Monday, 21 March 2016

பகவானே எல்லாம் உன் சித்தம் என்று சொல்வது ஏன் தெரியுமா?

பகவானே எல்லாம் உன் சித்தம் என்று சொல்வது ஏன் தெரியுமா?

மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன் என்பவனை,சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்தான் அர்ஜுனன்.

அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன்.

துரியோதனன்,கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர்். அர்ஜுனனால் அவனை நெருங்கவும் முடியவில்லை.அவனிருக்கும் இடமும் தெரிய வில்லை.மாலை நேரமும் நெருங்கியது.

" என்ன கிருஷ்ணா...சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே.!...
ஜயத்ரதனை எப்படிக் கொல்வது,"
என்றான் அர்ஜுனன்.

சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் ,பகவான்.இருள் சூழ ஆரம்பித்தது.இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான்.

்"சூரியன் அஸ்தமித்து விட்டான்.இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்"என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான்.

உடன் அர்ஜுனனைப் பார்த்து,
" அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது
ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து,தலை கீழே விழாமல் ,அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார் கிருஷ்ணர்.

ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன்.
தனது கோரமான தவப்பயனால்,ஜயத்ரதனைப் பெற்றார். அவன் பிறக்கும் போது ஒரு அசரீரி ஒலித்தது."உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப் படுவான். மிக்க கோபமும்,பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால்,அவன் தலை அறுபட்டு மாள்வான்." என்றது.

இதைக்கேட்ட விருத்தட்சரன்,தன் தவ வலிமையால்
"யுத்தகளத்தில் எவன் தன் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ,அவன் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும்" எனறு சாபமிட்டிருந்தான்.

இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி
" உன்னால் அறுபட்டு இந்தத்தலை கீழே விழுந்தால்,உன் தலை வெடித்து விடும்.அதனால் அருகிலுள்ள அவன் தகப்பனார் விருத்தட்சரன் மடியில் அந்தத் தலையைத் தள்ளு ,"எனறார் கிருஷ்ணன்.

அர்ஜுனனும் அப்படியே செய்தான்.அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம் செய்து கொண்டிருந்ததால்,மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.

பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் ஏதோ கனமாக இருப்பதைக் கண்டு கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் மகன் தலையைக் கீழே தள்ளுபவனின் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும் என்ற சாபத்தால், விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது.

நாம் என்னதான் சூழ்ச்சி செய்தாலும்,சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம் செய்வதும், நடத்திவைப்பதும் பகவான் தான். அதனால் எல்லாப் பொறுப்புகளையும்,பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, "பகவானே.! உன் சித்தம்.! எது நல்லதோ,அதைச் செய் என்று சொல்லி,அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை.அவன் செய்வான்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.