ஓம்விக்னேஸ்வராய நமக!
விநாயகர்-- வி + நாயகர் -- சிறந்த தலைவர்
கணபதி -- 18 கணங்களுக்கும் பதி. கணபதியை பரம்பொருளாக வழிபடும்முறை கணாபத்யம் எனப்படும். க- என்பது மனோவாக்குகள், ண- அவற்றைக் கடந்த நிலை, ஈசன்- இறைவன், கணேசன்= கண+ ஈசன். 51 வகை கணபதி உண்டு. சந்தான, சுவர்ண, நவநீத, ஹரித்ரா, மகா, உச்சிஷ்ட ஆகிய அறுவரும் பிரதானமானவர்கள். கணபதி அறிவையும் பயனையும் தருவதால் சித்தி, புத்தி என்ற இரு தேவிகளும், க்ஷேமம், லாபம் என்ற இரு புத்திரர்களும் உண்டு. கணாபத்திய வழிபாடுமுறை மறைந்து விட்டாலும் கணபதியே முதல் வழிபாட்டிற்கு உரியவர். இடையூறு என்ற விக்னத்தை போக்குபவர்.
வேறு பெயர்கள் -- கஜானன்- யானைமுகம். (கஜம் என்றால் யானை. ஆனனம் என்றால் முகம்.) லம்போதரன்- வயிறு பெருத்து இருப்பதால். ஏகதந்தன்- ஒரு தந்தம் ஒடிந்திருப்பதால். விக்கினஹரன்- விக்னேஸ்வரன்- விக்கினங்களைப் போக்குவதால். குகராஜஸ- முறம்போன்ற காதுகள். கணநாதர்- கணங்களுக்குத் தலைவர்.
செவ்வாய்க்கிழமை -- மாசிமாத செவ்வாய்க்கிழமை பூக்களால் அர்ச்சனை செய்து பூஜை வழிபாடு- நினைத்த நல்லகாரியம் வெற்றி பெரும்.
வெள்ளிக்கிழமை -- எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விரதம் இருந்து பூஜை வழிபாடு சிறப்பு. சூரியன் இடப ராசியில் இருக்கும். வைகாசிமாத வளர்பிறை வெள்ளி விரதம் இருக்க விசேஷமான நாள். அன்று வழிபட்டு பயனடைந்தவர்கள் அத்திரி மகரிஷி- சூரிய சந்திரர்களை பிள்ளைகளாகப் பெற்றார். குபேரன் சங்க நிதி, பதும நிதிகளைப் பெற்றார்
சனிக்கிழமை -- கிரக தோஷங்கள் உள்ளோர் சனிக்கிழமையன்று பூஜை செய்து வழிபாடு நன்மை.
ஏற்ற திதி -- வளர்பிறை சதுர்த்தி. ஆவணி வளார்பிறை சதுர்த்தி சாலச் சிறந்தது. இதுபிள்ளையார் சதுர்த்தி ஆகும். அன்று விரதம் இருந்து துதிகளைப் படித்து வந்தால் நல்ல பலன்கள் கிட்டும். அன்று இரவு சந்திரனை தரிசித்தால் வழிபாட்டின் பூரண பலன் கிட்டும், நினைத்த நல்ல காரியங்கள் ஜெயம். ஒவ்வொரு நாளும் அந்தந்த திதிகளின்படி வெவ்வேறு வடிவினை வணங்குவது கூடுதல் பலனைத் தரும். கணபதியின் உருவங்கள் வேண்டிய வடிவில் இல்லையென்றால் அந்த பெயரை ஒன்பதுமுறை இருக்கும் கணபதிமுன் சொல்லி வேண்டவும். அமாவாசை- நிருத்த கணபதி, பிரதமை- பாலகணபதி, துவிதை- தருண கணபதி, த்ரிதியை- பக்தி கணபதி, சதுர்த்தி- வீர கணபதி, பஞ்சமி- சக்தி கணபதி, சஷ்டி- துவிஜ கணபதி,சப்தமி- சித்தி கணபதி, அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி, நவமி- விக்ன கணபதி, தசமி- க்ஷிப்ர கணபதி, ஏகாதசி- ஹேரம்ப கணபதி, துவாதசி- லக்ஷ்மி கணபதி,த்ரையோதசி- மகா கணபதி, சதுர்த்தசி- விஜய கணபதி, பௌர்ணமி- நித்ய கணபதி,
வணங்கும்முறை - எந்நாளும் எப்போதும் விநாயகரை வணங்கலாம். அரசமரத்தடி விநாயகர் அருகில் நீர் நிலைகள் இருந்தால் நீரால் அபிசேகம் செய்யவும். வெள்ளெருக்கு. அருகம்புல் ஆகியவைகளைச் சார்த்தவும். தெரிந்த துதிகளை விநாயகப் பெருமானை மனத்தில் நினைத்து சொல்லவும். தீப ஆரதனைக் காட்டி வணங்கவும். இரு கை விரல்களை மடக்கி நெற்றிப் பொட்டில் இடம் வலம் மாறி லேசான அழுத்தம் கொடுத்து தடவிக் கொள்ளவும். காதுகளை ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலால் இடம் வலம் மாற்றிப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடவும். பின் கணபதியை இடம் வலம் சுற்றி வந்து வணங்கவும்.
