Monday, 4 April 2016

என்னுடையது

என்னுடையது
உலோபி ஒருவன் பெரும் பணம் சேர்த்தான். ஒரு நாள் எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்த போது கிட்ட தட்ட எட்டு லட்சம் பொன் தன்னிடம் இருந்தது அவனுக்கு தெரிந்தது. இதை எதில் முதலீடு செய்தால் ஒன்றிரண்டு வருடங்களில் அதை இரண்டு மடங்காக்க முடியும் என்று திட்டமிட்டு எழுதுவதற்காக ஓலையையும், தூரிகையும் எடுத்தான். சுரீரென்று அவனுக்கு நடு மார்பு வலித்தது. அப்படியே பின்னுக்கு சாய்ந்தான். அவன் கண்ணெதிரே மரண தேவதை தோன்றி,
" புறப்பட்டு என்னுடன் !" என்று அழைப்பு விடுத்தது.
அம்மனிதனின் கெஞ்சினான். அழுது முறையிட்டான்.தேவதை சற்றும் மனம் இளகவில்லை. " கொஞ்சம் காலம் வாழ அருள் செய்!" என்று வேண்டிகொண்டான். அது அசைந்து கொடுக்கவில்லை.
" ஒரு நாலு நாலாவது அவகாசம் கொடு " என்று அழுதான். அப்படியும் அது அசையவில்லை.
" எனது எல்லாச் சொத்துக்களையும் தருகிறேன். ஒரு பகல் அவகாசம் கொடு. வீட்டில் என் பந்துக்கள் யாருமில்லை"
அப்போதும் அது மசியவில்லை."
இதோ பார். உன் சொத்துக்கள் எதுவுமே அங்கே பயன்படாது. உன் உறவுகளை பற்றிஎல்லாம் எனக்கு அக்கறை இல்லை. உனக்கு இரண்டே இரண்டு வினாடிகள் அவகாசம் தருவேன். அவ்வளவுதான்" என்றது மரண தேவதை கண்டிப்புடன்.
தன வியாபாரத்தின் கொள்முதல், விற்பனை, வரவு, செலவு, லாபக் கணக்கு இவற்றைப் பற்றி எழுதுவதற்கு தனது ஓலையை எடுத்தவன் அதில் அவசரமாக இப்படி எழுதினான்.
" இதைப் படிக்கும் எல்லோருமே உணரவேண்டிய உண்மை என்னவென்றால் பொருள் சேர்ப்பதில் உங்களது வாழ்நாளை வீணடித்து விடாதீர்கள். எட்டு லட்சம் பொன் இருந்தும் என்னால் ஒரு நாழிகையைக் கூட அதன் மூலம் வாங்க முடியவில்லை. "
********************************************
புத்தர் சொல்கிறார் ," இந்த நிலம் என்னுடையது, இவர்கள் என் பிள்ளைகள் என்பதெல்லாம் தானே தனக்கு சொந்தம் இல்லை என்றுணராத முட்டாள்களின் வார்த்தைகள்தான்."
அவன் எவ்வளவு விட்டுச் சென்றான் என்ற கேள்விக்கு ஒரே பதில் எல்லாவற்றையும் என்பது தான்.
இரண்டாவது பதில், எதையும் விட்டுவிட்டு அவன் செல்லவில்லை. அவன் இவற்றிலிருந்து
அப்புறப்படுத்தப்பட்டான் என்பதே.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.