A different perspective
மஹாபாரதம் காட்டும் உயர்ந்த நட்பு எது?
உயர்ந்த நட்பு என்றால் என்ன? அதற்கு எது உதாரணம்.?
கர்ணன் நட்பிற்கு ஈடாகுமா? தன் நண்பணுக்காக உயிரையே தந்தானே?.
மகாபாரதத்தில் ஒரு நண்பன் இறந்தான். எத்தனை உறவினர்கள் உயிர் கொடுத்தார்கள் தெரியுமா?
துரியோதனன் நட்புக்கு ஈடாகுமா என்றான் ஒருவன்... அப்படி என்ன செய்தான் எனக்கேட்டேன்..
அவன் தன் எச்சிலையே திரும்ப உண்ண மாட்டான். அதாவது ஒரு தட்டுச் சோற்றில் ஒரு கவளம் தான் சாப்பிடுவானாம். பழம் கூட ஒரு கடி மட்டுமே. ஆனால் கர்ணனின் தட்டில் உண்பானாம்
இதுதான் நட்பா? கர்ணனை துரியோதனன் நட்பு கொள்ள காரணம் அவனின் திறமை அவனுக்குத் தேவைப்பட்டதால். அவன் ஏகலைவனிடம் நட்பு கொள்ளவில்லை. ஏனென்றால் அவனால் பயனில்லை.
கர்ணன் உயிரையே கொடுத்தான் என்கிறார் இன்னொருத்தர். அப்படியானால் ஏன் பீஷ்மர் அவனை அவமானப்படுத்தியபோது போரிலிருந்து விலகி நின்றான்? இந்தக் கேள்விக்கு பதில் வரவே இல்லை. கர்ணன் நட்பை விட தன் புகழையே பெரிதாக எண்ணினான். அதனால்தான் தாய்க்கு வாக்களித்தான், கவச குண்டலங்களைக் கொடுத்தான். இதையெல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் கூட கர்ண துரியோதன நட்பை உயர்ந்ததாகக் கருத முடியாது. அதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.
கர்ணன் துரியோதனன் நட்பை விட உயர்ந்த நட்பு மகாபாரதத்திலேயே இருக்கிறது.. உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்களாய் நாம்தான் கர்ண-துரியோதன நட்பைப் பேசுகிறோம்.
அவன் தெய்வம் என எல்லோராலும் போற்றப்பட்டவன். தன் நண்பனுக்கு சாரதியானான். நண்பன் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அவன் செய்து தரவில்லை. அவனுக்கு எது நல்லதோ அதைச் செய்தான். எது தர்மமோ அதை போதித்தான். அகந்தை கொண்டபோது அடக்கினான், சோர்வுற்ற போது தூக்கிச் சுமந்தான். அவனுடைய அண்ணன் தம்பிகள் மனைவி மக்கள் என அனைவருக்கும் வழிகாட்டினான்.
அர்ஜூனனும் தன்னை முழுமையாகச் சமர்பித்தான். ஒரு அக்ரோணிச் சேனையை விட கண்ணனே பெரிதென்றான். தன் மனதை முழுமையாக அவனுக்கு கொடுத்தான். தெரியாததை எல்லாம் எவ்வித கூச்சமுமின்றி அவனிடம் கேட்டான்...
கண்ணன் - அர்ஜூனன் உறவு, நட்பாக யார் கண்ணுக்கும் தெரியாத காரணம் பல இருக்கலாம், ஆனால் அதில் இருக்கும் நட்பு உண்மையானது.
கர்ண - துரியோதன் நட்பில் நண்பனின் மகிழ்ச்சி இப்படிப்பட்ட உணர்வுகள் மட்டுமே இருந்தன. கர்ணன் துரியோதனனின் மகிழ்ச்சியை நினைத்தான். துரியோதனன் கர்ணனின் உயர்வையே நினைத்தான். மற்ற எல்லோரையும் மறந்தனர். அவன் அழிவிற்கு இவன் அழிவிற்கு அவனும் காரணமாகினர். நட்பை உறவினர்கள் வெறுக்க முக்கியக் காரணம் இது.
இடித்துரைத்தல் என்ற பண்பு இல்லவே இல்லை. ஒரு நல்ல நண்பனின் கடமை அது.. ஒருவனுக்கு நல்ல நண்பன் இருப்பானாயின் அவன் நல்லவனாகவே இருக்க முடியும். நண்பனை நல்வழியில் நடத்துவது நண்பனின் முக்கியக் கடமை. இதனாலேயே கர்ண - துரியோதன நட்பை மிகச் சிறந்த நட்பாக எடுத்துக் கொள்ள இயலவில்லை.
உணர்ச்சி வசப்பட்டு நட்பு நட்பு என பேசுபவர்களில் பலர் ஒன்றை கவனிப்பதே இல்லை.
உன் நண்பன் நல்ல நண்பன் என்றால், நீ நல்ல மகனாக, நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக, நல்ல மனிதனாக இருப்பாய். அதுதான் நல்ல நட்பிற்கு அடையாளம்..
என் நண்பன் எனக்காக எதையும் எதிர்பார்க்காமல் எல்லாம் செய்வான் என்பது ஆதிக்க மனப்பான்மை
என் நண்பனுக்காக எதையும் செய்வேன் என்பது தாழ்வு மனப்பான்மை.
இதைத்தான் துரியோதனன் கர்ணன் நட்பில் காண்கிறோம்.
இந்த மயக்கத்தில் இன்றைய இளைஞர்களில் 95 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். இது உயர்ந்த நட்பு அல்ல.. கீழான நட்பு. சுயநல நட்பு..
நட்பு பற்றிப் பேசுபவர்களில் பலர் இந்த நுண்ணிய உண்மையை உணர்வதே இல்லை.
நட்பால் சீரழிவோர் பலரின் கதை இதுவாகவே இருக்கிறது. இவனின் ஆசைக்கு அவன் நெய்வார்த்து அவனின் ஆசைக்கு இவன் நெய்வார்த்து அழிகின்றனர்.
கர்ண துரியோதன நட்பு வேண்டாம்... கண்ணன் - அர்ஜூனன் நட்பில் இருப்போமே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.