வணங்குபவர்களுக்கு, வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள் இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறோம்.
‘சதுர்த்தி’ என்பது ஒரு ‘திதி’. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற 4–வது நாள் சதுர்த்தி ஆகும். சதுர்த்தியன்று விநாயகப்பெருமானை நோக்கி விரதம் அனுசரிப்பது இந்துக்களிடையே வழக்கமாக உள்ளது.
ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது விநாயகப் பெருமான் பிறந்த தினமாகும். விநாயகர் அவதாரம் மகிமை வாய்ந்தது. கயமுகன் என்ற அரக்கன் சிவபெருமானிடம் வரங்கள் பல பெற்று இருந்தான். அந்த வரத்தின் மகிமையால் தேவர்களையும் மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.
தேவர்களை பூண்டோடு அழித்தொழிக்க எண்ணினான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். கயமுகனை சம்ஹாரம் செய்து தேவர்களை காப்பாற்றுவதற்காக விநாயகப் பெருமான் சதுர்த்தியன்று அவதரித்தார். விநாயகர் கயமுகனுடன் போர்புரிந்த போது ஆயுதங்களால் அழியாத வரம் பெற்ற கயமுகன் பெருச்சாளி உருவம் கொண்டு விநாயகரை தாக்கினான். விநாயகர் அவனை தன் வாகனமாக்கி அருள்புரிந்தார்.
இனி.. விநாயகர் அவதாரம் குறித்து புராணத்தில் கூறப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஒருமுறை கயிலாயத்தில் பார்வதி தேவி நீராடிக்கொண்டு இருந்தார். அப்போது தனக்கென்று ஒரு காவல் தெய்வம் வேண்டும் என்று விரும்பினார். அப்போது குளியலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை குழைத்து அதில் அழகிய உருவம் செய்து, உயிர் கொடுத்து விநாயகப்பெருமானை தோற்றுவித்தார்.
விநாயகரை வீட்டுவாசலில் இருக்க வைத்து ‘நான் குளித்து கொண்டு இருக்கும் போது, எவரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது’ என்று கூறிச் சென்றார். அந்தநேரம் பார்த்து வீட்டுக்கு திரும்பி வந்த சிவபெருமானை, விநாயகர் வாசலில் தடுத்து நிறுத்தி விட்டார். கோபம் கொண்ட சிவபெருமான், விநாயகரை ‘யாரோ’ என்று நினைத்து அவரது தலையை துண்டித்துவிட்டார். இதை பார்த்த பார்வதி மிகவும் வருத்தப்பட்டார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் வடக்கு நோக்கி தலைவைத்து தூங்கிக்கொண்டிருக்கும் உயிரினத்தின் தலையை வெட்டி கொண்டு வரும்படி தன் சேவகர்களுக்கு உத்தரவிட்டார். அவ்வாறே சேவகர்களும் வடக்கு நோக்கி தலைவைத்து தூங்கிக்கொண்டிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி சிவனிடம் கொடுத்தனர்.
சிவபெருமான் விநாயகரது உடலுடன் யானைத் தலையை பொருத்தினார். பூத கணங்களுக்கு அவரை தலைவனாக்கி மகிழ்ந்தார். அனைத்து மங்கள நிகழ்ச்சிகளுக்கும் தொடக்கத்தில் தமது மகனை வழிபட வேண்டும் என்று அவர் ஏற்பாடு செய்தார். விநாயகர் பல திருவிளையாடல்களை செய்து உள்ளார். காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து காவிரி நதியை கவிழ்த்து பெருகி ஓடச்செய்தார். விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச்சென்ற ரெங்கநாதர் சிலையை தடுக்கும் விதத்தில் பாலகன் வடிவில் வந்து லீலைகள் புரிந்து சிலையை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். முருகன் வள்ளியை மணம் புரிவதற்கு யானை வடிவில் சென்று உதவி செய்தார். அனலாசுரன், சிந்தூரன் ஆகிய அசுரர்களை விநாயகர் விசுவரூபமெடுத்து அழித்தார். வியாசர் சொல்ல, சொல்ல மகாபாரதத்தை எழுதினார்.
விரதம் இருப்பது எப்படி?
