குரு என்பவர் ஒருவருக்கு அவசியமா ?
ஐயா, குரு என்பவர் ஒருவருக்கு அவசியமா ?
உலகில் ஒவ்வொரு உயிரினமும் தன் வாழ்க்கைப் பற்றிய அறிவை தன் சக உயிரினங்களிடமிருந்து தான் பெறுகின்றது.
உடை உடுத்தலை, உண்ணுதலை, உறங்குதலை, கூடிப்புணர்தலை, இயற்கை உந்துதல் கொடுத்தாலும் அது சக உயிரினங்கள் சொல்லிக் கொடுக்க, அந்த அனுபவத்தை கிரஹித்துக் கொண்டு இன்னும் சீராக வாழ்கிறது. இந்த சீரான வாழ்க்கைக்கு நாகரீகம் என்று பெயர்.
எல்லா செயல்களையும் நீங்கள் பிறரிடமிருந்து கற்றுக் கொள்கிறீர்களே அன்றி எதையும் நீங்களாக அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொண்டதை நேர்த்தியாக செய்கிறீர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஆனால், வாழ்வின் அறிவு என்பது சக உயிரினமிடத்திருந்தே வருகிறது. தலை வாருதலிலிருந்து காலணி அணிவது வரை மற்றவர்கள் சொல்லி தந்துதான் அறிந்து கொள்கிறீர்கள் என்கிற போது வாழ்வின் ஆதாரமாக உள்ள ஆத்ம தாகத்தை, உயிரின் தவிப்பை, தன் இருப்பை அறிவது என்பதை எவரும் அறியாமல் நீங்களாக உணர்ந்து கொள்ள முடியுமா? இதை நானாக தெரிந்து கொள்வேன் என்று இறுமாந்து திரிவது நல்லதா. கடவுள் அறிதல் அல்லது தன்னை அறிதல் என்கிற விஷயத்திற்கு வெகு நிச்சயம் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறார். அந்த வழிகாட்டிக்கு குரு என்று பெயர்.
குரு என்பவர் சாக்கு போக்குக்காக உங்களை சில மந்திர ஜபங்கள் செய்யச் சொல்லி, பூஜைகள் செய்யச் சொல்லி மெல்ல மெல்ல பிரம்ம ரகசியத்தை உபதேசிப்பார் என்று சொல்லப்படுகின்றது.
கடவுள் தேடுதல் எதற்காக என்ற கேள்வி எழவில்லையெனில் வாழ்வு பூரணமாகவில்லை என்று அர்த்தம். வாழ்வினுடைய தினசரி விஷயங்களில் அலுப்பு ஏற்பட்டு இது என்ன வாழ்க்கை என்ற கேள்வி எழுகிற போது கடவுளைப் பற்றிய தாபம் அல்லது தன்னை அறிதலைப் பற்றிய ஏக்கம் எழுகிறது. அப்பொழுது வெகு நிச்சயம் குரு என்பவர் தேவை.
அந்த குரு தன்னை அறிந்தவராக இருக்கிறபொழுது உங்களுடைய தவிப்பை முற்றிலுமாய் உணர்ந்து உங்களை அறியாமல் உங்களை உங்களுக்குள் தள்ளுகின்ற ஆற்றலையும் பெற்றிருப்பார்.
அந்த ஆற்றல் மிக ரகசியமாய் உங்களில் பாய்ந்து உங்களுக்குள் உங்களை அறிவிக்கும். இது விஞ்ஞான பாடமல்ல.
அடிப்படையாய் புரிந்து கொள்வதற்கும், பேசி தெரிந்துகொள்வதற்கும். தடித்த புத்தகங்களிலிருந்து கற்று கொள்வதற்குண்டான விஷயமுமல்ல.
