Monday, 4 April 2016

விரதம் இருப்பது எப்படி ?

விரதம் இருப்பது எப்படி ?
The Power and Purpose of Fasting :
ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.
நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.
விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம்.
பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம்.
உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பதாக விளக்கினேன் அல்லவா? பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.
கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று
நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும்.
காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது.
உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி? என பலர் நினைக்கிறார்கள். மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது.
பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார்.
துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய விளையாட்டை புரிந்துகொண்டாள்.
பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும் இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல் வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும்.
விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.
சதுர்த்தி,சஷ்டி,ஏகாதசி,பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.
சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக் பயன்படுத்தினார். தற்சமயம் அது அரசியலாகிவிட்டது.
நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம்.
நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.
விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.
சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். சந்திராம்ச விரதத்தை பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத தினங்கள்தான்.
யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது?
• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்
இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.
மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.
மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது எதிரான செயல். மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ள
ுங்கள். உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்.
விரதங்களில் வாய்மூலம் அனுஷ்டிக்கும் விரதத்தை பற்றி பார்த்தோம். ப்ராணாயமத்தில் கும்பகம் எனும் செயல் தற்காலிகமான சுவாச விரதம் எனலாம். மேலும் பிரம்மச்சரிய விரதம் தொடு உணர்வுக்கு விரதமாகும்.
ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம். தனது எடுத்துக்கொண்ட செயலை எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம். தனது ஆன்மீக செயல்களை தடையில்லாமல் தினமும் எந்த காரணம் கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம். ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பது பக்தி. ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத் தொடங்கும். இறைவனை நினைத்து உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான்.
நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும் தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது. நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்புரியும். அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.