூறினான்.
ஆனால் அவன் செய்த பாவத்தை பங்கிட்டு கொள்ள அவர்களில் எவரும் தயாராக இல்லை. ரிட்சன் உண்மையை உணர்ந்தான். முனிவர்களை தேடி சென்று தனக்கு வழிகாட்ட வேண்டுமென்று பணிந்தான்.
முனிவர்கள் அங்கிருந்த ஒரு மரத்தை சுட்டிக் காட்டி 'மரா' என்ற சொல்லை கூறி தவம் இருக்கும்படி கூறினர். அதன்படி ரிட்சன் 'மரா' என்ற மந்திரத்தை உருவேற்றிய வண்ணம் கடுந்தவம் புரிந்தான். ஆண்டுகள் கடந்தன. ரிட்சன் மீது புற்று வளர்ந்தது. 'மரா' என்ற மந்திரம் 'ராம' என்ற மந்திரமாக உருமாறியது. அது பேராற்றலை அவனுக்கு வழங்கியது. முனிவர்கள் புற்றினுள் ஒலித்த ராம மந்திரத்தை கேட்டனர். புற்றை பிளந்து கொண்டு வந்த ரிட்சனுக்கு, அது மறுபிறப்பாக அமைந்தது. முனிவர்கள் அவனை வால்மீகி என்று அழைத்து வாழ்த்தினர். இவரே வடமொழியில் ராமாயணத்தை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரதமுறை
ராமநவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைப் பிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
சாதம், பாயசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்று உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். அன்று ஸ்ரீராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராமநவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிராணை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.
ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.
அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் கேட்ட வரம்
'நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை' என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.
இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமனை ஆஞ்சநேயர், தியாகபிரம்மர், ராமதாசன், துளசிதாசன், கம்பன், வால்மீகி ஆகியோர் பூஜித்து பலன்பெற்றனர்.
ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன்பத்து எனப்படும். பிறந்த தினத்தில் இருந்து கொண்டாடப்படும் பின்பத்து நாட்கள் பின்பத்து எனப்படும். பல வைணவ ஆலயங்களில் முன்பத்து, பின்பத்து என சிறப்பாக விழா கொண்டாடுவர். ராமாயணம் படிப்பதும் சொற்பொழிவுகளை செய்வதும் உண்டு. ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து மகிழ்வார்கள்.
விசிறித்தானம்
ஸ்ரீராமநவமியன்று விசிறிகளை பிறருக்கு தானமாக வழங்குகின்றனர்.
ஸ்ரீராமருக்கு எல்லோரும் சேவை செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாகதான் விசிறி வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்றவற்றையும் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் மகரிஷி விஸ்வமித்திரரோடு சென்றபோதும், 14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததோ சித்திரை மாதம் கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர் களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது. மேலும் பக்தர்கள் அன்று தங்கள் சக்திக்கு ஏற்றப்படி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை ஒருவருக்கு தானமாக வழங்கலாம்.
-சிவம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.