இது ரகசியமானது. ரகசியம் என்பதற்கு வேறு ஒருவருக்கு சொல்லக்கூடாது என்ற அர்த்தமில்லை. எப்படி உள்ளே வந்தது என்றே தெரியாத ரகசியம் இது. நீங்கள் எப்படி மாறினீர்கள் என்றே தெரியாத ரகசியம் இது. உங்களை அறியாது உங்களை மாற்றுவது என்பது தன்னை அறிந்த குருவால் வெகு நிச்சயம் இயலும்.
எனக்கும், கடவுளுக்கும் இடையே இன்னொருவர் எதற்கு என்று கேள்வி வருவது மிகப் பெரிய அறியாமை. தான் எல்லாம் அறிந்துவிட்டோம், தன்னால் சகலமும் அறியமுடியும் என்கிற அறியாமை.
உங்களுக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தவரையே குரு என்று கொண்டாடிக் கொண்டிருக்கிற பொழுது கடவுள் தேடலை தானாக அறிந்து கொள்வேன் என்று கொக்கரிப்பது எவ்வளவு பெரிய பேதமை. உங்களை அறிவது தான் சரியான அறிவு. ஆனால் தன்னுள் தான் மூழ்குவது என்பது மிக மிக கடிமனான விஷயம்.
குரு என்பவரால் மட்டுமே உங்களை உங்களுக்குள் தள்ள முடியும். தங்களை அறிய வேண்டும் என்ற ஆவலுள்ளவர்களுக்கு குருவினுடைய தேடலும் கூடவே வரும். அவருக்கு குரு அவசியமா என்ற கேள்வியே இருக்காது. குரு எங்கே என்கிற ஆவல்தான் இருக்கும்.
யார் குரு. நான் தான் குரு என்று சொல்லிக் கொள்கிறவர்கள் உங்களுக்கு குரு அல்ல.
தன்னை உணர்தலே கடவுள் உணர்தல் என்கிற மகாவாக்கியம் உணர்ந்தவரே குரு.
அவர் தன்னை உணர்ந்தவர் என்று சொல்லிக் கொள்வதே இல்லை. கடவுள் தெரிந்துவிட்டது என்று குதிப்பதும் இல்லை. மாறாய் அவர் வாழ்க்கை முற்றிலும் மற்ற மனிதர்கள் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டிருக்கிறது.
வாழ்வின் அநித்தியம், வாழ்வின் அபத்தம் புரிந்தபோது உள்ளுக்குளிலிருந்து ஒரு கருணை வெள்ளம் புறப்பட்டு சகலரையும் அணைத்து கொள்கிறது. யாரை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் இழந்து தொலைப்போம் என்கிற பரிதவிப்பு இருப்பின் யாரை வெறுக்க முடியும். எவரும் இங்கே நிரந்தரமில்லை என்கிறது மிக தெளிவாக வந்து விட்டால் எவரை வெறுக்க முடியும் எனவே எவரையும் வெறுக்காத கருணை மழை தான் குரு.
கருணை உள்ளவர் முகத்தில் அற்புதமான தேஜஸ் இருக்கும். அவர் ஒவ்வொரு அசைவும் அன்பை பொழியும். கடவுள் ரூபமாகவே இருக்கும். அந்த குரு உபன்னியாசம் செய்கிறவர் அல்ல. மிக பெரிய பிரசங்கங்கள் நிகழ்த்துவதை காட்டிலும் தனித்தனியே ஒவ்வொரு மனிதரின் உள்ளுக்குள் இருக்கின்ற ஆன்மாவைத் தொட்டு உசுப்பிவிடுவது தான் குருவின் வேலை.
எவரைப் பார்த்ததும் உள்ளுக்குள் பெரிதாய் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு அவரை உங்களை அறியாமல் வணங்கத் தோன்றுகிறதோ அவரை பின்பற்றத் தோன்றுகிறதோ, அவரை கொண்டாட ஆசை எழுகிறதோ, அவரை உங்கள் குரு என்று கொள்ளலாம்.
