🌹திருச்சிற்றம்பலம்🌹
சிவனை அடைய வழி யாது ?
ஒற்றை ஊசியின் மேல் நின்று கொண்டு நான் பல ஆண்டுகள் தவம் செய்ய வேண்டுமா ? இல்லறத்தை துறந்து காட்டிற்குள் சென்று கரையான் புற்று மறைக்க அவனை வேண்டி நிற்க வேண்டுமா ? அவனைத் தேடித் தேடி உடல் நோக காடு மலை கடக்க வேண்டுமா ? பெரிய விளக்கிலே திரியாக நம் உடலை இட்டு எரிக்க வேண்டுமா ? எத்தனை பெருமையுடைய பரம்பொருளை எத்தனை தியாகம் செய்து அடைய முடியும் என்றாலும் அது தகும். ஆனால், அந்த பரம்பொருளோ, அனைவராலும் கொடுக்கக்கூடிய சாதாரண பொருளைக் கொடுத்தாலே நம் அன்பு வலையுள் அகப்பட்டு நமக்கு அருள் புரிந்து விடும் தன்மையைக் கொண்டுள்ளதே. இந்தக் கருணையை என்னவென்று சொல்வது ? அந்த பரம்பொருளுக்கு நாம் என்ன கொடுக்க முடியும் ? நம்மிடம் நம் பொருள் என்று என்ன இருக்கிறது ? பூவும் நீரும் கொடுத்தாலே அந்த பரம்பொருளை நம் வசப்படுத்தி விடலாம். இந்த சிறு ரகசியம் கூட தெரியாமல் எத்தனை பாவிகள் ஈசனைப் பெறாமல் பிறப்புச்சுழியில் விழுந்து தவிக்கிறார்கள் ?
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே
-- திருமூலர்
பொழிப்புரை :
`சிவனை அடைதற்குச் செயற்பாலதாகிய தவம் யாது` எனத் தேர்பவர்க்கு, பூவும், நீருமே சாதனங்களாகும். அவை எவ்விடத்தும் எளிதிற் கிடைப்பனவே. அவை சாதனங்களாதல் எவ்வாறு எனின், நீரைச் சொரிந்து பூவைச் சாத்துதலாகிய அதைக் கண்டவுடனே சிவன் அதனைச் செய்தவர்க்கு அருள்புரிகின்றான். அங்ஙனமாகவும், நல்லூழ் இல்லாத பலர் இதனைச் செய்யாது வாளா பொழுது போக்கிப் பிறப்பில் வீழ்கின்றனர்.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.
அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.
பள்ளிக்கரணை சிவனடியார் திருக்கூட்டம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.