Sunday 27 March 2016

மனசு சரியில்லையா?.....

மனசு சரியில்லையா?.....

அன்றாடம் நடைபயிலச் செல்லும்போது, எப்போதும் கூடவரும் நண்பர் ஒருவர் வரவில்லை. என்ன காரணம் என்று கேட்டபோது, “மனசு சரியில்லை” என்றார். நேரிலே சந்தித்தபோது, எக்கச் சக்கமான மன இறுக்கத்தில் இருந்தது தெரிய வந்தது. சிறிது நேரம் இருவரும் அளவளாவியபோது, தேவையற்ற சிந்தனை, வேண்டாதவற்றை மனதிலே போட்டு குழம்பிக்கொண்டிருத்தலால் வந்த வினைதான் இந்த “மனசு சரியில்லை” க்குக் காரணம் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. அவரோடு உரையாடியதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.......

நம்மில் பழகுபவர்கள் சில சமயம் “இன்னிக்கு மனசு சரியில்லப்பா" என்று சொல்வதைக் கேட்டிருப்போம், ஏன்?.. நாம் கூட இதேபோல் சொல்லியிருக்கலாம். இதைப் பற்றிய ஒரு சிந்தனை. 

இப்படித்தான் ஒருவருக்கு மனசு சரியில்லை என்று மருத்துவர் பலரிடம் அழைத்துக் காண்பித்த போதும், சித்தம் தெளிந்த பாடில்லை.  மருத்துவர் வைத்தியம் எதுவும் பலிக்காத நிலையில், அவரை ஒரு முனிவரிடம் அழைத்துச் சென்றார்களாம். முனிவரிடம், இவன் எப்போதும் குழம்பிய மனநிலையில், எதையும் சரிவரச் செய்வதில்லை, எந்த ஒரு காரியத்திலும் ஈடுபாடில்லை, எப்போது கேட்டாலும் மனசு சரியில்லை என்று சொல்கிறான், எல்லோரிடத்திலும் வைத்தியம் செய்தும் பலனளிக்கவில்லை, நீங்கள்தான் தயைகூர்ந்து ஏதாவது வழியொன்றைக்க் கூறவேண்டும் என்று சொல்ல. முனிவர் அவரைச் சோதித்தபின், இவன் ஒரு வாரம் என்னிடம் இருந்தால், அவன் குணமடைந்து விடுவான் என்று சொல்லி, அவனை மாட்டுத் தொழுவத்தில் ஒரு வாரம் வேலை செய்யச் சொல்லி, ஒரு பொட்டலத்தைக் கொடுத்து இதைப் பிரிக்காமல் தொடர்ந்து தினமும் நெருடிப்பார்த்தால், ஒருநாள் அது ருத்திராட்சமாக மாறும், மாறிய உடனே என்னிடம் வா என்றாராம்.  

வாரம் முழுவதும் மாடுகளைப் பராமரிப்பதிலேயே அவன் கவனம் இருந்தது. அவன் நன்றாகப் பேசிக்கொண்டு, வேலையையும் செய்வதைப் பார்த்து எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.

ஒரு நாள் முனிவர் அவனிடம்,  என்னப்பா ருத்திராட்ச்சம் கிடைத்ததா என்றார். இல்லை, அதிலிருந்து ருத்திராட்ச்சம் வரவில்லை புழுதான் வந்தது, நாற்றம் எடுக்க ஆரம்பித்த, அந்தக் குப்பையைத் தூக்கி எறிந்துவிட்டேன். தூக்கி எறிந்தபிறகுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன் தினமும் அதை நெருடுவதிலேயே என் கவனம் முழுவதும் இருந்ததால் என்னால் என் வேலையைச் சரிவரச் செய்யமுடியவில்லை. அதைத் தூக்கி எறிந்தபிறகு தெளிவாக இருக்கிறேன், மாடுகளை நன்றாகப் பராமரிக்கிறேன் என்றானாம்.

