Saturday, 4 June 2016

வளைகாப்பு

ஏன் வளைகாப்பு ஏழாவது மாதத்தில் செய்கிறார்கள் என தெரியுமா?


வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும். வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும். ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி என்றாவது உங்களுக்குள் எழுந்திருக்கிறதா?

அதற்கான விடை தான் இந்த கட்டுரை. நமது முன்னோர்கள் எதையும் கண்மூடித்தனமாக செய்துவிட்டு செல்லவில்லை. அனைத்திற்கும் பின், நுண்ணறிவும், அறிவியலும் புதைந்திருக்கிறது.

முக்கியமாக இந்த வளைகாப்பு சடங்கிலும் கூட. கர்பிணி எப்போது தன் கணவனை பிரிந்து இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, ஏன் எதற்கு என அனைத்திற்கும் காரணம் இருக்கின்றன.

காரணம் #1
ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன், மனைவி உடலுறவில் ஈடுபடுவது அபாயம். இதனால், பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் தான் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி இருவரையும் பிரித்து வைக்கின்றனர்.

காரணம் #2
ஏழு மாதத்திற்கு பிறகு தம்பதிகள் உறவில் ஈடுபட்டால் கருவில் வளரும் குழந்தை திரும்பிக் கொள்ளும், மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காரணம் #3
மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு மன தைரியம் ஊட்டவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது. பிள்ளை பெற்று நாங்கள் இவ்வளவு பேர் தைரியமாக, ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை காட்ட தான் பிள்ளை பெற்ற பெண்களை வளைகாப்பிற்கு அழைக்கின்றனர்.


காரணம் #4
மேலும், வளைகாப்பில் வளையல் போடும் நிகழ்வு சிறப்புக்குரியது. ஆம், கர்ப்பிணி பெண்ணின் வளையல் ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு தாலாட்டு போன்றது, இது குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்.

காரணம் #5
ஏழாவது மாதம் மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் துவக்கம். இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு இருவருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம். வளைகாப்பு நிகழ்வின் போது உறவினர்கள் எல்லாரும் ஏழு விதமான அறுசுவை உணவுகள் தந்து கர்ப்பிணி பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள். இதனால் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பெற்று ஆரோக்கியமாக இருப்பார்கள்

காரணம் #6
சுகப்பிரசவம் ஆகவேண்டும் அதற்கு கர்ப்பிணி பெண்ணுக்கு மன நலமும், உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வளைகாப்பு என்னும் நிகழ்வே நடத்தப்படுகிறது. அதிலும், முக்கியமாக ஏழாவது மாதத்தில். இவை யாவும் நுண்ணறிவுடன் முன்னோர்கள் செய்து வைத்துவிட்டு போன சம்பிரதாயங்கள்.

காரணம் #7
மேலும், சுகப்பிரசவம் நடக்க, தாயும், சேயும் நலமுடன் இருக்க வளைகாப்பு நல்ல பயனளிக்கும் வகையில் அமையும் நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால், இன்றோ பெண்கள் சுக பிரசவம் என்றாலே அச்சம் கொள்கின்றனர். அதற்கு காரணம், சரியான அளவு உடல் வேலை இல்லை, உடலில் தெம்பும் இல்லை. எனவே, வலியை மனதில் கொண்டு சிசேரியன் செய்துக் கொள்ள தலையாட்டி விடுகிறார்கள்.

-

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.