Monday, 11 April 2016

பிடிப்பின் வலை

ஓஷோ ஞானக்கதைகள் - 11
பிடிப்பின் வலை

எனக்கு ஒரு கதை நினைவுக்கு
வருகிறது. ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் தனது தலைமை சீடரை
அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு
போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார்.

“இது என்ன? எதற்காக அவர் என்னை கூப்பிட்டு
வீட்டிற்க்குள் பூனையை அனுமதிக்காதே” என்றார் என்று புரியவில்லை அந்த
தலைமை சீடருக்கு. அவர் வயது முதிர்ந்த கிழவர்களிடம் கேட்டுப்பார்த்தார். இதில் ஏதோ
ஒரு செய்தி இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். இது ஏதோ ஒரு குறியீடாக
இருக்கலாம், இல்லாவிடில் அவர் இதை ஏன் சொல்ல வேண்டும் இதற்கு எந்த விளக்கமும்
கொடுக்காமல் அவர் இறந்து போய் விட்டார். ஏன் நீங்கள் பூனைகளுக்கு எதிராக
இருக்கிறீர்கள் என்று நான் கேட்டிருப்பேன். உங்களது வாழ்க்கை முழுவதும்….  உங்களது ஒழுக்கம் வழிமுறை நெறிமுறை விளக்கம் வரையறை அனைத்தும் இதற்குத்தானா? – பூனையை வீட்டினுள்
அனுமதிக்காதே.

ஒரு வயதான மனிதர் கூறினார், “எனக்கு அது என்ன என்று தெரியும். இது அவரது குருவால் அவருக்கு கொடுக்கப்பட்டசெய்தி. ஏனெனில் அவர் ஒரு பூனையால் அவதிக்குள்ளானார். அந்த குரு கிராமத்துக்கு
வெளியே ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவரிடம் இரண்டே இரண்டு கோவணங்கள் மட்டுமே
இருந்தன”.

ஒரு துறவிக்கு அது மட்டுமே உடை.
உங்களுக்கு அது உள்ளாடை ஆனால் அவருக்கு அது மட்டுமே ஆடை.

அவரிடம் இரண்டு கோவணங்கள் மட்டுமே
இருந்ததில் பிரச்னை என்னவென்றால் அங்கிருந்த எலிகள் அவருடைய கோவணத்தை கடித்து
விடுகின்றன. அவர் கிராமத்திலுள்ளவர்களிடம் “இந்த எலிகள் மிகவும் தந்திரமானவை. அவை
என்னுடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. என்ன செய்வது?” என்று கேட்டார்.

ஒருவர், “அது மிகவும் சுலபம். நாங்கள்
கிராமத்தில் பூனையை வைத்துக் கொள்வோம். நீங்களும் ஒரு பூனையை வைத்துக்
கொள்ளுங்கள். நான் ஒரு பூனையை பிடித்துவந்து தருகிறேன்.” என்றார்.

அந்த குரு, “சரி, இது ஒரு எளிய வழிதான்.” என்று ஒத்துக் கொண்டார்.

பூனை வந்தது. அது அதன்  வேலையை மிகச் சரியாக செய்தது. எல்லா எலிகளையும்
தின்று முடித்து விட்டது. இப்போது பிரச்னை துவங்கி விட்டது. எலிகள்
தீர்ந்துவிட்டன. பூனைக்கு பசி வந்துவிட்டது. அது எனக்கு பால் வேண்டும் எனக்
கேட்டது. அது எப்போதும் துறவி எதிரே வந்து பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தது.
பூனைகள் பசியோடிருக்கும்போது பார்த்தால் மிகவும் பாவமாக தோன்றும். அது அதன் வேலையை
முடித்து விட்டது. ‘நான் உனக்கு என்னாலான எல்லா
உதவிகளையும் செய்து விட்டேன், எல்லா எலிகளையும் தின்று விட்டேன். ஆனால் இப்போது
எனக்கு பசிக்கிறது’ என்று சொல்லாமல் சொல்லியது.