ஆமாம், நீ சொல்வது சரிதான், நான் உன்னைச் சோதிப்பதற்காக பசுங்சாணத்தை பொட்டலமாக மடித்துக்  கொடுத்தேன். எப்போது அது உனக்குத் தேவையில்லை என்றபோது நீ அதைத் தூக்கி எறிந்து விட்டாயோ அப்போதிலிருந்தே நீ உன் வேலையில் கவனம் செலுத்தமுடிந்தது. குப்பையைத் துக்கி எறிந்ததுபோல், தேவையற்ற எண்ணங்களை உன் மனதிலிருந்து தூக்கி எறிந்து விட்டாயானால், சிந்தனையும் செயலும் தெளிவுபெறும் என்றாராம். இப்போது நீ அதைப் புரிந்துகொண்டு விட்டாய், இனி உனக்கு மன உளைச்சல் இருக்காது என்றாராம் முனிவர்.

ஆக, மனச நல்ல படியா பாத்துக்கறது நம்ம பொறுப்புதானே, “மனிதன் எதையோ பேசட்டுமே, மனசப் பாத்துக்க நல்லபடி” என்கிற 1970 களில் கவியரசு எழுதிய பாடல் ஒன்றின் நினைவுக்கு வருகிறதா..

இல்லாததை நினைத்து ஏங்குவதைவிட, இருப்பதைக் கொண்டு மன நிம்மதி அடைவதே, மனசு சரியாவதற்கு ஒரே வழி என்பதை ஆன்மீகத்தின் வாயிலாக அறிந்துகொள்ளமுடியும்.

தர்ம சிந்தனை இல்லாமல், குப்பைகளை மனதுக்குள் தேக்கி வைத்திருப்பவர்களை “ஏழை மனதுடையோர்” என்கிறது திருமந்திரம். மனசிலிருக்கும் அழுக்குகளைப் போக்கி, மெய்யறிவை மனதுக்குள் நிலை நிறுத்தி, செல்வத்தை அதிகம் சேர்க்காமல், தானம் செய்ய வேண்டுமாம், உடம்பு நெருப்பிலே அழியும் போது செல்வங்கள் கூடவராது என்பதை இக்கணமே சிந்திப்பீராக, தரும சிந்தனை இல்லாத "ஏழை நெஞ்சம்" உடையவரே என்று கூக்குரலிடுகிறார் திருமூலர்.

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்!
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர்!
விழித்திருந்து என்செய்வீர்?. . .வெம்மை பரந்து
விழிக்க அன்று என்செய்வீர்?.. .ஏழைநெஞ்சீரே!. . . 

மனசிலே கூட,  ஏழை, பணக்கார வித்தியாசத்தைச் சிந்திக்க வைக்கும் அற்புதமான, அருமையான தமிழ்ப் பாடல் வரிகளோடு விடைபெறுமுன். ..

“ஆத்துல போட்டாலும் அளந்துதான் போடவேண்டும்” என்கிற பழமொழி நாம் பரவலாக அறிந்ததே. ஆனால் இதற்கு உண்மையான அர்த்தம் வேறு. அதாவது ஓடுகின்ற ஆற்றிலே எதைப் போட்டாலும், அது ஆற்றோடு அடித்துச் செல்லப்படும், திரும்ப எடுக்க முடியாது என்றுதான் பொதுவாகப் பலரும் பொருள் கொள்வர். 

ஆனால் அதுவல்ல உண்மை, “அகத்திலே போட்டாலும் அளந்து போடு” என்பதுதான் உண்மையான பழமொழி.  “அகம்” என்பது இங்கே மனதைக் குறிக்கும். நாளடைவில் “அகத்திலே” என்பது மருவி “ஆத்துலே” என்பது வழக்கமாகிவிட்டது. “அகத்தின் அழகு முகத்திலே தெரியும்” என்கிற பழமொழியிலும் “அகம்” என்பது மனதைத்தான் குறிக்கிறது.

நல்ல விஷயங்களைப் படிப்பதும், கேட்பதும் மனதுக்கு இதமளிக்கும். மனதுக்குள்ளே தேவையானதை மட்டுமே போடவேண்டும், தேவையற்ற சமாச்சாரங்களை ஒதுக்கி விட்டால், மனசு சரியில்லை என்று சொல்வதைத் தவிர்க்கலாம் என்பதே இக்கட்டுரையின் சாரம். 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.