🌿 சுவாமி விவேகானந்தரின் இன்றைய சிந்தனை 🌿
🌿 மனத்தை ஆராய்தல் 🌿
🌿 மனத்தின் ஆற்றல்களை எல்லாம் ஒருமுகப்படுத்தியதால்தானே உலகிலுள்ள அறிவை மனிதன் பெற்றான், எவ்வாறு தட்ட வேண்டும், தேவையான உந்துதலை எப்படி அளிப்பது என்பது மட்டும் நமக்குத் தெரியுமானால் உலகம் தனது ரகசியங்களை அளிக்கத் தயாராக இருக்கிறது. அதற்கான வலிமையும் வேகமும் ஒருமைப்பாட்டின் மூலமே கிடைக்கிறது.
🌿 மனித மனத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. எவ்வளவுக்கு அதை ஒருமைப்படுத்துவீர்களோ, அந்த அளவிற்கு ஆற்றலை ஒரு மையத்தில் குவிக்க உங்களால் முடியும். இதுதான் ரகசியம்.
🌿 மனத்தைப் புறப்பொருட்களின்மீது குவிப்பது எளிது. இயல்பாகவே மனம் வெளிநோக்கு கொண்டது. ஆனால் மனத்தை வெளிப்பொருளிலிருந்து பிரிப்பது தான் கடினம்
🌿 மத ஆராய்ச்சி, மனஇயல், தத்துவம் இவை மனத்தை ஆராயும் படி கூறுகின்றன. இந்த மனத்தை ஆராயவும் மனம்தான் வேண்டும். மனமே மனத்தை ஆராய்கிறது.
🌿 மனத்திற்குத் தன்னையே நோக்கும் தன்மை உண்டு என்பது நமக்குத் தெரியும் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அதேவேளையில் ஏதோ ஓர் இரண்டாம் மனிதனைப்போல் தனியாக நின்று, நான் பேசுவதை அறியவும் கேட்கவும் செய்கிறேன்.இவ்வாறு மனம் இரண்டாக பிரிந்து செயல்பட முடியும்.
🌿 மனத்தின் ஆற்றல்களைக் குவித்து அதன் மீதே திருப்ப வேண்டும்.
🌿 நமக்கு ஆன்மா உண்டா, இல்லையா? வாழ்வு என்பது ஐந்து நிமிடத்திற்கா அல்லது என்றென்றைக்குமா? பிரபஞ்சத்தில் ஒரு கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்பவற்றையெல்லாம் நமக்கு நாமே உணர்ந்துகொள்ள வேண்டும்.
🌿 நீங்களே கண்டறியாததுவரை எதையும் நம்பாதீர்கள்.
🌿 மனம் என்பது உடலின் ஒரு நுண்பகுதி மட்டுமே. மனம் உடலின்மீது செயல்படுகிறது, உடலும் மனத்தின்மீது செயல்படுகிறது.
🌿 உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனமும் நலமாக வலிமையாக இருக்கிறது. கோபம் வரும்போது மனம் சஞ்சலமடைகிறது. அது போலவே மனம் கலங்கினால், உடல்நலமும் கெடுகிறது.
🌿 மக்களுள் பெரும்பாலோரைப் பொறுத்தவரை மனம் ஏறக்குறைய உடலின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அவர்களின் மனம் மிகக்குறைவாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறது. அவர்கள் விலங்குகளிலிருந்து மிகச் சிறிது மட்டுமே வேறுபட்டுள்ளனர்.
🌿 நமக்கு நம் மனத்தின்மீது மிகச் சிறிதளவே கட்டுப்பாடு உள்ளது. அந்தக் கட்டுபாட்டைக் கொண்டுவருவதற்கு, உடலைச் சார்ந்த சில உதவிகள் வேண்டும். போதிய அளவிற்கு உடம்பை அடக்கியபின், மனத்தை வசப்படுத்த முயலலாம்.
🌿 பிரபஞ்சம் முழுவதையும் கட்டுப்படுத்த முனைகிறான் யோகி. அதற்குக் குறைந்த எதையும் அவன் நாடுவதில்லை. இயற்கைநியதிகள் என்று நாம் அழைக்கிறோமே, அவை தன் மீது எந்த ஆதிக்கமும் செலுத்தாத, அவை அனைத்தையும் கடந்த ஒரு நிலையை அடைய அவன் விரும்புகிறான்.
🌿 மனித இனத்தின் முன்னேற்றம். நாகரீகம் என்பதெல்லாம் இயற்கையை அடக்கி ஆள்வதைத்தான் குறிக்கும்.
🌿 அக இயற்கையை(மனத்தை) கட்டுப்படுத்தவதால் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம் என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்களோ புற இயற்கையை கட்டுப்படுத்துவதால் நாம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர். இரண்டு கூற்றுகளின் எல்லைவரை சென்றோமானால் இரு சாரார் கூறுவதும் சரியே, ஏனெனில் இயற்கையில் அகம், புறம் என்ற பாகுபாடு இல்லை.
🌿 ஒரு உலக விஞ்ஞானி வெளியுலக விஞ்ஞான அறிவை அதன் கடைசி எல்லைக்குக் கொண்டு போகும்போது அது மனஇயல் தத்துவத்தில் கரைவதைக் காண்கிறார்
🌿 எந்த ஒன்றிலிருந்து பல தோன்றினவோ, எந்த ஒன்று பலவாக இருக்கின்றதோ, அந்த ஒன்றை அந்த ஒருமையைக் காண்பதே எல்லா சாஸ்திரங்களின் முடிவான நோக்கம்
🌿 வலிமையே வாழ்வில் சிறந்த வழிகாட்டி. மற்ற விஷயங்களில் போலவே மதத்திலும் உங்களைப் பலவீனப்படுத்துகின்ற அனைத்தையும் விலக்கிவிடுங்கள். அவற்றுடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் வேண்டியதில்லை. ரகசியங்களை நாடுவது மூளையைப் பலவீனப்படுத்துகிறது.
🌿 சுவாமி விவேகானந்தர் 🌿
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.