பத்திரகிரியார் சித்தர் - மெய்ஞானப் புலம்பல்
----------------------------------------------------------------------
அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர் பத்திரகிரியார் . பதினெண்சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவருடைய பாடல்கள் (‘மெய்ஞானப் புலம்பல்’) மிகவும் புகழ் பெற்றவை.
எக்காலம் சிவனே எக்காலம்
சீவன் சிவனாவதென்பது எக்காலம்
அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்த தாமரைபோல்
சிந்தை வைத்துக் கொண்டு தெரிசிப்பது எக்காலம்?
ஓடாமல் ஓடி உலகை வலம் வந்து சுற்றித்
தேடாமல் என்னிடமாய்த் தெரிசிப்பது எக்காலம்?
மனதைஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
என தறிவைஅம்பாக்கி எய்வது இனி எக்காலம்?
அஞ்ஞானம் விட்டே, அருள் ஞானத்து எல்லைதொட்டு
மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவது எக்காலம்?
புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?
கடைந்த வெண்ணய் மோரில் கலவாதவாறதுபோல்
உடைந்து தமியேன் உனைக்காண்பது எக்காலம்?
ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்தப் பாழ்மனத்தை
வெந்து விழப் பார்த்து விழிப்பது இனி எக்காலம்?
உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்?
இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே
மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம்?
என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்?
தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே
உன்னை நினைந்துள்ளே உறங்குவதும் எக்காலம்?
வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம்?
கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம்?
எக்காலம் சிவனே எக்காலம்
சீவன் சிவனாவதென்பது எக்காலம்🙏🙏🙏.ஸ்வாமி சரணம். பா.சிவகணேசன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.