Monday, 14 March 2016

விபூதி பிறந்த கதை-

சிவாய திருச்சிற்றம்பலம் !!!!
விபூதி பிறந்த கதை-
சைவர்கள் பெருஞ்செல்வமாக போற்றும் திருநீறு பிறந்த வரலாற்றினை சில நூல்கள் விளக்குகின்றன.. அதனை சிறிது கண்ணுறுவோம்
ஒருசமயம் யுகங்கள் முடிந்து புதிதாய் படைப்பு தொழில் தொடங்கும் வேளையில் சிவபெருமான் உமாதேவிக்கு தமது அக்னி கோலத்தின் பெருமைகளை விளக்கியதுடன் அது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருந்தும் தனித்தன்மையுடன் விளங்குவதையும் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றில் மறைந்து நின்று செயல்படுவதையும் விளக்கி கூறினார்.
மகா அக்னியாக விளங்கும் தாமே வானத்தில் இடி மின்னலாகவும் பூமிக்குள் எரிமலை குழம்பாகவும், கடலுக்குள் வடவாமுகாக்னியாகவும் இருப்பதை விளக்கினார், பின் அந்த அக்னிவடிவமாக இரண்டு முகங்களுடன் ஏழு கைகளும் ஏழு நாக்குகளும், மூன்று கால்களும், தலையில் நான்கு கொம்புகளுடன் காட்சியளித்தார். அந்த பேருருவை கண்டு பயந்த உமாதேவி அவரை வணங்கி தமக்கு காப்பாக இருக்கும் ஒரு பொருளை அருளுக என்றாள்.
செம்பொன் மேனியில் வெண்ணிறமாய் பூத்திருந்த வெண்பொடியை வழித்து ,இதனை காப்பாக கொண்டு இவ்வுலகினை வழி நடத்துவாய் என்றார். அதனால் அதற்க்கு சிவவீர்யம் எனப்பட்டது, தேவி அதனை நெற்றியிலும் உடலிலும் காப்பாக அணிந்ததால் திருநீற்று காப்பு எனப்பட்டது.உடலெங்கும் பூசியதால் சிவ கவசம் எனப்பட்டது.
எஞ்சிய விபூதியை அவர் ரிஷப தேவரிடம் தர அவர் அதனை உட்கொண்டார், அதனால் அவர்க்கு அளப்பரிய சக்தியை கொடுத்தது, இதனை அவர் மூலம் கோ உலகத்தில் உள்ள ஐந்து பசுக்களான சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை,நந்தை ஆகிய பசுக்களிடம் சேர்த்து பின்னர் பூலோக பசுக்களிடம் வந்து சேர்ந்தது. அதனாலேயே நாம் கோ ஜலம், கோ சாணம் ஆகியவற்றினை கலந்து உருண்டைகளாக பிடித்து நெருப்பிலிட்டு தயாரிக்கிறோம்.
திருநீற்றினை வாங்கி இட்டுக்கொள்வதுடன் சிறிது வாயிலும் போட்டுக்கொண்டால் அநேக வியாதிகளை தீர்க்கும். முறையாக மந்திரிக்கப்பட்ட விபூதி வாதத்தினால் உண்டாகும் எண்பத்தொரு வியாதிகளையும் பித்தத்தால் உண்டாகும் அறுபத்து நான்கு வியாதிகளையும், கபத்தினால் உண்டாகும் இருநூற்று பதினைந்து வியாதிகளையும் தீர்க்கும்.
பின் குறிப்பு - இவையெல்லாம் கடையில் விற்கும் காகிதசாம்பல் விபூதியில் கிடைக்காது, பசுஞ்சாண விபூதி வாங்கி அதனை இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்து எடுத்து பத்திரப்படுத்தி பஞ்சாட்சர மந்திரமான சிவாயநம ,நமசிவாய என சொல்லி உபயோகிப்பீர் நலம் பெறுவீர்.
நற்றுணையாவது நமசிவாயவே!!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.