பிரபஞ்ச சக்திகள்
பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது. இதனால்தான் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். இந்த வாத பித்த கபம் எவ்வாறு மனித உடலில் உள்ளது என்பதையும் வாத பித்த கப நிலைப்பாட்டின் தன்மையை இந்த பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் இவற்றின் பிரதிபலிப்பு ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது.
அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமு மொன்றே
அறிந்து தான் பார்க்கும் போதே
என்று சித்தர் பாடுகிறார். பொதுவாக எலும்புக்கூடு, நரம்பு, தசை, தமனி, முதலானவைகள் தான் மனிதன் என்று சொல்வது அறியாமை என்கின்றனர் சித்தர்கள். அண்டத்தில் அதாவது பிரபஞ்சத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்தில் உள்ளது என்கிறார். பிண்டம் என்றால் உடம்பைக் குறிக்கும்.பிரபஞ்ச சக்தியானது உடலில் கரு உற்பத்திக்கு முக்கிய காரணமாகிறது.சுக்கிலமும் சுரோனிதமும் இணையும்போது, காற்று நீர், நெருப்பு மூன்றும் சேர்ந்து மண் உருவு கொண்டு உடலாய் மாறி உயிர் சேர்ந்து வாதம், பித்தம், கபம் என நிலைப்படுகின்றது.இவ்வாறு பஞ்ச பூதங்களுள் அமைந்துள்ள உடலானது உலகில் உள்ள தாதுப்பொருட்கள் தாவரப் பொருட்கள் அனைத்தும் சங்கமமாகின்றது. மனித உடல் ஐம்பெரும் பூதங்கள் அடங்கிய சிறிய பிரபஞ்சம் என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.மேலும் மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களோடு தொடர்புடைய தாகவும், இந்த தத்துவங்களின் அடிப்படையில்தான் மனித உயிர் அனைத்து சக்திகளையும் அடக்கி ஆளும் தன்மை கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.சூரிய சக்தியானது மனிதனின் தமரகம் என்னும் இதயத்துடன் தொடர்புடையது என்றும், மூளை நரம்புகள் அனைத்தும் சந்திரனோடு தொடர்பு உடையவை என்றும், பித்தப்பை இரத்தம், செவ்வாயோடு தொடர்பு உடையவை என்றும் உடலை பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.
சூரிய சக்தி – தமரகம் (இதயம்)
சந்திர சக்தி – மூளை நரம்புகள்
செவ்வாய் – பித்தப்பை, இரத்தம் (செந்நீர்)
சுக்கிரன் – இடுப்புப் பகுதி
புதன் – நுரையீரல்
குரு (வியாழன்) – கல்லீரல்
சனி – மண்ணீரல்
ஆகவே மனித உடலானது கிரகங்கள் (கோள்கள்) நட்சத்திரங்களின் ஆதிக்கத்தைப் பொறுத்து மாறுபாடு அடைகிறது என்பது புலனாகிறது.பிரபஞ்ச சக்தியை அடைந்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் இந்த கோள்களின் ஆதிக்கத்தை மாற்றியும், நட்சத்திரங்களின் தன்மைகளை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவர்கள். சில சமயங்களில் இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி இயக்குபவர்களும் இவர்களே.பிரபஞ்சத்தில் மனிதனே முதன்மையானவ னாகவும் அவன் தன்னைத்தானே அறிந்து கொள்பவனாகவும் இருக்கிறான். இதையே ஒளவையார் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று பாடினார்.இதனால்தான் மனிதன் ஐம்பெரும் பூதங்களை அடக்கி ஆளும் சக்தியைப் பெற்று இயற்கையின் போக்கை இயக்கவும், மாற்றவும் வல்லவன் ஆகிறான் என்கின்றனர்.இந்த பிரபஞ்ச சக்தியை அடைவது பற்றி நாம் வர்மத்தின் மர்மங்கள் என்ற தொடரில் திலர்த கால ஒளியின் மூலம் இந்த சக்தியை அடைவது பற்றி விரிவாக அறிந்துகொண்டிருப்பீர்கள்.இதுபோல் மனித உடலில் உள்ள நரம்பு மண்டலங்கள் ஆதாரங்களுடன் தொடர்பு உள்ளது போல் ஐம்பூதங்களின் ஆதிக்கம் மனித சக்தியிலும் நிறைந்துள்ளது. ஆகையால் மனிதன் ஐம்பூதங்களை அடக்கியாள முடிகிறது. இதைத்தான் சித்தர்கள் பல நூல்களிலும், சோதிட சாஸ்திரங்களிலும் மனிதனுக்கு கோள்களின் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை துல்லியமாக கணித்துக் கூறியுள்ளனர்.பஞ்ச பூதங்கள் வாத பித்த கபமாக நிறைந்து அதனதன் நிலைப்பாட்டுடன் உள்ளது. பிரபஞ்சத்தில் கோள்களின் ஆதிக்கம் மாறும்போது உடலிலும் வாத பித்த கப மாறுபாடு ஏற்படுகிறது. இதனால் மனிதன் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.இப்படிப்பட்ட கோள்களின் ஆதிக்கத்தைத் தெரிந்துகொண்டு அதன்மூலம் மனிதன் நோய் நொடியின்றி தன்னைக் காத்துக்கொள்ளவே வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம் போன்றவற்றை சித்தர்கள் உருவாக்கினர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.