Monday, 14 March 2016

ரிலாக்ஸாக இருங்கள்.

அது ஒரு பள்ளிக்கூடம்.

ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார்.

மாணவர்கள் எழுந்து நிற்கிறார்கள். அவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார்.

3 & 6 & 12

இப்படி மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார். கேட் கிறார்.

‘‘மாணவர்களே... இதன் தீர்வு...’’

அவசரக்குடுக்கையான ஒரு மாணவன் எழுந்து நிற்கிறான்.

‘‘ஐயா..! இது ஏறுமுகம்... ஆகவே அடுத்த எண் 24... இதுதான் விடை!’’

‘‘இல்லை!’’ என்கிறார் ஆசிரியர்.

அடுத்து ஒரு மாணவி எழுந்து நிற்கிறாள்.

‘‘ஐயா! அந்த மூன்று எண்களையும் கூட்டினால் 21. அதுதான் விடை!’’

‘‘இல்லை... இல்லை!’’
மாணவர்கள் விழிக்கிறார்கள்.

இப்போது ஆசிரியர் விளக்குகிறார்.

‘‘மாணவர்களே... நான் எந்தக் கணக்கையும் இன்னும் போடவில்லை. அதற்குள் விடை காண அவசரப்படுகிறீர்கள். இயல்பாக எனக்குத் தோன்றிய மூன்று எண்களைத்தான் கரும்பலகையில் எழுதினேன். மற்றபடி நான் இப்போது எழுதியதற்குத் தீர்வு என்று எதுவும் இல்லை.’’

தெளிவான மாணவர்கள் தலையசைத்து ஒப்புக்கொண்டார்கள்.

ஆசிரியர் மறுபடி ஆரம்பித்தார்.

‘‘இப்போது மறுபடியும் முயல்வோம்...’’ என்று சொல்லிவிட்டு, கரும்பலகையில் எழுதினார்:

22 58 33 55.

உடனே மாணவர்கள் சந்தேகத்துடன் கேட்டார்கள்.

‘‘சார், இதன் தீர்வு என்ன?’’

ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

‘‘இதற்கான தீர்வை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இது என் வீட்டு டெலிபோன் நம்பர்!’’

மாணவர்கள் அமைதியானார்கள்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.
‘‘மாணவர்களே! இந்த இரண்டு கணக்குகள் மூலமாகவும் உங்களுக்கு இரண்டு பாடங்கள் போதிக்க விரும்புகிறேன்.

உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை:

கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

இரண்டாவது அறிவுரை:

ரிலாக்ஸாக இருங்கள்.

நண்பர்களே!

இந்த அறிவுரை மாணவர்களுக்காக மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்காகவும்தான்.

இன்றைய மனிதன் கற்பனையான பிரச்னை களிலேயே அதிகம் கலங்கிப் போகிறான். அவசரப் பட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு அல்லல் படுகிறான்.

விளைவு?

ஆலயங்களை நாடிச் சென்று ஆண்டவனிடம் முறையிடுகிறான்.

பக்தர்களே!

உங்களுக்கு பகவான் சொல்ல விரும்புகிற அறிவுரையும் இதுதான்:

1. கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

2. ரிலாக்ஸாக இருங்கள்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.