ஒரு அரசன் வேட்டைக்கு போகின்ற வழியில் நீண்ட காலமாக தவம் இருந்த முனிவர் ஒருவரின் தவத்தை கலைத்து விட்டார். கோபம் கொண்ட முனிவர் அரசனை பன்றியாகக் கடவது என சாபமிட்டார்.
அரசனாக வாழ்ந்தவன் பன்றியாக வாழப்போவதை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. தன்னுடைய மகனை அழைத்து,
" மகனே முனிவர் என்னை சபித்து விட்டார். நான் மன்னனாக வாழ்ந்தவன்.
இப்போது பன்றியாகப் போகிறேன். பன்றியாக வாழக் கூடிய அவலநிலை எனக்கு ஏற்படக் கூடாது. ஆகவே நான் பன்றி ஆன பின் எப்படியாவது தேடிப் பிடித்து என்னைக் கொன்றுவிடு" என கேட்டுக்கொண்டான்.
பன்றியாகிப் போன மன்னனை இளவரசன் தேடி அலைந்தான். பல பன்றிக் கூட்டங்களை கூட கொன்றுவிட்டான். எதாவது பன்றி தனியாக ராஜ கம்பீரத்துடன் நடந்து சென்றால் உடனே அதனை கொன்று விடுவான். ஒவ்வொரு பன்றி சாகும் போதும் அது அரசன் இல்லை என்பதை தெரிந்து அரசனைத் தேடிக்கொண்டிருந்தான்.
ஒரு நாள் ஒரு பன்றிக் கூட்டம் சாக்கடையை கடைந்து கொண்டிருந்தது. ஒரு ஆண் பன்றி , ஒரு பெண் பன்றி மற்றும் சில குட்டிகள் அந்த சாக்கடையில் கிளறிக்கொண்டு இருந்தன.
அது தனது தந்தையாக இருக்காது என இளவரசன் நினைத்தாலும் மனதுக்குள் ஒரு நெருடல் ஏற்பட்டதால் வாளை உருவி ஓங்கி அந்த ஆண் பன்றியை வெட்டுவதற்காக ஓங்கினார்.
அதைப் பார்த்த அந்த ஆண் பன்றி
" மகனே என்னை வெட்டாதே. நான் அரண்மனையில் இருந்து வெளியே வந்த பின் இந்த பன்றியை திருமணம் செய்து கொண்டேன். இது உன் தாய் மாதிரி. இவைகள் உனது தம்பி தங்கைகள். எனக்கு இந்த வாழ்க்கைப் இப்போது பழக்கப்பட்டு விட்டது" என்று கெஞ்சினார்.
இன்றைய வெறுப்பு நாளைய விருப்பமாகலாம்.
இன்றைய விருப்பம் நாளைய வெறுப்பாகலாம்.
அரசனாக இருப்பவன் ஆண்டிக் கோலத்தை நினைத்தாலே அஞ்சுவான். ஆனால் அத்தகைய சூழ்நிலை வரும் போது அதை இயல்பாக ஏற்றுக் கொள்கிறான்.
நாமும் சில நேரங்களில் சில சூழ்நிலைகளில் ( உயர்ந்ததோ / தாழ்ந்ததோ) வாழுவதற்கு அச்சப்படுவோம். ஆனால் அந்த சூழ்நிலைக்கு வரும் போது புதிய சூழ்நிலையில் பழகிவிடுவோம்.
இன்பத்திலிருந்து துன்பம் பிறப்பதும் துன்பத்திலிருந்து இன்பம் பிறப்பதும்
உலகில் மாறி மாறி நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்வதில் தான் வாழ்க்கையின் சுவாரசியம் அடங்கியிருக்கிறது.