விநாயகர் சதுர்த்தியன்று வீட்டை சுத்தம் செய்து, கோலம்போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும். அதன் மீது தலை வாழை இலையை போட வேண்டும். நுனி பாகம் வடக்கு முகமாக இருக்க வேண்டும். அந்த இலை மீது பச்சரிசியைப் பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்கிரகத்தை எழுந்தருளச் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் தான் விசேஷம். விநாயகருக்கு மங்கள ஆரத்தி காட்டி, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் முக்கனிகள், கரும்பு, எள், கடலை, அப்பம், மோதகம், பொரி உருண்டை போன்றவற்றை நிவேதனம் செய்து, கணேச அஷ்டகம் கூறி பூஜை செய்து அவரை வழிபட வேண்டும். விநாயகர் புராணம் படித்து மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும். மறுநாள் புனர்பூஜையை கொண்டாட வேண்டும். தயிர்சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பிறகு குளத்திலோ, கிணற்றிலோ, பிள்ளையாரைக் கரைத்து விடலாம். பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும், எருக்கம்பூவும் விசேஷமான ஒன்றாகும்.
விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயகரின் அருள்பெற்று அனைத்து நலன்களையும், சுகங்களையும் பெறுவார்கள். வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது.
ஞானம் மற்றும் ஆனந்தத்தின் உருவகம் கணேசப்பெருமான்.
பிரம்மச்சாரிகளில் அவரே முதல்வர்.
‘மூஷிக வாஹன மோதகஹஸ்த
சாமரகர்ண விளம்பிதஸீத்ர!
வாமனரூப மஹேஸ்வரபுத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே!!’
‘விநாயகப்பெருமானே! எலியை வாகனமாக கொண்டவரே! கையில் கொழுக்கட்டையுடன் நீண்ட தும்பிக்கை மற்றும் அகன்ற காதுகளுடன் சிறிய உருவத்தில் காட்சியளிப்பவரே. சிவபெருமானின் மைந்தனே. எல்லா விக்கினங்களையும் நீக்கும் உமது திருப்பாதங்களை நான் வணங்குகின்றேன்’ என்பது இதன் பொருள்.
பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் விக்கினங்களை அகற்றி ஆன்மிக வெற்றியை அருளும் அருட்தெய்வம் அவர். எனவே அவர் விக்கின விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
–தொடரும்.
லாபம் தரும் பிள்ளையார்
மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் நற்பதவி கிடைக்கும்.
புற்றுமண்ணால் உருவாக்கிய பிள்ளையாரை வணங்கி வழிபட வியாபார லாபம் கிடைக்கும்.
உப்பினால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிந்து நிம்மதி பிறக்கும்.
கல்லால் அமைந்த விநாயகரை வணங்கிட வெற்றிகிட்டும்.
வெள்ளெருக்கால் செய்த பிள்ளையாரை வழிபட செல்வம் சேர்ந்து மகிழ்ச்சி நிலவும்.
மஞ்சள் பொடியால் ஆன பிள்ளையாரை வழிபட சகல காரியங்களும் நன்றாக நடக்கும்.
வெல்லத்தினால் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட வாழ்வு வளம்பெறும்.
பதஞ்சாணியால் உருவாக்கப்பட்ட பிள்ளையாரை வழிபட வியாதிகள் நீங்கி வளம்பிறக்கும்.
அறுபடை வீடுகள்
செந்தூர கணபதி –திருவண்ணாமலை.
அழத்து விநாயகர் –விருதாச்சலம்.
கள்ள வாரணப்பிள்ளையார்–திருக்கடையூர்.
முக்குறுணி விநாயகர் – மதுரை.
தூண்டி விநாயகர் –காசி.
பொல்லாப்பிள்ளையார் –திருநாரையூர்.
ஐந்து தொழில்கள்
முழுமுதற்கடவுளான விநாயகர் அனைத்து உயிர் களையும் படைக்கும் கடவுளாகவும் விளங்குகிறார். எலியை வாகனமாக கொண்டு மிகப்பெரிய படைப்பான யானைத்தலையுடன் அவர் விளங்குவது விநாயகரே அனைத்து உயிர்களையும் படைக்கிறார் என்பதை குறிக்கிறது. விநாயகர் ஐந்து தொழில்களையும் நிறைவேற்றுகிறார். பாசம் ஏந்தியகை படைத்தலையும், தந்தம் ஏந்தியகை காத்தலையும், அங்குசம் ஏந்தியகை அழித்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் ஏந்தியகை அருளையும் உணர்த்துகின்றன.
சிதறு தேங்காய்
சிவபெருமான் திரிபுரம் எரிக்கச்சென்ற போது விநாயகரை வணங்கி செல்ல மறந்துவிட்டார். தேவர்கள் எல்லாம் தேராக உருமாறி இருக்க அந்த தேர் சென்ற போது திடீரென்று அச்சுமுறிந்து விட்டது. அந்த ஊர் இன்று அச்சிறுப்பாக்கம் என அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு மூன்று கண்கள் உண்டு. முக்கண்கள் உடைய தேங்காயை விநாயகருக்கு உடைத்து விட்டு போருக்கு சென்றனர். இதனால் விநாயகருக்கு தேங்காய் உடைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.