ஈசனின் கருணையில் இணைவோம்
தேவாரம்
பலர் சிரிக்கும் முன்
வாழ்க்கையில் என்னென்னமோ செய்கிறோம். கொஞ்சம் நல்லது, கொஞ்சம் அல்லாதது, கொஞ்சம் பொய், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் காமம்...இப்படி அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருக்கிறோம்.
கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். அதை அனுபவிக்காமல் விட்டு விட்டுப் போகிறோம்.
நம்பியவர்கள் கை விட்டு விடுகிறார்கள். நம்பியவர்களை நாம் கை விட்டிருக்கிறோம்.
கூட்டிக் கழித்தால் நம் வாழ்க்கையே ஒரு அர்த்தமற்றதாக, நகைப்புக்கு உரியதாக இருக்கும். இதற்கா இந்த பாடு....இந்த அலைச்சல் ?
இறந்த பின், இடு காட்டில் பிணத்தை வைத்திருக்கும் போது , சுற்றி நிற்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்....
நம்மைப் பார்த்து அவர்கள் சிரிக்கும் முன் திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து பிழைக்கும் வழியைப் பாருங்கள் என்கிறார் நாவுக்கரசர்.
வாழ்வில் எதை எதையோ தேடி அலைகிறோம் . கிடைத்தது கொஞ்சம், கிடைக்காதது நிறைய. கலைந்த கனவுகள், கரைந்த கற்பனைகள், ஏமாந்த எண்ணங்கள்...
இவ்வளவுதானா வாழ்க்கை ?
பாடல்
அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.
சீர் பிரித்த பின்
அரித்து உற்ற வினையால் அடர்பு உண்டு நீர்
எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர்
சிரித்து உற்று பல பேசப் படா முன்னம்
திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்மினே
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.