அந்த குரு திரும்பவும் வந்து, “இப்போது என்ன செய்வது அந்த பூனை
என் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு பசியோடு என்னை பார்க்கிறது. எனக்கு உணவு
கொடு இல்லாவிடில் நான் போகிறேன். நான் போய் விட்டால் எலிகள் திரும்பவும் வந்து
விடும். என்பது போல பார்க்கிறது. அதை அது சொல்லவில்லை, ஆனால் நான் அதை அதன்
கண்களில் பார்க்கிறேன். அதற்கு பால் கொடுப்பதற்கு எனக்கு பால் வேண்டும். “ என்று கேட்டார்.

அந்த மனிதன், “ஒவ்வொரு நாளும் நீங்கள் பாலுக்கு வர
வேண்டியிருக்கும். என்னிடம் பல பசுக்கள் உள்ளன. அதில் ஒன்றை கொடுக்கிறேன். அதை
வைத்துக் கொள்ளுங்கள்.” என்றான்.

அவர் பசுவை வாங்கிக் கொண்டு
சென்றார். ஆனால் அதனால் பிரச்னைகள்தான் அதிகமாயின. இப்போது பசுவுக்கு புல் தேவை
பட்டது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்துக்குச் சென்றார்.

மக்கள், “நீ ஒரு கிறுக்கன், பிரச்னை பிரச்னை. நீங்கள்
ஏன் உங்கள் குடிசையை சுற்றி உள்ள இடத்தில் புல் வளர்த்துக் கொள்ளக் கூடாது?. அங்கே ஏகப்பட்ட இடம் சும்மா தரிசாககிடக்கிறது. நாங்கள் விதை தருகிறோம். இந்த விதைகளை வைத்து எதையாவது விதைத்து
வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உதவும். நீங்களும் சாப்பிட்டு
பசுவுக்கும் எதையாவது கொடுங்கள்.” என்றனர்.

அதனால் அந்த குரு, விதை விதைத்து
வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் பிரச்னை வந்தது. இப்போது அந்த பயிரை
அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அவரோ ஒரு துறவி, அவர் இந்த வேலைகளை செய்ய கூடாது.
ஆனால் ஒரு விஷயம் மற்றொரு விஷயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் அவர் திரும்பவும்
கிராமத்திற்கு சென்றார்.

“பயிர் அறுவடைக்கு தயாராகி விட்டது. ஆனால் அதை செய்ய என்னிடம் கருவிகள் எதுவும் கிடையாது. அதனால் எனக்கு உதவி வேண்டும்.” என்று கேட்டார்.

மக்கள், “இங்கே பாருங்கள் உங்களோடு மிகவும்
தொந்தரவாகி விட்டது. உங்களால் எந்த பயனும் இல்லை. எதற்கும் உங்களால் தீர்வு காண
முடியாது. நாங்கள் தான் எதற்கும் தீர்வு காண வேண்டும். இது மிகவும் எளிது. இங்கே
ஒரு விதவை பெண் இருக்கிறாள். அவள் உங்களை, உங்கள் பசுவை, உங்கள் பயிரை, உங்கள்
உணவை, எல்லாவற்றையும் – எல்லாவற்றையும் என்றால் பூனை. எலி …… அவள் மிகவும்
அனுபவம் வாய்ந்த பெண்.”

ஆனால்! என்ற துறவி நான் ஒரு துறவி. என்றார்.

அவர்கள், இந்த துறவு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். என்ன வகையான துறவி நீங்கள்.! உங்களிடம் பசு, பூனை, நிலம். பயிர் ஆகிய எல்லாமும் உள்ளன. ஆனால் நீங்கள் நான் ஒரு துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். மேலும் இந்த திருமணம் போலியான ஒன்று. உங்களுக்கு
அந்த பெண்ணிடம் எந்த உறவும் கிடையாது. அவள் வறுமையில் கஷ்டத்தில் இருக்கிறாள்.
நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து இருந்தால் உங்களுக்கு
நல்லது.” என்றனர்.

