Thursday, 9 June 2016

ஆதிசங்கரர்

ஆதிசங்கரர் பல முறை லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ர நாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும் சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம்.

இரண்டு மூன்று முறை இவ்வாறு நடக்க ஏன் இப்படி என்று சிஷ்யரிடம் கேட்கையில் சிஷ்யர் தாம் சுவடிகளை எடுக்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளை தந்ததாகவும் அதனைச் சரிபார்க்காது தாம் கொண்டுவந்து தந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு இரண்டு மூன்று  முறை விஷ்ணு சஹஸ்ர நாமச் சுவடிகளை அன்னையே தந்ததாக அறிந்த சங்கரரும் அது அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தாராம்.

செளந்தர்ய லஹரி, பவானி ஸ்தோத்ரம், என்று பலவிதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண இயலவில்லை. அதையே பிற்காலத்தில் வந்த ஒருவர் மூலமாக அன்னை செய்து வைத்தாள் என்றால் அது பிற்காலத்தில் வந்தவரது பக்தியை அனுஷ்ட்டான சாதகத்தை பாண்டித்யத்தை அன்னையே விரும்பிச் செயல்படுத்தினாள் என்றுதானே பொருள்? இவ்வாறு லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணியவர்தான் பாஸ்கர ராயர். {தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.}

இவர் பிறந்தது மாகாராஷ்டிரத்தில் பாகா என்னும் நகரத்தில். இவரது பிறப்பு கி.பி 1690 என்று தெரிகிறது. தந்தை பெயர் கம்பீர ராயர் தாயார் கோனாம்பா. கம்பீர ராயர் விஜயநகர அரசவையில் பெளராணிகராக இருந்தவர் மகாபாரதப் பிரவசனம் செய்து அதன் மூலமாக பாரதீ என்னும் பட்டப் பெயரை பரம்பரை உரிமையுடன் பெற்றதாகச் சொல்கிறார்கள். கம்பீர ராயர் தமது மகனான பாஸ்கர ராயருக்கு காசியில் உபநயனமும் அத்யயனமும் செய்து வைத்திருக்கிறார். அக்காலத்திலேயே வாக்தேவி மந்திர தீக்ஷையும் நடந்து அம்மந்திரத்தை ஜபித்து வந்திருக்கிறார். சிறிது காலத்திலேயே வேத அத்யயனம் முடித்து ஊர் திரும்புகையில் குஜராத்தில் ப்ரகாசாநந்த நாதர் என்பவரை கண்டு அவரிடம் ஸ்ரீ வித்யை உபதேசமும் பூர்ணாபிஷேகமும் செய்து கொள்கிறார். பூர்ணாபிஷேக நாமம் ஸ்ரீ சிதானந்த பாதரேணு என்பதாகும். பின்னர் ஸ்ரீ கங்காதர வாஜபேயி என்பவரிடம் தர்க்க சாஸ்த்திரத்தையும் படிக்கிறார். அதர்வண வேதம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக தானே அதனை அத்யயனம் செய்து அதனை பலருக்கும் கற்பித்து அவ்வேதத்தை உத்தாரணம் செய்கிறார். இவரது மனைவி பெயர் ஆனந்தி . அவருக்கும் மந்திர உபதேசம் செய்வித்து பத்மாவதம்மாள் என்று தீக்ஷா நாமம் வழங்கியிருக்கிறார். பிறகு ஒரு சமயம் வல்லப ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த ஒரு வித்வானை வாதில் வென்று அவரது மகளையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த மனைவி பெயர் பார்வதி என்பதாம். இரு மனைவிகளுடன் காசியாத்திரை கிளம்பிச் செல்லும் வழியில் ஒர் மாத்வ மஹானையும் வாதில் வென்றதாகச் சொல்லப்படுகிறது.

காசியில் ஸோம யாகம் செய்திருக்கிறார். அக்காலத்தில் காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும் குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் சமயாசாரத்தின் படியாக உபாசனை செய்து வந்தாலும், அவரை வாமாசாரத்தைச் சார்ந்தவர் என்று திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த பாஸ்கர ராயர் தாம் வாதம் செய்ய தயார் என்று பிரகடனம் செய்கிறார்.

பாஸ்கர ராயருடன் வாதம் செய்ய அப்போது அங்கிருந்த குங்குமாநந்த நாதர் என்னும் யோகியைத் தயார் செய்து அவரை முதன்மையாகக் கொண்டு வாதத்தை தொடங்குகின்றனர் வைதீகர்கள். பல கேள்விகளுக்கும் சிறப்பாக சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும் மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் "சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ கணசேவிதா" (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர் வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து அந்தந்த யோகினிகளுக்கான பெயர் மந்திரங்கள் சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது தமது தலைவரான குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று வினவ அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்லர். நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுகிறார். தமது சிஷ்யர்கள் அந்தக் காக்ஷியைக் காணத்தக்க விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் நில்லாது பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

கல்வியில் சிறந்து விளங்க

லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும்

ஆத்ம வித்யா மஹா வித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா
ஸ்ரீஷோடசாக்ஷரீ - வித்யா த்ரிகூடா காமகோடிகா

தசமுத்ரா - ஸமாராத்யா த்ரிபுரா ஸ்ரீவசங்கரீ
ஜ்ஞானமுத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணி!

என்ற ஸ்லோகங்களை விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு 48 நாட்கள் சொல்லி வர சரஸ்வதியின் அருள்கிட்டும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.