குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர், திருச்சூர், கேரளா
----------------------------------
108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றாக இல்லை என்றாலும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்படவில்லை என்றாலும், பாரததேசத்தில் மக்கள் பெருவெள்ளமாக வந்து வணங்கும் வைணவக் கோயில்களில் ஒன்றாக இது விளங்குகிறது. திருப்பதி, திருவரங்கம் போலவே இங்கும் அலை அலையாக மக்கள் வந்து எம்பெருமானை வணங்குகிறார்கள்.
தல புராணம்
குரு பார்க்கக் கோடி நன்மை என்று சொல்வார்கள். அத்தகைய குருவும், வாயு பகவானும் ஒன்றாக இணைந்து உருவாக்கிய தலம் என்பதால், குருவாயூர் எனப் பெயர் பெற்றது இவ்வூர். இங்கு அமைந்துள்ள இத்திருக்கோயில் மூல விக்ரஹம் விசேஷமானது. இது ஸ்ரீ கிருஷ்ண பகவான் தன் திருக்கரங்களால் அஞ்சனம் என்னும் மையால் உருவாக்கி உத்தவரிடம் அளித்து, தன் அவதாரம் முடிவுற்றபின்னர் நிகழும் பிரளயத்தில் இந்த விக்ரஹம் கடலில் மிதந்து எங்கே சேருமோ அங்கே பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். அவ்வண்ணமே, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வைகுண்டம் ஏகி, பாண்டவ குலம் அழிந்து, பிரளயம் உருவாகி யுகம் முடிந்தபோது, அவ்வெள்ளத்தில் மிதந்து வந்த விக்ரஹம் இந்த இடத்தில் கரையேறியதாம். இதற்கு மற்றொரு தலபுராணமும் உண்டு. சுதபர் என்னும் அரசர் பிள்ளை வரம் வேண்ட, பிரம்மதேவர் மஹாவிஷ்ணு குழந்தையாகக் காட்சியளிக்கும் இந்த விக்ரஹத்தை அவர்களுக்கு அளித்து அதை பூஜித்து வருமாறு கூறினார். அவ்வாறே அவர்கள் செய்த தவத்தில் மகிழ்ந்த திருமால், ஒன்றல்ல மூன்று முறை தான் அவர்கட்கு மகவாகப் பிறப்பதாக உறுதியளித்தார். அதன்படியே சத்திய யுகத்தில், சுதபருக்கு மகன் ப்ர்ச்னிகர்பராகவும்; த்ரேதா யுகத்தில் அவருடைய அடுத்த பிறவியான காஷ்யபருக்குக் குழந்தையாக வாமனன் என்ற திருநாமத்துடனும்; த்வாபர யுகத்தில் அவர்கள் வசுதேவன் தேவகியாகப் பிறவி எடுக்க அவர்களது எட்டாவது மகனான பாலகிருஷ்ணனாக அவதாரம் செய்தார். இங்ஙனம், தான் பிறப்பதற்கு முன்பே தனது அவதார உருவை மஹாவிஷ்ணு தன் தாய் தந்தையாருக்குக் காட்டியருளினார்.
இதற்கு மற்றொரு விசேஷமும் உண்டு. சிவபெருமானை வேண்டி திருமாலும், மஹாலஷ்மியும் தவமிருந்ததாகச் சொல்லப்படும் கோயில்கள் உண்டு. இங்கு ருத்திரனாக சிவனார் திருமாலை நோக்கித் தவமிருந்தார் என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. சிவபெருமானால் அபிஷேகம் செய்விக்கப்பட்ட சிறப்புடையது இத்தல மூல விக்ரஹம்.
அது மட்டுமல்ல, இங்கு கண்ணபிரானை வேணுகோபாலனாகச் செதுக்கியிருக்கும் தூண், சிறுவனாக வந்த கிருஷ்ண பரமாத்மாவே அடையாளம் காட்டியது என்றும் கூறுவர்.
பாண்டவ குலத்து ஜெனமே ஜெயன் இத்தலமேகி வழிபட்டுத் தன் நோய் நீங்கப் பெற்றான் என்றும் கதை உண்டு.
உன்னி கிருஷ்ணன் என்ற திவ்யநாமம் கொண்டுள்ள மூலவர் சதுர் புஜராக பாஞ்சஜன்யம், சுதர்சன சக்கரம், கௌமோதகி என்னும் கதாயுதம் மற்றும் தாமரை மலரை ஆகியவற்றை நான்கு கரங்களிலும் ஏந்தி கம்பீரமாகப் புன்னகை தவழும் வதனத்துடன் அருள் பாலிக்கிறார்.
அதிகாலையில் சுமார் மூன்று மணிக்கு நிகழும் நிர்மால்ய தரிசனம் மிகச் சிறப்பானது.
தலச்சிறப்பு
இக்கோயிலில் அன்னப்பிராசனம் செய்யப்பட்ட குழந்தையை எந்நாளும் பசியோ, பட்டினியோ, பஞ்சமோ தீண்டாது என்பது நம்பிக்கை.
சகல நோய்களையும் தீர்க்கும் தலமாக இது விளங்குகிறது. குறிப்பாக, வெண்குட்டம் போன்ற சரும நோய்கள் கொண்டோர் இத்தலத்தில் நீராடி, நோய் நீங்கப் பெறுகின்றனர்.
சித்திரை முதல் நாள் இங்கு பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணயம் அளித்து ஆசீர்வதிக்கின்றனர். கை நீட்டம் என்று சொல்லப்படும் இதைப் பெற்றவர்களுக்கு சகல ஐஸ்வர்யமும் குவியும் என்பதும் நம்பிக்கை.
இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதி இணை பிரியாது பல்லாண்டு வாழ்வர்.
குழந்தைகளுக்கு நோய் நொடி நீங்க இங்கு துலாபாரம் அளிப்பது வழக்கமாக உள்ளது.
புத்திரபாக்கியம் வழங்கும் முதன்மையான தலங்களுள் இதுவும் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
தலப்பண்
உருவான நாள்முதலாய் உள்ளிருந்து உயிர்காக்கும்குருவாயூர் அப்பனன்றிக் குவலயத்தில் இன்னொன்றுஅருள்புரியும் தெய்வமுண்டோ ஆரேனும் கண்டதுண்டோமருள்நீக்கும் எம்பிரானை மனமேற்றிப் போற்றிடுவீர்!
ஓம் நமோ நாராயணாய!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.