அவர், “அப்படியானால் சரி, அது சட்டபூர்வமானதாக
இல்லாவிடில் சரி. அதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் எனது குரு திருமணம் செய்து
கொள்ளாதே என்று தான் கூறியுள்ளார். இதற்கு எதிராக எதுவுமே சொல்லவில்லை. நான் தான்
திருமணம் செய்யவில்லையே. நான் அந்த பெண்ணுடன் வாழ்வதைப் பற்றி இந்த கிராமம்
எதுவும் சொல்லாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு என்பதால் இது எனக்கு சரிதான். நான்
அவளை எனது மனைவி என்று சொல்லிகொள்ளலாம், ஆனால் உண்மையில் நான் அவளது கணவனாக
எதுவும் செய்யவேண்டியதில்லை, அவளும் எனது மனைவியாக உண்மையில் எதுவும்
செய்யவேண்டியதில்லை.” என்று ஒத்துக் கொண்டார்.

அவர் அந்த பெண்ணுடன் பேசினார்.
அவள், எனக்கு மறுபடியும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஒருமுறை செய்ததே
போதும். ஆனால் நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள், நானும் சிரமத்தில்
இருக்கிறீர்கள். அதனால் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வோம். அந்த விதத்தில்
இது எனக்கு சரிதான்.” என்றாள்.

அதனால் அவர்கள் இருவரும் திருமணம்
செய்து கொண்டனர். இப்போது எல்லாமும் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அவருக்கு
உடல்நிலை சரியில்லாமல் போகும் சில நாட்களில் அவள் அவருக்கு சிசுரிஷை செய்தாள்.
மெதுமெதுவாக அவர் அந்த பெண்ணை விரும்ப ஆரம்பித்தார். ஒரு ஆண் ஆண்தான், ஒரு பெண்
பெண்தான். பெண்ணும் அவரை விரும்ப ஆரம்பித்தாள். அவர்கள் இருவருமே தனிமையை
உணர்ந்தனர். ஒரு குளிர்கால இரவில் இங்கே குளிராக இருக்கிறது நாம் ஏன் நெருங்கி
இருக்கக் கூடாது என மற்றவர் கேட்கவேண்டும் என இருவருமே விரும்பினர்.

இறுதியில் அந்த பெண், இங்கே மிகவும் குளிராக இருக்கிறது என்று கூறினாள்.

அந்த துறவியும் இங்கேயும் குளிராக இருக்கிறது என்றார்.

அப்போது அந்த பெண், உங்களுக்கு தைரியம் இல்லைபோல தோன்றுகிறதே என்றாள்.

அவர், அதுசரிதான். நீ இங்கே வா,
எனக்கு தைரியம் இல்லை. நான் ஒரு துறவி, நீ ஒரு அனுபவமுள்ள பெண்மணி. நீ இங்கே வா.
இருவரும் சேர்ந்திருந்தால் கதகதப்பாக இருக்கும். என்றார்.

கதகதப்பாகத்தானே இருக்கும்.

இப்படித்தான் அவரது முழு துறவறமும் வீணாகிப்போனது. அவர் இறக்கும்போது அவர் தனது சீடர்களிடம் உங்களுடன் எந்தபூனையையும் தங்க விடாதீர்கள். என்று கூறி விட்டு இறந்தார்.

வயதான மனிதன் அந்த தலைமை சீடரிடம், “அதிலிருந்து உங்களது பாதையில்
ஒவ்வொரு குருவும் தனது சீடர்களிடம் பூனையைப் பற்றி கவனமாக இருங்கள் என்று கூறுவது
வழக்கமாகிப் போனது. பூனையைப் பற்றி கவனமாக இருப்பது மிகவும் கடினம். எப்படியோ பூனை
உள்ளே வந்து விடும் – வாழ்க்கை மிகவும் விசித்திரமானது”. என்றார்.

Source : From  Personality To Individuality   Che  # 5

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.