இங்கே ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். மக்களுடைய யோக்கியதைக்கு ஏற்ப அரசாங்கம் அமைவது போல, கலை இலக்கியம் இருப்பது போல, உங்களின் யோக்கியதைக்கு ஏற்ப உங்களுக்கு குரு கிடைப்பார்.
உங்களுக்குக் காசுதான் வாழ்வின் பிரதானம் என்றால் உங்களுக்கு காசு தருகின்ற குரு கிடைப்பார்.
உங்களுக்கு சுகபோகம்தான் பிரதானம் எனில் சுகபோகம் தருகின்ற குரு கிடைப்பார்.
உங்களுக்கு கடவுள் தேடுதல்தான் பிரதானம் எனில் கடவுளை அறிந்த குரு கிடைப்பார்.
உங்கள் யோக்கியதைக்கு ஏற்ப குரு கிடைத்த பிறகு தான் உங்களை பற்றியே உங்களுக்கு தெரியவரும்.
குருவை எங்கே தேடுவது. கடைகளில் குரு தொங்கிக் கிடக்க மாட்டார். குரு இன்னவிதமாக இருப்பார் என்று எவராலும் சொல்லமுடியாது.
ஒரு ஜப்பானிய கேள்வி-பதில் ஒன்று உண்டு. சாலையில் நீ நடக்கும் போது புத்தர் உனக்கு எதிரே நடந்து வந்தால் நீ என்ன செய்வாய் என்று கேள்வி உண்டு.
இந்த கேள்விக்கு பதில் சொல்லும்படி பணிப்பார்கள். விழுந்து வணங்குவேன், சுற்றி வந்து கொண்டாடுவேன், என் வீட்டிற்கு அழைத்துப் போவேன், உபசரிப்பேன், எல்லோரையும் கூட்டிக் கொண்டுபோய் புத்தரை அறிமுகப்படுத்துவேன் என்றெல்லாம் பதில்கள் உண்டு. ஆனால், அவை உண்மையான பதில்கள் அல்ல.
புத்தர் எப்படி இருப்பார் என்று யாருக்குத் தெரியும். ஏதோ ஒவியத்தைப் பார்த்து, சித்திரத்தைப் பார்த்து புத்தர் இப்படித் தான் இருப்பார் என்று நாம் நினைத்து கொள்கிறோம். புத்தர் என்ன விதமாக இருந்தார் என்று யாருக்கும் தெரியாது, உங்கள் முன் என்னவிதமாக தோன்றுவார் என்பதும் தெரியாது.
புத்தரைத் தேட வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டால் எதிர்ப்படுகின்ற ஒவ்வொருவரையும் இவர் புத்தரா? அவர் புத்தரா? இது புத்தரா? அது புத்தரா என்று தேடுவது போல நீங்கள் குருவை தேட வேண்டும். எல்லா இடத்திலும், எப்பொழுதும் இடையறாது, இடையறாது தேட வேண்டும்.
உங்கள் தேடல் உக்கிரமடைந்தால், ஒருமுகப்பட்டால் குரு உங்களை நேரே வந்து சந்திப்பார். அவராகவே வந்து உங்களை தொட்டு உலுக்குவார். என்னைத் தானே தேடிக் கொண்டிருக்கிறாய். இதோ என்று எதிரே வந்து நிற்பார் என்று சொல்லப்படுகின்றது.
குருவை ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட ரூபத்தில், ஒரு குறிப்பிட்ட அடையாளத்தில் கண்டுகொள்ள முடியாது.
குரு மனிதராகத் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை.
பெரும் வானம் சிலருக்கு குருவாக அமைந்திருக்கிறது. காற்றின் இரைச்சல் குருவாக அமைந்திருக்கிறது.
குரு தேடுதல் என்பது மனம் ஒருமுகப்பட்ட ஒரு உணர்வு. அந்த உணர்வு நிச்சயம் தேடுபவருக்கு குருவை கொண்டு வந்து கொடுக்கும்.
குரு வாழ்க! குருவே துணை!
வாழ்க வளமுடன்!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.