நீங்கள் பெரிய தாடி வளர்த்துக்கொண்டிருக்கிறீர்களே, அது ஏன்? சோம்பேறித்தனமா? அல்லது வேறு தத்துவக் காரணங்கள் இருக்கிறதா?’
ஓஷோ சிரித்தார். ‘எனக்குத் தாடி இருக்கிறதா? யார் சொன்னது?!’
‘யார் சொல்லவேண்டும்? அதான் பார்த்தாலே தெரிகிறதே!’
‘கண்ணால் பார்ப்பதையெல்லாம் நம்பிவிடாதீர்கள்’ என்றார் ஓஷோ. ‘எனக்கும் தாடி இல்லை. போதிதர்மாவுக்கும் தாடி இல்லை.’
அந்தக் காலத்தில் மாணவர்கள் ஜென் பழகுவதற்காக வரும்போது குருநாதர்கள் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்பார்கள். அவற்றை மையமாக வைத்துப் பலவிதமாகச் சிந்திக்கச் சொல்லித்தருவார்கள். அப்படி ஒரு கேள்வி. ‘போதிதர்மருக்குத் தாடி இல்லையே. ஏன்?’
ஆசிரியர் இப்படிக் கேள்வி கேட்டதும் மாணவர்கள் குழம்பிப்போவார்கள். ‘என்ன வாத்யாரே தப்பாச் சொல்றீங்க? போதிதர்மருக்குதான் முகம்முழுக்க அம்மாம்பெரிய தாடி இருக்குதே?’
‘அவசரப்படாதீங்க. நல்லா யோசிங்க. போதிதர்மருக்கு உண்மையாவே தாடி இருக்கா? இல்லையா?’
இந்த நாலு வார்த்தைக் கேள்வியை வைத்துக்கொண்டு நாள்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக யோசித்தவர்கள் உண்டு. கடைசியாக ஒரு சுபதினத்தில் அவர்களுக்கு ஞானம் பிறக்கும். ‘போதிதர்மரின் தாடி அவருடைய உடம்புக்குச் சொந்தமானது. அந்த உடம்புமட்டுமே போதிதர்மர் இல்லை.’
அநேகமாக எல்லா உலகக் கலாசாரங்களும் உடம்பை ஒரு கோவில் என்று சொல்லித்தருகின்றன. அதைப் பத்திரமாகப் பராமரித்துப் பாதுகாத்துக்கொள்ளவேண்டியது நம் பொறுப்பு என்கின்றன.
ஆனால் ஜென் அந்தச் சிந்தனையிலிருந்து சற்று விலகி வந்து ‘உடல்மட்டுமே நாம் இல்லை’ என்கிறது. அந்தப் புற அடையாளங்களை விட்டு விலகிச் சிந்திக்கச் சொல்கிறது. அதன்படி பார்த்தால், (நிஜமான) போதிதர்மருக்குத் தாடி இல்லை, ஓஷோவுக்கும் தாடி இல்லை...!!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.