சிவ..சிவ
மனித வாழ்க்கையில் இன்பம் துன்பம்
மனித வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டுமே நம் மரணத்தின் கடைசி நொடி வரை நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இன்பம் வரும்போது மகிழ்வதும், துன்பம் வரும்போது வருந்துவதும் மனித இயல்பு. ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான மனிதர்களை துன்பங்களே ஆட்டுவிக்கின்றன. நமக்கு வரும் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிற்குமே நாம்தாம் காரணம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அப்படியிருந்தும் நாம் துன்பத்தின் வாயிலில் சென்று சிக்கிக் கொள்கிறோம். அதற்கு காரணம்தான் என்ன? ஒரு சிறிய அலசல்.
ஒரு வேலையை நாம் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலையை பற்றின்றி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அந்த வேலையின் பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டும். பற்றின்றி செய்ய வேண்டும் என்பதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள கூடாது. எடுத்த வேலையை ஏனோ தானோ என்று செய்வதற்கு பற்றின்றி வேலை செய்தல் என்பது பொருள் இல்லை. ஒரு செயலை எந்த பற்றும் இல்லாமல், அதாவது அந்த வேலைக்கு அடிமையாகாமல், அதன் பந்தத்திற்கு உள்ளாகாமல், அதன் முடிவு பற்றிய பயம் இல்லாமல், முழு மூச்சோடு அந்த வேலையை செய்ய வேண்டும். அப்போது அந்த வேலையை நாம் நன்றாக செய்ய முடியும். அந்த செயலின் முடிவு நமக்கு சாதகமாக இருந்தாலும் நாம் அதனால் மகிழ்ச்சி கொள்ள மாட்டோம். முடிவு பாதகமாக இருந்தாலும் அதனால் நாம் வருத்தம் கொள்ளவும் மாட்டோம். காரணம் நாம் பற்றின்றி வேலை செய்கிறோம்.
எந்த ஒரு வேலையையும் என் உடம்பு செய்வதில்லை. நான் என்ற என் ஆன்மா இந்த உடம்பைக் கருவியாகக் கொண்டு செயல்படுகிறது என்ற எண்ணத்துடன் ஒரு செயலை செய்ய செய்ய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது நம்மை இன்பம் துன்பம் ஆகிய இரண்டுமே நம்மை நெருங்குவதில்லை. காரணம் நாம் அந்த செயலை ஆன்மாவால் செய்கிறோம். ஆன்மா இன்பம் துன்பம் ஆகிய எதுவுமே அறியாதது. ஆன்மா நிலையானது, அழிவற்றது. இந்த உடம்பு நிலையற்றது. கண்டிப்பாக ஒருநாள் அழியக் கூடியது. உடம்பு அழியும்போது ஆன்மா வேறொரு உடலைத் தேடி செல்கிறது.
இப்படி ஒரு செயலைப் பற்றில்லாமல் செய்ய முயற்சிப்போம். பிறகு நம்மை இன்பம் துன்பம் எதுவுமே கட்டுப்படுத்தாது. எந்த ஒரு மனிதன் இன்பம் துன்பம் ஆகிய நிலைகள் இல்லாமல் எப்போதும் ஒரே நிலையில் இருக்கின்றானோ, அந்த மனிதன் ஒரு செயலை ஆன்மாவால் செய்கிறான் என்று அர்த்தம். அவன் முழு சுதந்திரம் உடையவனாக இருக்கின்றான் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.
மேலே சொன்ன கருத்துக்கள் கீதையின் மையக் கருத்தாகும். அதனைக் கடைப்பிடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் கடைபிடித்தால் உங்களுக்கு இன்பமும் இல்லை; துன்பமும் இல்லை. ஆன்மாவில் நிலைபெற்று விட்டீர்கள். அடுத்த பிறவியும் இல்லை. காரணம் உங்களுக்கு ஆசைகள் இருப்பதில்லை. ஆசை இருக்கும் வரை உங்களுக்கு மறுபிறவி என்ற ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அதனால்தான் ஆசையில்லாமல், பற்றில்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று கீதையில் சொல்லப்படுகிறது
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.