கோவில்களில் வெள்ளெருக்கு. அருகம்புல் ஆகியவைகளைச் அர்ச்சகரிடம் தரவும். அவர் தீப ஆரதனைக் காட்ட கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து வணங்கவும். இரு கை விரல்களை மடக்கி நெற்றிப் பொட்டில் இடம் வலம் மாறி லேசான அழுத்தம் கொடுத்து தடவிக் கொள்ளவும். காதுகளை ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலால் இடம் வலம் மாற்றிப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட்டு வணங்கவும்.
இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத்தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். வசதியுள்ளவர்கள் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு உடன் படையலுக்கு பொங்கல். சுண்டல் தந்து பூஜை முடிந்ததும் அருகில் உள்ள எல்லோருக்கும் பிரசாதம் வழங்கவும்.
எந்த இடமாயிருந்தாலும் அவரைத் தொட்டு வணங்கக்கூடாது. அவர் உடல் பூதகணம். பாதம் தொட்டு வணங்க வேண்டும். அவரின் கால் தேவபாதம். தேவபாதங்களைத் தொட்டு வணங்கினால் நினைத்த காரியம் கை கூடும். ஒற்றைக் கொம்பன், இரு செவியன், முக்கண்ணன், சதுர்புஜன், ஐங்கரன், ஆறாதாரத்துள்ளான் அவனை வணங்கின் ஏழுபிறவி நீங்கி, எண்திசை போற்ற, நவமணிகளும் சம்பத்தும் பெற்று வாழ்வர்.
வன்னி: பொதுவாக அரசு+வேம்பு மரத்தடியில் இருக்கும் விநாயகர் வன்னி மரத்தடியிலும் இருப்பதுண்டு. அவுரவர், சுமேதை தம்பதியினரின் மகள் சமீக்கும் மந்தாரனுக்கும் மணம் முடிந்து வரும் வழியில் துதிக்கை வேண்டிப்பெற்ற புருசுண்டி முனிவரின் வித்தியாசமான வடிவைப் பார்த்து சிரிக்க சாபம். விநாயகரிடம் விமோசனம் கேட்க சமீ ஆகிய வன்னி மரத்தின்கீழ் தான் கோவில் கொள்வதாகவும், மந்தார(ன்) மரத்தின் பூ பத்திரங்களை உகந்ததாக ஏற்றுக் கொளவதாகவும் அருள். அன்று முதல் வன்னி மரத்தடியும் விநாயகரின் இருப்பிடங்களில் ஒன்றானது. வன்னி வெற்றியின் அடையாளம். துர்க்கை தவக்கோலத்தில் இருக்குமிடம். அக்னியின் அம்சம் நிறைந்தது. சனிபகவானுக்குரியது வன்னி பத்ரம்.
உகந்த மலர்கள்: செம்பருத்தி, ரோஜா, தும்பை, மந்தாரை, அருகம்புல்
அருகம்புல்: எமனின் மகன் அமலாசுரன். எமனின் மகன் என்ற கர்வத்தில் அனைவரையும் துன்புறுத்துவதுபோல் விநாயகரிடமும்வர விநாயகர் அவனை விழுங்கி விட்டார். அதனால் அவருக்கு வயிற்றில் கடும் எரிச்சல் ஏற்பட்டது. இதுகண்ட அகத்தியர் 21 அருகம் புற்களை விநாயகர் வயிற்றில் வைத்து பூஜை செய்ய எரிச்சல் மறைந்தது. அன்று முதல் விநாயகருக்கு அருகம்புல் சமர்பிப்பது வழக்கமானது.
தோப்புக்கரணம்: மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை விளையாட்டாக விழுங்கிவிட்டார். அது வயிற்றைக் கிழித்து விடுமோ என அனைவரும் நினைக்க பெருமாள் தன் காதுகளை கையால் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்து கொள்வதைப் பார்த்த விநாயகர் வயிறு குலுங்கச் சிரிக்க விஷ்ணு சக்கரம் வெளிவந்தது. அன்று முதல் தோப்புக் கரணம் பழக்கமானது. தோர்ப்பி-கைகள். கர்ணம்-காது. தோர்ப்பிகர்ணம் மருவி தோப்புக்கரணம் ஆனது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.